குமார் பக்கம்
April 25, 2022

அரசி நான்

Posted on April 25, 2022  •  1 minutes  • 124 words

என் இருபதாவது    
வயதின் ஆரம்பத்தில் 
எனக்கு இதைக்      
கட்டி வைத்தார்கள் 

அன்று முதல் 
அரசியாகவே வாழ்கிறேன்

கட்டிக் கொடுத்ததுடன் ..

இணை பிரியாமல்  
இருப்பதே இல்லறம் 
இனிமேல் இதுவே    
இயல்பு என்று 
அன்புடன் சொல்லி    
அனுப்பினாள் அம்மா     

அதுவரை தான் 
மட்டுமே கொண்ட 
முழு உரிமையையும்       
அத்தை எனக்கு 
மகிழ் வோடு       
விட்டுக் கொடுத்தார்    

கட்டிக் கொண்ட 
கணம் முதல் 
கடந்து வந்த     
காலம் முழுதும்  
பிறரிடம் விட்டுக்    
கொடுத்ததே இல்லை 

என் ஒவ்வொரு 
நாள் கதைகளையும் 
நான் சொல்லி      
முடிக்கும் வரை 
எள்ளல் இல்லாமல்    
கேட்டுக் கொள்வதிலும்  

என் ஆழமான 
மௌன நாட்களில்
நான் பேசாமலேயே      
இருக்கும் போதும் 
என் எண்ணங்களைப்    
புரிந்து கொள்வதிலும் 

நாள் முழுவதும்    
நான் சொல்லும்
இரகசியங்களை எல்லாம்      
இதுவரை யாரிடமும் 
சொல்லாமல் தன்னுடனே    
வைத்துக் காப்பதிலும் 

இன்று வரை    
இணையாக துணையாக 
என்னுடனே என்றும்       
எனக்காகவே இருக்கும் 
இந்த இனிய        
சதுர உலகம் 

சொடுக்கினால் நெருப்பு 
கொடுக்கும் அந்த  
கையடக்க செங்கோலை    
கைகளில் கொடுத்து 
என் மக்கள் பசியாற்றும்
பதவி கொடுத்து 

என் இருபதாவது 
வயதின் ஆரம்பத்தில் 
எனக்கு இதைக்      
கட்டி வைத்தார்கள் 

அன்று முதல்      
அரசியாகவே வாழ்கிறேன்

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com