குமார் ரங்கசாமி ஆகிய நான்
Posted on August 7, 2021 • 3 minutes • 521 words • Other languages: English
நான், குமரேசன். சுருக்கமாக குமார். அப்பா பெயர் ரங்கசாமி. அம்மா ராஜலட்சுமி. நான் பிறந்தது உடுமலைப்பேட்டைக்கும் திருப்பூர்க்கும் இடையில் உள்ள பெரியகுமாரபாளையம் என்ற ஒரு சின்ன கிராமம். அது என் அம்மாவின் சொந்த ஊர்.
இந்த ஊரில் 1981 இல் முதன் முதலில் என் அப்பா ஒரு பள்ளி தொடங்கினார், என் தம்பியின் பெயரில் (அருள் நர்சரி) ஐந்தாம் வகுப்பு வரை நடந்த பள்ளி.
மொத்தம் ஒரு 100 பேர் படித்த எங்கள் பள்ளியில், தங்கும் வசதியும் இருந்தது. சுமார் 20 பேர் இங்கே தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். 3 ஆசிரியைகள் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார்கள். எனவே இது ஒரு பெரிய கூட்டு குடும்பம் போல இருந்தது. இந்த அனுபவங்கள் இப்போதும் கூட உதவுகிறது. எத்தனை பேர் இருக்கும் இடத்திலும் எந்த தயக்கமும் இல்லாமல் பிறருடன் உரையாடவும், புது நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும் என்னால் முடிகிறது. எங்கள் வீட்டில் நான், என் அக்கா மற்றும் என் தம்பி எல்லோருக்கும் எங்கள் பள்ளியில் தான் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பு.
பிறகு உயர்நிலைப் படிப்பிற்கும், மேல்நிலை வகுப்பிற்கும் உடுமலைபேட்டையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி க்கு போனேன். பள்ளி என்பது நம் ஆளுமையை உருவாக்கும் முதல் இடம். நம் பலம் மற்றும் பலவீனம் போன்றவற்றை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் தருணங்கள். ஆறு வருடங்கள் இந்தப் பள்ளியில் தான். சமூகம் உயர்த்தியும் தாழ்த்தியும் பிடிக்கும் வேலை, வசதி, தொழில், வெற்றி இப்படியான அடையாளச் சிக்கல்களுக்குள் நாம் போய் மாட்டிக் கொள்ளும் முன்னர் நாம் சுதந்திரமாக இருக்கும் இடம் தான் பள்ளி. என் பள்ளிக் காலத்தில் நடந்த விஷயங்களை இன்றைக்கு நினைத்துப் பார்த்தால், அது எவ்வளவு தூரம் என்னை பண்படுத்தி இருக்கிறது என்பது மலைப்பாக இருக்கிறது. அன்று சட்டெனக் கடந்து சென்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஆழமாகவும் நுணுக்கமாகவும் கண் முன் கொண்டு வந்து நிறுத்திப் பார்க்கும் போது ஓராயிரம் கதைகள் புதைந்து கிடக்கின்றன. அந்த நினைவுத் தோண்டல் என்பது மிகச் சுவாரஸ்யமான விஷயமாக எனக்கு இருக்கிறது.
அதன் பின் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் இல் பொறியியல் படிப்பு. 1999 இல் அதை முடித்த பின் ஒரு வருடம் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தேன். பிறகு மென்பொருள் துறைக்கு வந்து, கோவை, பெங்களூர் என்று சுற்றி 2007 இல் இருந்து கலிபோர்னியா இல் வசிக்கிறேன். மனைவி, வடிவுக்கரசி. அவரின் சொந்த ஊர் அவிநாசி. எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன், மகன் அக்க்ஷத். இளையவள், மகள் யுதிக்க்ஷா.
நான் பார்த்த முதல் தொழில் முனைவர் என் அப்பா. என் எண்ணங்களையும், கனவுகளையும் இன்றும் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே இருக்க முதல் விதையை நட்டவர். பல படி நிலைகளைக் கொண்டது எனக்கும் என் தந்தைக்குமான உறவு என்பது. மிகச் சிறந்த மனிதர்களை அறிமுகப்படுத்தி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். பின்நாளில், எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. சில நேரங்களில் கடுமையானதாகவும். அதையெல்லாம் தாண்டி, என் ஆதர்ச கதாநாயகர்களில் என் அப்பாவும் ஒருவர்.
சில வருடங்கள் நோய்வாய்ப்பட்டு, பின், 2004 இல் அம்மா மறைந்தார். 2015 இல் ஒரு விபத்தில் அப்பா மறைந்தார். என் தம்பி 2017 திடீரெனெ ஒரு காய்ச்சலால் மறைந்தான். அணுக்கமானவர்களின் இழப்பு என்பது ஒரு பெரும் சுமை.இதுவரையிலான என வாழ்வனுபவங்கள் என்பது ஒரு பெண்டுலம் போல. மகிழ்வும் துயரமும் மாறி மாறி. திரும்பிப் பார்க்கையில் இந்த அனுபவங்கள் போல மிகப் பெரிய ஒரு செல்வம் வேறில்லை என்று தோன்றுகிறது. யாராலும் திருடிக் கொள்ள முடியாத, அலிபாபா குகைக்குள் செல்ல ஏற்படுத்தப்பட்ட மாயாஜால ரகசிய குறியீடு போல, நான் மட்டுமே சென்று எடுத்துக் கொள்ளக் கூடிய, என் உணர்வு இடுக்குகள் உள் இருக்கும் இந்த அனுபவங்கள். எண்ணும் போதெல்லாம் பெருகும் செல்வம் இது.வழங்கும் போதிலும் நிறைவு கொள்ளச் செய்யும் செல்வம்.புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், மனிதர்களைப் படிக்கவும் எப்பவுமே எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எத்தனையோ விஷயங்களை, நான் சந்தித்த மனிதர்களும், இணையத்திலும், சில நேரங்களில் அறிமுகம் இல்லாத, மற்றும் முகம் தெரியாத மனிதர்கள் பகிர்ந்து கொண்டதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதேபோல என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் எழுத விரும்பினேன்.
என் கருத்துருவாக்கம் என்பது முற்றிலும் என் அனுபவங்கள் சார்ந்ததும், நான் படித்து அறிந்து கொண்ட கதைகள், வாழ்வியல் இலக்கியங்கள் மூலமாக நான் உணர்ந்து கொண்டதும். அந்த அனுபவங்கள் மூலம் நான் வளர்த்திருக்கும் நம்பிக்கைகள் சார்ந்தது. உங்கள் அபிப்ராயங்கள் முற்றிலும் வேறாக இருக்கலாம். நான் முக்கியமாகக் கற்றுக் கொண்ட ஒரு விஷயம், “மாறுபடுவதற்கு உடன்படுதல்” என்ற நிலைப்பாடு என்பது.
என் அனுபவங்கள் யாருக்காவது ஒரு சிறு பயனைக் கொடுக்கும் என்றால், நன்று.
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: kumareshind@gmail.com .