குமார் பக்கம்
July 6, 2021

கூர்முனை – சிறுகதை

Posted on July 6, 2021  •  13 minutes  • 2570 words

டாக்டர் ஆர் என்று தான் என்னை எல்லோரும் அழைப்பது வழக்கம்.

இதோ இப்போது நான்சி வந்து கூப்பிடும் வரை இந்த ஒரு மணி நேரமாக என் உடல் நடுங்க ஒடுங்கி என் அறையில் அமர்ந்திருக்கும் என்னை, “டாக்டர். ஆர், ஒரு காஃபி கொண்டு வரட்டுமா? பெட்டரா பீல் பண்ணுவீங்க ன்னு நினைக்கிறேன்” என்று அவள் கேட்டபோது ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தேன்.

“எனக்கு தெரியும், உங்களுக்கு தேவை என்று. சரி, நான் போய் கொண்டு வரேன்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

இந்த நாள் நான் எதிர்பார்க்காத ஒரு நாள். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. இதய அறுவை சிகிச்சை நிபுணராக நான் தொடங்கியதில் இருந்து, இன்று வரை, என் 17 வருட அனுபவத்தில், இதுவரை ஒரு அறுவை சிகிச்சை கூட தவறாகப் போனதில்லை. அதுவும் உயிர் போகும் அளவு? எப்படி தவறு நடந்தது? இவ்வளவு தயாரிப்புகள் இருந்தும், இவ்வளவு எளிதான அறுவை சிகிச்சையாக இருந்தும், எப்படி இந்தத் தவறு நடந்தது? எங்கே இடறினேன்? ஏன்? மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தாலும் எங்கே தவறு நடந்தது என்று பிடி பட மாட்டேன் என்கிறது.

மணி என்ன என்று பார்த்தேன். சாயங்காலம் ஆறு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது.  எனக்கே திகைப்பாக இருந்தது. ஒரு மணி நேரமாக இப்படியேவா அமர்ந்திருக்கிறேன். நானே போய் ஒரு காஃபி எடுத்திருந்திருக்கலாம். அல்லது வீட்டுக்கு கிளம்பி போய் இருக்கலாம்.

நான்சி வந்து விட்டிருந்தாள். கையில் சூடான எப்போதும் நான் எடுத்துக் கொள்ளும் பிளாக் காஃபி. சர்க்கரை பால் எதுவும் சேர்த்துக் கொள்வதில்லை. அவளுக்கு நன்றாகவே தெரியும்.

காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை என்பதாலும், இந்த பதட்டத்திலும், எல்லாம் சேர்ந்து  முற்றிலும் உணர்விழந்தவனாகத் தோன்றியது. இரண்டு மிடறு விழுங்கியதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நடுக்கம் குறைந்தது.

“உட்கார்” என்றேன். என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

ஒரு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சில முக்கியமான தருணங்களில் தேவையான அளவு அவளே உரிமை எடுத்துக் கொள்வாள். என் மகள் வயது அவளுக்கு. தெளிவான திருத்தமான மற்றும் சாந்தமான முகம். ஒரு நர்ஸுக்கு தேவையான கனிவும் சில நேரங்களில் கண்டிப்பும் கொண்டவள். பார்க்க ஒடிசலாக, சின்னப் பெண்ணாக இருக்கும் இவள் சில நேரங்களில் எப்படி அத்தனை ஆற்றலும் தைரியமும் கொண்டவளாக மாறிப் போகிறாள் என்பது எனக்கே புரிவதில்லை. நான் பணிபுரியும் மருத்துவமனையில் இவள் என் துறையில் வேலைக்குச் சேர்ந்து ஒரு பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான மிகுந்த வேலைப்பளு உள்ள நாட்களில், சில விஷயங்களை தன்னுடைய வேலையே இல்லை என்றாலும், என் வேலைகளை எளிதாக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு உதவி புரிவாள்.  வந்த சில மாதங்களிலேயே அவள் இந்தப் பணியின் மீது காட்டும் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. பின் நாளாக நாளாக பரிவும் பாசமும் சேர்ந்து கொண்டது. சக மருத்துவர்களே என்னிடம் கேட்கத் தயங்கும் விஷயங்களை உரிமையாகக் கேட்பவள்.

“அதுக்கப்பறம் என்ன ஆச்சுது?” என்றேன் அவளிடம்.

“டீன் சார் அவங்க பேமிலி கிட்ட பேசினார். பேஷண்ட்டோட மனைவிய எதுவும் சொல்லி தேத்த முடியல சார். ஆனாலும் உங்க மேல மரியாதை குறையாமல் தான் பேசினாங்க. எல்லோரையும் டீன் சார் அவர் ரூம்க்கு கூட்டிட்டு போயிட்டார். நம்ம ஹாஸ்பிடல் எல்லா வித ஒத்துழைப்பும் கொடுக்கும் அப்படீன்னு சொல்லி இருக்கார்னு பிறகு அவங்க பேமிலில ஒருத்தர் கேண்டீன்ல பார்த்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னார். அவங்களும் கேஸ் எல்லாம் கொடுக்க வேண்டாம்னு முடிவு எடுத்துட்டாங்க போல இருக்கு.”

கண்களை மூடி மீண்டும் கொஞ்சம் அருந்தினேன். டீன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “ராம் (இந்த மருத்துவமனையிலேயே என்னை அப்படிக் கூப்பிடும் இரண்டு பேரில் அவரும் ஒருவர்), நீங்க ஒர்ரி பண்ண வேண்டாம். யெஸ், இட் இஸ் வெரி அன்பார்ச்சுநேட். எனக்கு உங்களைப் பற்றி நல்லாத் தெரியும். யு ஹவ் சச் எ கிளீன் ரெகார்ட். இதை நான் முழுதும் என் பொறுப்பில் எடுத்துக்கறேன். என்ன வந்தாலும் நான் பார்த்துக்கறேன். இப்ப நீங்க இங்க இருக்க வேண்டாம். வீட்டுக்குப் போங்க. நாளைக்கு பேசிக்கலாம். ஏதாவது வேணும்னா நான் கூப்பிடுறேன்.” 

“நான்சி, டீன் எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க னு சொல்லிட்டார். சே, என்ன ஒரு மனுஷன். சக்ஸஸ் வந்தா அவங்க எடுத்துட்டு பிரச்சனை வந்தா நம்ம தலைல போடும் மேனேஜ்மென்ட் மத்தில, மொத்தத்தையும் தன் பொறுப்புல எடுத்துகிட்டார். கிரேட்.”

“இதில் என்ன சார் இருக்கு, அது தானே அவர் வேலை?” என்ற அவளின் பதில் நான் ஓரளவிற்கு எதிர்பார்த்ததுதான். மிகை உணர்வுகளின்றி, எதார்த்தமாக அணுகக் கூடிய பெண் அவள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். 

அதைக் கண்டுகொள்ளாதவனாக என் தவிப்பை அவளுக்கு விளக்க முற்பட்டேன். 

“என் கைகளைப் பார். எத்தனை அறுவை சிகிச்சைகள் செய்யும் போது என்னுடன் இருந்திருக்கிறாய். என்றாவது இப்படி நடுங்கி இருக்கிறதா? இப்போது பார். ஏன்? ஏன் என்றால், நான் எதையோ இழந்தது போல இருக்கிறது. மருத்துவ உலகில் இது இயல்பு என்று என் தர்க்க மனம் சொல்கிறது. ஆனால், என் உள் மனம் வேறு ஒன்றைச் சொல்ல முற்படுகிறது. என்னவென்று  தெரியவில்லை.
ஆபரேஷன் தியேட்டர் க்கு போறதுக்கு முன்னாடி பேஷண்ட் என்கிட்ட சொன்னார். சார், என் பொண்ணு இப்போதான் பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கறா. அவ ஒரு ட்யூஷன் போகணும்னா கூட நான் தான் கூட்டிட்டுப் போவேன். எல்லாத்துக்கும் நான் பக்கத்துல இருக்கனும். இன்னும் ஒரு மாசத்துல பரீட்சை. இப்ப போய் இப்படி நான் இங்கே வந்து படுத்துட்டா அவளுக்கு எப்படி இருக்கும்? ஒரு வாரத்துல வீட்டுக்கு போயிடலாமில்ல சார்… அப்படீன்னு கேட்டார். அந்த முகமும் தவிப்பும் என் கண்ணெ விட்டுப் போகவே மாட்டேங்குது”

“புரியுது சார்”. ஏதோ சொல்ல வந்து பிறகு அமைதி ஆகிவிட்டாள்.

மீதமுள்ள காபியையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தேன்.

அவளின் அலைபேசியின் அலாரம் அடித்தது. மணி பார்த்ததும், நான்சி எழுந்து கொண்டாள். “சார், இப்போ நீங்க வீட்டுக்குப் போங்க. நானும் போய் என் மகனை அவன் ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ணனும். பேசாம ஹாஸ்பிடல் டிரைவர கூட்டிக்கோங்க. நீங்க டிரைவ் பண்ண வேண்டாம். நாளைக்கு நாம இதைப் பத்தி விவரமா பேசலாம். சரியா?”

எனக்கும் சரியென்று பட்டது. “ம் .. ஓகே”

“நான்சி” என்றதும் நின்று திருப்பிப் பார்த்தாள்.

“தேங்க்ஸ். பித்துப் பிடித்த மாதிரி ஒரு மணி நேரம் இங்கேயே இருந்தேன். இந்த தருணத்திற்காக உனக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்”.

“டேக் கேர், சார்”

ஒரு சிறு புன்னகையுடன் சென்று விட்டாள்.

***
வீடு வந்து சேரும் போது, மணி 7 ஐ நெருங்கி கொண்டிருந்தது. நான் பொதுவாக வீடு திரும்ப மணி 9:30 – 10 ஆகி விடும்.

உள்ளே நுழைந்ததும், மனைவி என்னைப் பார்த்ததும், “என்னங்க, இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்தாச்சு?” என்றபடியே வந்தாள். 

என் வீட்டு வரவேற்பறையில் உள்ள சோஃபாவில் அப்படியே அமர்ந்து கொண்டேன். மனைவி என்னிடம் வந்து, “இஸ் எவெரிதிங் ஆல் ரைட்? எனி ப்ராப்ளம்?” என்று கனிந்த குரலில் கேட்டாள்.

அவளை ஒரு சில வினாடிகள் பார்த்து விட்டு, “ம்.. யா, ஒண்ணுமில்ல. சம் திங் இன் மைண்ட்”
“இல்ல, வந்ததும் நேரா போய் குளிச்சுட்டு  தான் வந்து எந்த வேலையா இருந்தாலும் பார்ப்பீங்க. இன்னைக்கு எதோ புதுசா இருக்கு” என்றதும் தான் எனக்குப் புரிந்தது.

என் வேலையின் கனத்தையும் புகழ்களையம் நான் வீட்டுக்கு எடுத்து வருவதில்லை. அதே போல, வீட்டில் உள்ள எந்த சிக்கல்களையும் முடிந்த அளவிற்கு என் அறுவை சிகிச்சை அறையின் வெளியில் விட்டுச் செல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள், மிகப் பெரிய சாதனையாக அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து விட்டு மொத்த மருத்துவமனையும் என்னை பெருமிதத்தோடும் புகழ்ந்தும் தூக்கி வைத்துக் கொண்டாடிய நிகழ்வுக்குப் பின், வீட்டிற்கு வந்த போது, என் மனைவி, “ஏங்க, இன்னைக்கு குக் பண்ண லேட் ஆயிடிச்சு. இப்போ தான் ஆரம்பிக்கிறேன். குளிச்சுட்டு வந்து பிறகு கொஞ்சம் இந்த வெஜிடபிள்ஸ் கட் பண்ணிக் கொடுங்களேன்” என்றாள். இப்படி பல நிகழ்வுகள் உண்டு. இந்த விடுதலை உணர்வு என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மருத்துவமனையில் மிகக் கண்டிப்பான மற்றும் தீவிரமான பாங்குடன் உலா வரும் ஆணைகள் இடும் இடத்தில் உள்ள ஒரு சாதனையாளன். வீட்டுக்கு வந்து விட்டால், எந்த அடைமொழிகளும் இல்லாத சாதாரண மற்றும் முழுமையான குடும்ப அங்கத்தினன். இந்த விலக்கம் என்பது அவ்வளவு எளிதல்ல. அம்மா சொல்லிக் கொடுத்தது இது.

இன்றைக்கு என்னால் அப்படி ஒரு நிலையில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், எதுவாக இருந்தாலும், அதைக் கடந்து தான் ஆக வேண்டும்.

குளியலறை செல்ல எழுந்தேன். “அம்மா என்ன செய்றாங்க?”

“அவங்க இப்போ தான் சாப்பிட்டாங்க. அவங்க ரூம்ல டிவி பார்த்திட்டு இருப்பாங்க”

***

இளஞ்சூடான தண்ணீர் தலையில் இறங்கியதும் ஒரு சிலிர்ப்பு உடலில்.

அம்மாவிடம் போய் இன்றைக்கு நடந்ததைச் சொல்ல வேண்டும். என் எல்லாத் துயரக் கணங்களுக்கும் அவர் தான் வடிகால். குறிப்பாக என் துறையில் உள்ள சிக்கல்களை புரிந்து கொள்ளவும் வென்று மேழெலவும் அவரைப் போல் பிறிதொருவரிடம் நான் கற்றுக் கொண்டதில்லை. சில நேரங்களில் என் தவறுகளை, ஆன்மாவைச் சுடும் நேர்மையுடன் சுரீரென்று ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்ட அவர்  தயங்கியதே இல்லை.

பழைய நினைவுகள் மனதில் மேல் எழும்பி வந்தது.

அம்மா.. ராஜம் நாராயணன். இப்போது 86 வயது. பல சாதனைகளை நிகழ்த்திய மகப்பேறு மருத்துவர். என் அப்பாவின் குடும்பத்திலும் அம்மாவின் குடும்பத்திலும் அதற்கு முன்னர் யாரும் மருத்துவராக இருந்ததில்லை. முதல் தலைமுறை மருத்துவர். உழைப்பு, இல்லை இல்லை வெறி கொண்ட உழைப்பு என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரின் 29 ஆவது வயதில் நான் பிறந்தேன். அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். அரசுப் பள்ளியில் பணி. பதட்டமில்லாதவர். இருவரும் வீட்டை எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். வீடும் பள்ளியும் தான் அப்பாவுக்கு உலகம். பெரிய அளவில் நண்பர்கள் வட்டம் என்பது இல்லை அவருக்கு. என்னை பள்ளிக்கு கொண்டு வந்து விடுவதில் இருந்து என்னை வீட்டில் பார்த்துக் கொள்வது வரை எல்லாமே எனக்கு அப்பா தான். நிறைய கதைகள் சொல்வார். வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. புத்தகங்களாகப் படி என்று சொல்வார். ஆறாம் வகுப்பு வரை எனக்கு அவரும் அவருக்கு நானும் தான் துணை. என் ஆறாம் வகுப்பில் இருந்து எனக்கு நண்பர்கள் அதிகம் ஆயினர். பள்ளி விட்டு வந்தவுடன் நேராக வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்குப் போய் விடுவேன். மீண்டும் வீட்டுக்கு வர மணி 9 ஆனாலும் ஆகும். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக அவரைப் பணி நீக்கம் செய்தது அன்றைய அரசு. அதில் இருந்து நீதிமன்றம், வழக்கு என்று அவரின் வாழ்வு ஒரு தொய்வான பாதையை நோக்கிச் சென்றது. அந்தக் காலகட்டம், அம்மா மருத்துவராக சாதனைகளின் உச்சம் தொட்ட வருடங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கூட உழைத்துக் கொண்டிருந்தார். மாதக்கணக்கில் வேலையும் இன்றி பெரும்பாலான நேரங்களில் நாங்களும் வீட்டில் இன்றி, அப்பா தனிமை எனும் இருட்டில் இருந்தார். எப்போது எங்கள் இருவரின் அருகாமையும் அப்பாவுக்கு தேவையாக இருந்ததோ, அப்போது அது அவருக்குக் கிடைக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, தலைமை ஆசிரியரிடம் இருந்து அழைப்பு வந்தது. பக்கத்து வீட்டு அத்தை என்னைக் கூட்டிப் போகக் காத்திருந்தார். வீட்டுக்கு வந்தபோது, வேறொரு உலகம் காத்திருந்தது. பக்கத்து வீட்டு மாமா அப்பா வீட்டில் தூக்கில் தொங்கியிருப்பதைப் பார்த்து கீழே இறக்கிப் பார்க்கும் போது, அப்பா உயிர் விட்டிருந்தார். அந்த முகம் இன்றும் நினைவில் உள்ளது. அவரை படுக்க வைத்திருந்த பழைய நிலையில் இன்றைக்கு இறந்து போன பேஷண்ட் முகம் பொருந்தி ஒரு முறை உடல் நடுங்கியது. 

சட்டென்று குளிர்ந்த நீர் ஷவரில் வரவும் உடல் விதிர்த்துக் கொண்டது. நினைவுகளில் இருந்து மீண்டேன்.

வெளியில் வந்த போது, மனைவி “ஆப்பம் செஞ்சிருக்கேன். சூடா இருக்கறப்பவே சாப்பிட்டுடுங்க” என்றாள்.

“அம்மா கிட்டே கொஞ்சம் பேசணும் டியர். உனக்கு பசிச்சா நீ சாப்பிடு. நான் வரேன்”

“சரி, நீங்களும் வாங்க. நான் வெயிட் பண்றேன்”

அம்மா பிள்ளை உரையாடல்களில் அவள் தலையிடுவதே இல்லை.

***
அம்மா எப்போதும் படிக்க உட்காரும் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். நான் மெதுவாக உள்ளே நுழைந்தேன். கதவுக்கு எதிர்புறம் பார்த்து அமர்ந்திருந்தாலும், எந்த சத்தமும் இல்லை என்றாலும், நான் உள்ளே நுழைவதை கண்டு கொள்வார். இந்த முறையும் அப்படிதான்.

“வாடா ராம்”

அருகில் போய் மற்றொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக கைகளை பற்றிக் கொண்டேன்.

“என்னம்மா, இன்றைய பொழுது எப்படிப் போனது?”

ஒரு மென் புன்னகையுடன் என் தலையை தடவிக் கொடுத்தார்.

“நல்ல நாள். கொஞ்ச நேரம் முன்னால தான் சாப்பிட்டேன். என் மருமக சூப்பரா தேங்காய் பால் சேர்த்து ஆப்பம் செஞ்சு கொடுத்தா. மகி (என் மகள், அருகில் தான் வசிக்கிறாள்) ரெண்டு வாலுங்களையும் கூட்டிட்டு  வந்திருந்தா. நேரம் போனதே தெரியல. பாரு, இப்போ எனக்கு பிடிச்ச புத்தகத்துடன் இந்த நாளை நிறைவு செய்யப் போறேன்.”

வயதானாலும், அம்மாவின் குரலின் வசீகரம் இன்னும் குறையவே இல்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தேன். சம்பந்தமில்லாமல் எதோ பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புரிந்தது. எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. என்ன எதிர்பார்க்கிறேன் நான்? தெரியவில்லை..

நான் சில வினாடிகள் பேசியதை நிறுத்தியதும், என் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கேட்டார்.

“இன்னைக்கு உன்னிடம் இருக்கும் வழக்கமான சிரிப்பும் உற்சாகமும் இல்லையே. ஆர் யு ஓகே?”

மனதைப் படிப்பதில் அம்மா ஒரு கைதேர்ந்த மந்திரவாதி. அது ஒரு நல்ல மருத்துவர் வளர்த்துக் கொள்ளும் நுண்ணுணர்வு. அதுவும் மகப்பேறு மருத்துவர். கர்பவதிகளையம், உணர்வுகளை வார்த்தைகள் மூலம் சொல்லத் தெரியாத குழந்தைகளையும் பல வருடங்கள் பார்த்தவர் ஆயிற்றே.

அதற்கு மேல் தாங்கவில்லை. நடந்தது அனைத்தையும் கொட்டித் தீர்த்தேன். அவருக்கும் தெரியும், நான் மனதால் தடுமாறுகிறேன் என்று. இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தடுமாற்றம். இந்த முறை, என் குரலின் பதற்றமும் தடுமாற்றமும் எளிதாக என் மனநிலையை, இதுவரை இல்லாத அளவு ஒரு அலைக்கழிப்பு என் மனதில் என்ற விஷயத்தை அவருக்குச் சொன்னது போலும்.

மெதுவாக புத்தகத்தை மூடி வைத்தார். தன் கண்ணாடியைக் கழற்றி மடித்து வைத்துக் கொண்டார். சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை. பின் மௌனம் கலைந்து..

“அவர் உன்னோட ரெகுலர் பேஷண்டோ?”

“ஒரு மூணு மாசமா தாம்மா பாக்கறேன்”

“இறைவா ..” கைகளைக் குவித்து கும்பிட்டபடி கண்களை மூடி சில வினாடிகள் இருந்தார்.

“எனக்கு எங்கே தப்பு நடந்ததுன்னு தெரியல மா. நான் திரும்ப திரும்ப யோசிச்சி பார்க்கறேன். கண்டுபிடிக்க முடியல. ஐ பீல் கில்ட்டி.”

சில நிமிடங்கள் மௌனம்.

“ம்… ராம், நல்லா நிதானமா யோசி. நீ எனக்கு பதில் சொல்லணும்னு இல்ல. இப்போ.. உனக்கு, ஒரு உயிர் போயிடுச்சு ங்கற கவலையா? இல்ல, உன் பெயரும் உன் நன்மதிப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது ங்கற பதட்டமா? இதில் எது உன்ன அதிகமா நிலை குலைய வைக்கிறது?”

நான் சொல்லவில்லை. என்னை முள்ளின் மேல் நிறுத்துவார் என்று. இதோ, முதல் கணை. இந்தக் கேள்விக்கு பதில் தேட எத்தனிக்கும் போதே, என் மனது, இதன் அபாயங்களை எனக்குச் சொல்லியது. நான் பதிலைக் கண்டடையும் போது, என்னைப் பற்றிய என் மதீப்பீடும் பிம்பமும் கூட உடைந்து போகலாம். அதை எதிர்கொள்ளும் வலிமை எனக்கு உண்டா?

என் பதிலுக்கு எதிர்பாராமல், அம்மா மேற்கொண்டு பேசத் தொடங்கினார்.

“நான் ஒரு கைராசியான கைனகாலஜிஸ்ட் என்று பெயர் எடுத்திருந்த நேரம். நான் ப்ராக்டிஸ் ஆரம்பிச்சு ஒரு 10 – 12 வருடங்கள் இருக்கும். சாரதான்னு ஒரு பேஷண்ட். என்னால இன்னைக்கும் மறக்க முடியாத ஒரு  பெயர். என் கண்ணைத் திறந்த சாரதாம்பாள் தானே அவள்? எப்படி மறக்கறது? அவளுக்கு பெத்தவங்க சின்ன வயசிலேயே தவறிட்டாங்க. மாமா தான் வளர்த்திருக்கார். அவரும் ஒரு நிலையில ஒரு ஆதரவற்றோர் நிலையத்தில சேர்த்துட்டார். அங்கே படிக்க உதவி செய்வாங்க அப்படீன்னு. இவ வேலைக்கு போகும் போது பார்த்து இவள் கணவனுக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்துட்டாங்க. மாமியாருக்கு ஆரம்பத்தில் இருந்தே இவளை அதிகமாக பிடித்ததில்லை. பத்து வருடமாக குழந்தையில்லை அப்படிங்கற நிலைமையில என் கிட்ட வந்தாங்க. அவங்க மாமியார் அவ கணவனுக்கு இன்னொரு பெண் பார்க்க வாய்ப்பிருப்பதாக சொன்னாள்.  அவள் கணவன் ரொம்ப அன்பானவன். இருவரையும் அழைத்துப் பேசினேன். அவள் கணவன் சொன்னான். மேடம், எனக்கு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கக் கூட சம்மதம் தான். யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. இவ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், என்றான். ஆனா, அவ உறுதியா இருந்தா. அவ மாமியார் முன்னால தான் ஒரு குழந்தையை பெத்துக்கணும் என்ற வைராக்கியம். எனக்கு மருத்துவாரா அந்த சவால் பிடிச்சிருந்தது. இருந்தாலும் நான் எதுவும் சொல்லல. முதல்ல, சில டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தேன். மூணு மாச போராட்டத்துக்குப் பிறகு, அவளுக்கு என்ன பிரச்சனை அப்படீங்கறது எனக்குப் புரிஞ்சது. அது ஒரு ரேர் டிஸார்டர். அவள் ரத்தம் எளிதில் உறையக் கூடிய தன்மை உடையது. அவள் கருவுறும் போது ஒரு கட்டத்தில் ப்ளஸ்ண்டா ல ரத்தம் உறைந்து போய், குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காம குழந்தை தங்குவதில்லை. எப்படி மற்ற மருத்துவர்கள் இதை கவனிக்காம விட்டாங்கனு தெரியல. இது தெரிந்ததும், நான் முதலில் டெல்லி ல அப்ப இருந்த என் சீனியர் கிட்ட டிஸ்கஸ் செஞ்சேன். ஷீனா தாமஸ் னு பேர். அவங்க கிட்ட தான் நான் சில வருஷம் ரெசிடென்சி பார்த்தேன். ரொம்ப திறமையானவங்க. அவங்க சில ஆலோசனைகள் சொன்னாங்க. அடிப்படையா பிளட் தின்னெர் மருந்துகளே போதும். அதற்கும் மேலா, அப்போ சில விஷேஷ மருந்துகள் இதுக்கு வந்திட்டு இருந்தது. இதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்தேன். சரியாக ஐந்து மாதத்தில் கருவுற்றாள். முதல் முறையாக ஆறு ஆரோக்கியமான மாதங்கள் தாண்டி கரு வயிற்றில் வளர்வதைப் பற்றி அவள் அடைந்த ஆனந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாது, ராம்.”
மீண்டும் சில வினாடிகள் மௌனம். அந்தக் கணத்தை நினைவு கூர்ந்து மனதில் நிறுத்திக் கொள்கிறார் என்று புரிந்தது. என்ன சொல்ல வருகிறார் என்ற தெளிவு எனக்கு இன்னும் வரவில்லை.
“அவள் முழு டெர்ம் மும் குழந்தை நன்றாக வளர்ந்தது. இதோ, ஒரு நாள், இதே போலத் தான், ஒரு இரவு. வீட்டுக்கு கிளம்பலாம் என்று நினைத்த நேரத்தில், அவளுக்கு வலி வந்து ஹாஸ்பிடல் வந்தார்கள். அவளைப் பரிசோதித்துப் பார்த்தபோது எனக்கு ஒரு உள்ளுணர்வு. இந்தப் பிரசவம் அவ்வளவு எளிதில்லை என்று. அன்று இரவு என்னால் வீட்டுக்கு வர முடியாது என்று உணர்ந்தேன். உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையானு தெரியல. அடுத்த நாள் உனக்கு ஸ்கூல்ல ஒரு பங்க்ஷன். நீ எதோ டிரஸ் வாங்க போகணும்னு சொல்லிருந்தே. நான் வர காத்து இருந்திட்டு அப்பா தான் உன்னை கூட்டிட்டுப் போனார். திரும்பி வரும்போது மழை பெஞ்சிட்டு இருந்ததால, ரோட்ல குழி இருந்தது தெரியாமல், கீழே விழுந்து உனக்கு காயம். நீ ஏம்மா என் கூட வரலேன்னு அதுக்கு அடுத்து ரெண்டு மூணு வாரம் சொல்லிட்டு இருந்தே. இன்னைக்கும் அது எனக்கு ஞாபகம் இருக்கு”. மெலிதான சிரிப்பு.

பின்னர், எங்கோ சில வினாடியில் வெறித்திருந்தன அவர் விழிகள். அப்பாவைப் பற்றிப் பேசும் போது வரும் ஒரு வெறுமை இந்த வெறித்த விழிகளில் நான் எப்போதுமே காண்பது தான். ஆம், அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஆம் .. என்று லேசாகத் தலையசைத்தேன்.

“உனக்கு நல்லாத் தெரியும் தானே, ராம்? என் துறையில் நாங்கள், ஒரு உயிரல்ல, எப்போதுமே, ரெண்டு உயிரைப் பற்றி அக்கறை எடுத்துக்கணும். பிளட் தின்னெர் ரெகுலரா எடுத்துக்க சொல்லிருந்தேன். தெரியாம அன்னைக்கு அதிக டோஸ் எடுத்துட்டு இருந்திருக்கா. ப்ளீடிங் அதிகம் ஆகிடுச்சு. திடீர்னு குழந்தையோட பல்ஸ் குறைய ஆரம்பிச்சிடுச்சு. ஒரு சமயத்துல அந்த காம்ப்ளிகேஷன்ஸ் ல, யாரோ ஒருத்தரைத் தான் காப்பாத்த முடியும் அப்படீங்கற நிலைமை. அவள் மாமியார் என்ன சொன்னாள் தெரியுமா? எங்களுக்கு குழந்தை நல்ல படியா வந்தாப் போதும்னு சொல்றா. மருமகள் பத்தி எதுவுமே சொல்லல. நான் ஒரு டாக்டர்ங்கறதும் தாண்டி அப்படியே ஒறைஞ்சு போயிட்டேன். அவள் கணவன் அழறான். அவ பத்திரமா வந்தா போதும்னு அவன் சொல்றான். ஒரு வெறி வந்தது போல ஆயிட்டேன். நான் இருக்கேன், ரெண்டு பேரும் பத்திரமா வருவாங்க, அதை மீறி ஒன்னும் நடக்க விடமாட்டேன் அப்படீன்னு சொல்லிட்டு, என் டீம் எல்லோரையும் கூப்பிட்டேன். அடுத்த 12 மணி நேரம், எல்லோருக்கும் இதைத் தவிர எந்த ஒரு சிந்தனையும் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, என்ன பண்ணனும்னு ஒரு பிளான் பண்ணோம். எல்லோருடைய கண்காணிப்பும் அர்ப்பணிப்பும் அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திச்சு. விடியற்காலை 4 மணிக்கு அந்தக் குழந்தையை அறுவை சிகிச்சை செஞ்சு நல்ல படியா எடுத்தோம். பத்திரமா அனுப்பி வெச்சோம். அதுவரை எல்லாம் சரிதான். போகும் போது, அவள் மாமியாரிடம் நான் சொன்னேன். நீங்க உங்க மருமகள் மேல அக்கறை வைக்காம இருக்கலாம். ஆனா, எனக்கு இங்கே வர்ற ஒவ்வொருத்தரும் முக்கியம். அவங்க நலன் முக்கியம். என்னை மீறி இங்கே ஏதாவது நடக்க விட்டுடுவேனா? போங்க, பத்திரமா பாத்துக்கோங்க.. அப்படீன்னு சொல்லி அனுப்பி வெச்சோம்.

“மனுஷனின் அகங்காரம் அந்த மனுஷனை விட பெருசுன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கே தானே? அன்னைக்கு அப்படித்தான். என்னை மீறி எதாவது நடக்க விட்டுடுவேனா? அப்படிங்கறது எவ்வளவு ஆணவமான ஒரு சிந்தனை? எல்லாத்துக்கும் நான் மட்டுமே காரணம் அப்படிங்கற ஆணவம். இதோ, இந்த எறும்பைப் பார். நம்மை விட எவ்வளவு சிறு உயிர். ஆனா அதற்கான அறிவையும் ஆற்றலையும் இயற்கை தந்திருக்கு தானே. அதை விட பல்லாயிரம் மடங்கு பெரியதான நாம், சில நேரங்களில் ஒரு துச்சமென அதை நசுக்கி வீசுகிறோம். அப்படி நம்மை விட பல்லாயிரம் மடங்கு பெரியதான ஏதோ ஒன்று, நம் ஆணவத்தை நசுக்கி வீசும் தருணங்கள் உண்டு. அது தான் நடந்தது. இரண்டு வாரங்கள் கழித்து, இடியென ஒரு செய்தி. சாரதாவின் மாமியார் குழந்தையைத் தூக்கும் போது கை தவறி குழந்தை கீழே விழுந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பெல்லாம் இல்லாமல் சில நிமிடங்களில் இறந்து போனது. மருமகளே போனாலும் குழந்தை வேண்டும் என்று சொன்னவள், அந்த முடிவை எடுக்கும் நீதிபதியாக தன்னை அவள் உணர்ந்து கொண்டது, அது எவ்வளவு பெரிய ஆணவம்? தன் கையாலேயே அந்தக் குழந்தை இறந்த தருணைத்தைப் அவரைப் பார்க்க வைத்தது எது? என்னை மீறி எதுவும் நடக்க விட மாட்டேன் என்று நான் சொல்வது எது வரை பொருந்தும்? அந்தக் குழந்தையைக் காப்பாற்ற நாங்கள் எல்லோரும் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு என்ன மதிப்பு? என்னை ஓர் சிறு துகள் என உணர வைத்தது எது?”

பனி படர்ந்திருக்கும் சாலையில் கொஞ்சம் விலகி ஒரு காட்சி தெரிவதைப் போல எனக்கு கொஞ்சம் தெளிவு வருவது போல உணர்வு.

“இந்தப் பதினேழு வருடங்களில் நீ செய்த எல்லா அறுவை சிகிச்சைகளும் உன்னால் தான் வெற்றி பெற்றது என்று நீ, நான் அன்று சாரதாவின் மாமியாரிடம் சொன்னதைப் போல சொன்னால், இன்றைய நிகழ்வுக்கும் நீயே பொறுப்பேற்றுக் கொள். அப்படி அல்லாமல், இவை அனைத்தும் இங்கே நம்மால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஒத்திசைவு நாடகமோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும் விஷயத்தை நீயும் ஏற்றுக் கொண்டால், அதற்குப் பிறகு நீ சட்டென விடுபடுவாய். நாளை செய்யப் போகும் வேலையைப் பார்ப்பாய். பட் டோன்ட் கெட் மீ ராங். எங்கே தவறு நடந்தது என்று மீண்டும் ஆராய்வதும், அதை சரி செய்து கொள்வதும் மிகவும் முக்கியம். அது தவறென்று நான் சொல்ல வரலே. ஆனா அவ்வளவு தான் நம் எல்லை. கடமைகளை மட்டும் தான் நாம் தீர்மானிக்க முடியும். பலன்களை அல்ல”.

அவர் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். வெகு நேரம் மூச்சுப் பிடித்து தண்ணீரில் இருந்து விட்டு மேலே வந்து காற்றை சுவாசிக்கும் விடுதலை உணர்வு.

“ஐ ம் சாரி மா. தேங்க் யூ” என்று சொல்லி எழுந்து கொண்டேன். “குட் நைட்”.

கதவு வரை போனவனை அவர் குரல் நிறுத்தியது.

“ராம் ”

மீண்டும் அருகில் போனேன்.

“நீ கேட்டியே, ஏன் என் உடல் நடுங்கனும் னு. ஏன்னா, நீ கைல எடுத்தது, நாம பயன்படுத்துற அறுவை சிகிச்சைக் கத்தியை விட கூர்மையானது. நம்மை இரக்கமே இல்லாமல் கிழிக்கும் ஆற்றல் கொண்டது. அந்த பயம் தான் காரணம். அதோட முனை மழுங்காம பாத்துகிறது தான் நாம் செய்யக்கூடியது. இதே போல கூர்மையா வச்சுக்கோ. குட் நைட்”

**

Photo by Dave Sicilia on Unsplash

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com