யானையா ? குண்டூசியா ?
Posted on June 5, 2015 • 2 minutes • 338 words
நாம் நம் பணம் மற்றும் பொருட்களை எப்படி நிர்வாகம் (Money and material management) செய்கிறோம் என்பதைப் பொறுத்து, திடீரென வரும் தேவைகளை சமாளிக்கும் வாய்ப்புகளும், சமாளிக்கத் திணறும் போது அதனால் ஏற்படும் மன அழுத்தமும் மாறுபடும். வாழ்க்கைத் தரம் என்பதை பணம் மட்டுமே நிர்ணயிப்பது இல்லை என்றாலும், பணம் ஒரு இன்றியமையாத விஷயம்.
துரதிர்ஷ்டவசமாக, இதைப் பற்றி ஒரு planned teaching இருப்பதில்லை. பள்ளிகளில் இதைப் பற்றி எனக்கு சொல்லிக் கொடுத்ததில்லை. இப்போது கூட இதைச் சொல்லிக் கொடுப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவங்கள் வழியாகத் தான் கற்றுக் கொள்கிறார்கள். தங்களுக்கென்ற தனித்துவமான கருத்தாக்கங்களை (Individuality / Personal Perceptions) உருவாக்கிக் கொள்ளாதவர்களுக்கும், அதற்கான சந்தர்ப்பங்கள் அமையப் பெறாதவர்களுக்கும், அவர்கள் அதிகமாக பார்த்து வளர்ந்த விதம் தான் அவர்கள் வழியும். உதாரணமாக, பெற்றோர்கள் சரியாக பணத்தை நிர்வகிக்காமல் இருந்திருந்தால், பிள்ளைகளும் அப்படியே ஆகி விடுகிறார்கள்.
குடி, சூதாட்டம் போன்ற விஷயங்களில் பணத்தை விரயம் செய்வதென்பது ஒரு extreme case. அதைப் பற்றி இங்கே பேசவில்லை. அதை விடுத்து, நம் இயல்பான செலவுகளின் வழியே கூட நாம் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். “Impulse buying” என்பது இன்றைக்கு பெரும்பாலானவர்களிடம் நாம் பார்க்கும் ஒரு விஷயம். இது பெரும்பாலும் வரவுக்கு மீறிய செலவுகளில் நம்மைத் தள்ளி விடும். நானும் அப்படி ஒரு “impulse buyer” ஆக இருந்து, பிறகு மாறியவன் தான்.
இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, ஒரு நண்பர் சொன்ன விஷயம்.
—
எங்க அப்பா பணத்த ரொம்ப சிக்கனமா செலவு செய்யறவர். அவர் இதப் பத்தி எங்களுக்கு எளிமையா சொல்லிக் கொடுத்தார். என்னென்னா :
தேவையாயிருந்தா யானை கூட வாங்கு. தேவையில்லென்னா குண்டூசி கூட வாங்காத..
—
மேலோட்டமாகப் பார்த்தால், இது common sense தானே. வேணுங்கறத தானே வாங்கப் போறோம் என்று தோன்றும். இதில் சிக்கலான விஷயமே, தேவை எது, தேவையில்லாதது எது என்பதைப் பற்றிய தெளிவு தான்.
அந்த தெளிவு ஓரிரு நாட்களில் வருவது அல்ல. அது ஒரு தொடர் முயற்சி. ஆனால், ஒவ்வொரு முறை நாம் செலவு செய்யும் போதும், “இது யானையா? குண்டூசியா?” என்ற எண்ணம் நம் மனதில் எழுந்தாலே, அது முதல் வெற்றி. முதலில் நம் மனது அதற்குப் பழக வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு முறையும் நாம் இந்த கேள்விக்கு நமக்கே பதில் சொல்லிக் கொள்ளும் போது தெரியும்.. நாம் தெரிந்தே தவறு செய்கிறோமா அல்லது நமக்கு இன்னும் அந்த தெளிவு வரவில்லையா என்று.
ஒருவேளை, முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால், இந்த முறையை கூட உபயோகப்படுத்தலாம்.
நாம் செலவழிக்கும் விஷயம் கீழ் கண்ட வரிசையில் எந்த இடத்தில வருகிறது என்று பார்த்து அதைப் பொறுத்து இப்போது இது தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யலாம்.
சேமிப்பு -> குடும்பம் -> கல்வி / மருத்துவம் -> சுய முன்னேற்றம் -> நட்பு -> வசதி (Convenience) -> உதவி / கொடை -> சமுதாய நிர்பந்தம்
அடுத்த முறை செலவு செய்யும் போது, மறக்காமல் மனதில் கேட்டுக் கொள்ளுங்கள் – “இது யானையா? குண்டூசியா?” என்று.
Photo by Andre Taissin on Unsplash