குமார் பக்கம்
June 25, 2021

சரியும் தவறும்

Posted on June 25, 2021  •  1 minutes  • 79 words

உயிருக்குப் போராடும் உறவு ஒன்றிற்காக
உறுப்பு வேண்டி காத்திருக்கும் உள்ளம்
வேண்டுவ தென்னவோ அடுத்தவர் வீட்டில் ஒரு மரணம்
யாருக்கு கருணை காட்ட வேண்டும்
இறை என்னும் நீதிபதி?

பாவிகளைத் தண்டிக்கும் நரகத்திற்கு
எண்ணெய்ச் சட்டிகளை விற்கும்
வியாபாரிக்கு லாபம் வந்தால், அதை
எந்தக் கணக்கில் வைக்க வேண்டும்?
பாவத்திலா? புண்ணியத்திலா?

விதைக்கும் போதும் துளிர்க்கும் போதும்
தன் உடலைக் குத்திக் கிழித்து
வெளிவரும் பயிர் ஒன்றை
மண் எனும் தாய் என்ன செய்ய?
சபிக்கவா? வாழ்த்தவா?

இங்கணம் ..

மனிதற்குள்ளும் மனதிற்குள்ளும் ஓராயிரம் வழக்குகள்
ஒவ்வொரு நாளும்

சரியெது தவறெது என்ற எல்லா வழக்கிலும்
ஆக்ரோஷப் புனிதர்களின் நாவு கொண்டு
தூக்கில் இடப்படுகிறார்கள்
மௌனம் என்னும் குற்றம் புரிந்த பாவிகள்

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com