சோமு டாக்டர் – சிறுகதை
Posted on May 26, 2021 • 9 minutes • 1775 words
Photo by Marcus Ganahl on Unsplash
நாலரை மணி பஸ்ல ஊருக்கு வந்து எறங்குறப்போ மகேசு எங்கிருந்தோ கெஸ்சு வாங்க ஓடியாந்தான்.
எதுக்கு பாத்தாலும் எங்கள எல்லாம் கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கறவன், சிரிச்சிகிட்டே இருக்கறவன், எனக்கு அவன அப்படி பாக்கறதுக்கே வித்தியாசமா இருந்திச்சு. ஒரு ரெண்டு நிமிசம் அப்படியே நின்னிட்டு, அப்புறம் எங்கிட்ட கேட்டான்.
“சேகரு, டேய், ஊர்லெ என்னாச்சுன்னு தெரியுமாடா?”
எனக்கு என்ன கேக்கறான்னே புரியல.
“ஏன்டா? என்ன ஆச்சு?” னு கேட்டேன்.
“நம்ம சோமு டாக்டர் இருக்குறாருல்ல. அவரு செத்துப் போய்ட்டாருடா.” அப்டீனான்.
மகேசு சொன்னதக் கேட்டு எனக்கு கொஞ்ச நேரம் ஒன்னுமே புரியல. ரெண்டு நாளைக்கி முன்னாடி தானெ தாத்தனுக்கு காய்ச்சல்னு வந்து ஊசி போட்டு உட்டுட்டு போனாரு.
“மகேசு, எப்பர்ரா ? என்ரா ஆச்சு?” கேக்கறப்பவே எனக்கு நடுக்கமா ஆயிருச்சு.
அதுவரைக்கும் சத்தமா பேசிக்கிட்டிருந்த மகேஸ் மெதுவா சத்தமில்லாமே, சுத்தியு முத்தியு பாத்துட்டு, மெதுவா சொன்னான்.
“டேய், அவரு மருந்து குடுச்சிடாராம்டா. எங்கம்மா ஆருகிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரில. நானும் நீ எந்த பஸ்ல வருவீனு பாத்துட்டே இருந்த. இப்பதா நீ வர்ற. இன்னைக்கு அர நேரம்னு தாண்டா சொன்னே.”
“எங்க மாஸ்டரு ஸ்கூல்ல ஒரு வேல குடுத்துட்டாருடா. சரி வா. ”
ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு ஓடுனோம்.
வீட்டுக்குப் போயி ஸ்கூல் பாக் வெச்சிட்டு, பார்த்தா, அக்கா மட்டுந்தா வீட்ல இருந்தா. அம்மா எங்கேன்னு கேட்டா, அவங்க சோமு டாக்டர் வீட்டுக்கு போயிருக்காங்கனு சொன்னா. ஸ்கூல் உட்டு வந்ததும் எப்பவும் சாப்பிடுவேன். அப்படியே பசியா இருக்கும். இப்பவும் ஒரே பசி. ஆனா சாப்புடனும்னு தோணல. சோமு டாக்டர் கண்ணுலேயே நிக்கிறாரு. எப்பவுமே சிரிச்ச மூஞ்சியோடயே இருப்பாரு. அழகுனா அழகு அப்படி ஒரு அழகா இருப்பாரு. எப்போ அவரு வீட்டுக்குப் போனாலும் சாப்ட எதாவது தருவாரு. யாருக்கு என்னன்னாலும் எங்க ஊர்ல அவரு கிட்ட தான் போவோம். ரொம்ப நல்ல டாக்டர்.
நானும் மகேசும் உடனே அவுரு வீட்டுக்கு ஓடுனோம். எங்க ஊரு ரொம்ப சின்ன ஊரு. மொத்தமே ஒரு நூத்தம்பது எரநூறு வீடு தா இருக்கும். எங்க வீட்ல இருந்து அவரு இருந்த வீட்டுக்கு போறதுக்கு கொஞ்ச நேரந்தான் ஆகும். போற வரைக்கும் எதுவுமே நாங்க பேசிக்கல.
ஊரே அங்க தா இருந்திச்சு. நெறைய பொம்பளைங்க அழுத்துட்டு இருந்தாங்க. ஆம்பளைங்க ரெண்டு மூணு பேரா நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க.
எங்களுக்கு உடனே போய் சோமு டாக்டர பாக்கணுமுன்னு இருந்திச்சி. சதா மாமன் எங்கள பாத்தவுடன் எங்ககிட்ட வந்து, “நீங்க எதுக்குடா வந்தீங்க” னு கேட்டாரு. “மாமா, சோமு டாக்டர் மாமா …” சொல்லிட்டு அப்பறம் என்ன சொல்றதுன்னு தெரியல. “சேகரு, உங்க அம்மா உள்ளதான் இருக்குது. இப்போ நீங்க உள்ள போகாதீங்கடா. வீட்டுக்குப் போங்க” அப்டீனாரு. சதா மாமங்கிட்ட வேற எப்படி கேக்கறதுன்னு தெரியல. மணி சித்தி இதப் பாத்துட்டே இருந்தாங்க. அப்படியே எங்ககிட்ட வந்தாங்க. அவங்க அழுத்திருக்காங்கனு தெரிஞ்சுது. அவங்க தான், சதா மாமங்கிட்ட சொன்னாங்க.
“வரட்டும் உடுங்க ணா. பசங்கனா டாக்டர் கு கொள்ள பிரியம். இவனுங்களுந் தான் எத்தன தடவ இவரு கூட விளையாடிட்டு இருந்திருக்கானுக. கடைசியா ஒரு தடவ பாத்துக்கட்டும். ”
சொல்லறப்பவே அவங்க கண்ணுல மறுபடியும் தண்ணி. சீலயில தொடச்சுட்டாங்க.
சதா மாமன், மணி சித்தி கிட்ட, “மணி, அவரு மூஞ்சியெல்லாம் வீங்கி போய் இருக்குது. எதுக்கு இவனுக போய் பாத்து பயந்து கீந்து தொலைக்க போறானுங்க.” அப்புறம் என்ன நெனச்சாருனு தெரீல. சரி, போங்கடா போய் பாருங்க னு சொன்னாரு.
சோமு டாக்டர் இருந்த வீடு ரொம்ப பெருசா இருக்கும். அந்த வீடு சதா மாமனோடது. எல்லோரும் இங்கே தான் இருந்தாங்க. ஊர்லேயே பெரிய தொட்டிக் கட்டு வீட்ல இதுவும் ஒன்னு. வீட்டுக்கு முன்னாடி பெருசா ரெண்டு திண்ணை இருக்கும். ரெண்டு திண்ணைக்கும் நடுவுல ஒரு ஏழு எட்டு படில மேல ஏறிப் போன ஒரு பெரிய ஆசாரம் வரும். திண்ணைல இருந்து வாசல் வரைக்கும், படிக்கு ரெண்டு பக்கமும் சறுக்கி வர்ற மாதிரி நெகுநெகுன்னு திண்டு இருக்கும். அதுல வெளையாடறது தான் எங்களுக்கு ரொம்ப புடிக்கும். செவுரெல்லாம் சும்மா பள பளன்னு இருக்கும். அந்தக் காலத்துல முட்டையெல்லாம் ஊத்தி கலவை பண்ணி பூசுவாங்கனு சொல்லுவாங்க. ஆசாரத்த தாண்டினா ஒரு பெரிய தொட்டி இருக்கும். மழை வந்தா அந்த தொட்டில நெறையா தண்ணி நிக்கும். தொட்டிய சுத்தி மூணு ரூம் இருக்கும். கொஞ்ச வருஷத்துக்கு முன்னால இந்த வீட்ல சதா மாமன் எல்லாரும் இருந்தப்போ, ஆத்தாவுக்கு (மாமனோட அம்மாவுக்கு) திடீர்னு பேய் புடிச்ச மாதிரி ஆயிடிச்சு. அப்போ வீட்ல ஓட்டு மேல சில ராத்திரி கல்லெல்லாம் உளுந்துதுனு பேசிக்கிட்டாங்க. அப்போ நா ரொம்ப சின்னப் பையன். அந்த ஊட்டுப் பக்கம் போயிராதே, குட்டிச்சாத்தான் இருக்குனு சொல்லி வச்சிருந்தாங்க. சாயந்திரத்துக்கு மேல அங்கேயே போக மாட்டோம். அந்த வூட்டுக்கு சாமியாரெல்லாம் வந்தத பாத்திருக்கேன். அப்படி இருந்தப்ப, அப்ப வந்த சாமியார் ஒருத்தர், இனி இந்த வூட்ல நீங்க இருக்காதீங்க, வேற இடத்துக்கு கொஞ்ச நாள் எல்லாரும் போயிருங்க அப்படீனு சொல்லிருக்காரு. அதனால மாமெ பக்கத்துல தோட்டத்துக்கே குடி போயிட்டாரு. ரொம்ப வருஷம், மாமனும் எங்கெங்கேயோ போய் பாத்தாங்க. ஆத்தாவுக்கு சரியே ஆகல. சதா மாமன் ஆத்தாவுக்கு வைத்தியம் பாக்க வீட்டுக்கே ஒரு டாக்டர் வேணும்னு பாத்துக்கிட்டு இருந்தப்போ, யாரோ சொல்லி சோமு டாக்டர் அப்பதான் மொதல்ல ஊருக்கு வந்திருக்காரு. அப்பப்ப வந்து ஆத்தாவுக்கு வைத்தியம் பாத்தாருன்னு சொல்லுவாங்க. ஒரு வருஷம், அவரு வைத்தியத்துல ஆத்தாவுக்கு சுத்தமா சரியாயிடுச்சு. அதுக்கப்புறம், ஊர்ல அவரு கிட்ட நெறைய பேர் வைத்தியத்துக்கு போனாங்க.
அப்போ தான், நான் ஊர்லயே இருத்துக்கறேன்னு டாக்டர் சொன்னப்போ, சதா மாமன், அவர் வீட்டைப் பத்தி சொல்லிட்டு,
“டாக்டர், உங்களுக்குத் தான் தெரியுமே, ஊருக்குள்ள இருக்கற நம்ம வீட்ல இந்தப் பிரச்சனை இருக்குன்னு. இல்லேன்னா அங்கேயே உங்கள தங்கச் சொல்லிருவேன்” அப்படீன்னு சொல்லிருக்காரு. இந்த பேய் குட்டிச்சாத்தான் இது மேலயெல்லாம் சோமு டாக்டருக்கு நம்பிக்கையில்ல. “இந்த வீட்லயே நான் இருத்துக்குறேன்” னு சொல்லிட்டாராம். அவரு வந்து கொஞ்ச மாசத்துல கொஞ்ச கொஞ்சமா நாங்க எல்லாரும் அவருக்கு பிரண்ட்ஸ் ஆயிட்டோம். அந்த வீட்டுக்கு போறதுக்கே பயப்பட்ட நாங்க, அடிக்கடி போக ஆரம்பிச்சோம். நாங்க நெறைய தடவ கேப்போம். “எங்க அம்மாவெல்லாம் சொல்லிருக்காங்க, இங்கே குட்டிச்சாத்தான் இருக்குன்னு, உங்களுக்கு பயமில்லையா?” அப்படீன்னு கேட்டா, சிரிச்சிட்டு, “அதெல்லாம் பொய் டா, அதெயெல்லாம் நம்பாதீங்க” அப்படீம்பாரு. அந்தப் பெரிய வீட்ல, அவரு மட்டுந்தான் ஒரு ரூம்ல இருந்தாரு.
சூப்பரா ஒரு சைக்கிள் வச்சிருந்தாரு. எனக்கு மொத மொதல்ல சைக்கிள் பழக கத்துக் குடுத்தவரே அவரு தான். எல்லாரும் கீழ உழுந்துருவடா, இன்னுங் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னப்போ, இவரு தான் எனக்கு ரொம்ப ஆசைன்னு தெரிஞ்சிக்கிட்டு அவரு சைக்கிள் குடுத்து பழக்கி உட்டாரு. எப்போ நேரம் கெடைச்சாலும் நானும் பசங்களும் அவரு கிட்ட தான் இருப்போம். ஏன்னு சொல்ல தெரில, ஆனா எங்க எல்லாருக்கும் அவர தான் ரொம்ப புடிக்கும்.
திண்ணைக்கு முன்னால இருந்த பெரிய வாசல்ல தான் பந்தல் போட்டு ஜமுக்காளம் விரிச்சிருந்தாங்க. திண்ணையில கொஞ்சம் பேரும், ஜமுக்காளத்துல கொஞ்சம் பேரும் உக்காந்திட்டு இருந்தாங்க. வெறும் ரெண்டு படி ஏறி பாத்தா, அந்த ஆசாரத்து நடுவுல அவர படுக்க வச்சிருக்கறது தெரிஞ்சிது. ஆனா கால் மட்டுந்தா தெரிஞ்சுது. மேல ஏறிப் போய் பாக்கலாம்னு அப்பத்தான் ரெண்டு படி மேல ஏறுனோம். அப்பப் பாத்து, பாலு பெரியப்பா படில எறங்கி வந்துட்டிருந்தாரு. அவர பாத்தாலே எங்களுக்கெல்லாம் ஒரே பயம். குறும்பு பண்ணா யாரா இருந்தாலும் அடிச்சு போடுவாரு. பாக்கறக்கே ஜிம் பாடியா இருப்பாரு. பெரிய மீச வேற. நாங்க சோமு டாக்டர் வீட்டுக்கு வெளயாட வரும்போது, இவர் வர்றத பாத்திருக்கோம். அப்ப மட்டுந்தான் இவரு சிரிக்கறத பாத்திருக்கேன். மத்த நேரமெல்லாம் உம்முன்னேதான் இருப்பாரு.
எங்கள பாத்தவுடனே, “நீங்க எதுக்குடா உள்ள போறீங்கனு” அவரு கேட்டதுக்கு, கம்னு ஒண்ணுஞ்சொல்லாம இருந்தோம்.
“அங்க பாரு, ஈஸ்வர காப்பி போட்டுக்கிட்டு இருக்கான். அதெல்லாம் வாங்கி வந்திருக்கறவங்களுக்கு கொண்டு போய் குடுங்க”. அப்டீன்னு சொல்லிட்டு ஒரு பீடியை வாயில வெச்சிக்கிட்டு அப்படியே நடந்து கீழ வாசலுக்கு போய் உக்காந்துட்டாரு. அப்போதான் நெறைய பேரு தோட்டத்து வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்துக்கிட்டிருந்தாங்க.
பாலுப் பெரியப்பா எங்களயே பாத்திட்டிருந்தாரு. சரினு கீழ எறங்கி நேரா காப்பி போட்டிட்டிருந்த எடத்துக்குப் போனோம்.
“கண்ணு, இந்தாங்க, இந்தக் காப்பிய கொண்டு போய் குடுங்க” ஈஸ்வரன் குடுத்த பெரிய தட்டத்துல ஒரு பத்து டம்ளர் இருக்கும். மெதுவா அதே எடுத்துட்டு போய், ஒவ்வொண்ணா நானும் மகேசும் எல்லாருக்கும் குடுத்தம்.
மகேஸ்க்கு என்னவிட ரெண்டு வயசு அதிகம். ஆனாலும் போடா வாடான்னு பேசியே பழகிருச்சு. மகேஸ் கிட்ட மெதுவா நா கேட்ட.
“மருந்து குடிச்சா மூஞ்சியெல்லாம் வீங்கி போயிருமாடா?”
“தெரில. ஆனா, வாயில வெள்ளையா நொரை வரத நா சினிமால பாத்தெ. ரத்தம் வர்றதையும் பாத்திருக்கற”.
“ரத்தமா” ?
“எசமானே”, பெரிய சத்தம் வாசலுக்கு வெளில கேட்டிச்சு. ஓடிப் போய் பாத்தோம். மாயன். மாயனுக்கு எங்க சின்ன தாத்தன் கணக்கா கொஞ்சம் வயசான ஆளு. நாங்க இருக்குற வீதி வழியா தெனமும் ஒரு 10 – 20 ஆடுகள மேய்க்க காட்டுக்கு ஓட்டிட்டுப் போவான். ஒரு பனியன், லுங்கி, தலையில வெள்ளை துண்டுல ஒரு உருமாலை. எப்பவுமே ஒரு சிரிப்பு மூஞ்சில இருக்கும். கள்ள குடிச்சிட்டு, எம்.ஜி.ஆர் பாட்டு பாடிட்டு, ஆடிட்டே தான் போவான். மத்தியானம் போறப்பவும் பாட்டு, சாயந்திரம் திரும்பி வர்றப்போவும் பாட்டு. எப்பவாவது, அழுதிட்டே ஒரு சோக பாட்டு ஓடும். பாடாம போய் ஒரு நாளும் பாத்ததில்ல. மாயன் பாடுனா தெளிவா இருக்கும். தண்ணி போட்டு இருக்கறது சுத்தமா தெரியாது. நடை மட்டும் தான் தள்ளாடும்.
“எசமானே, நீங்க இப்படி பண்ணீட்டு போயிட்டீங்களே. எப்ப வந்தாலும் சிரிச்சு சிரிச்சு பேசுவீங்களே. மாயா, குடிக்காத குடிக்காத னு சொல்லுவீங்களே, இப்போ நீங்களே இப்படி குடிச்சு போட்டீங்களே”.
“கரை மேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
அலை மேல் மிதக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்”
பாடிட்டே அப்படியே கீழ உக்காந்துட்டான்.
சோமு டாக்டர் அப்படித்தான். “குடிக்கிறது எப்பவுமே நல்லதில்லை. அது குடும்பத்த முடிச்சி போடும்” ன்னு சொல்லிட்டே இருப்பாரு.
சதா மாமன் வந்து, “ஹ்ம்ம். எந்தப் பாட்ட எதுக்கு பாடறான் பாரு. அது செரி. நீ தண்ணீல தான் பொழச்சிட்டு இருக்கே. போய் அப்படி தள்ளி உக்காரு போ”.
மாயனோட மூஞ்சில இப்படி ஒரு சோகத்தை நா இதுவரைக்கும் பாத்ததில்ல. ஓரமா போய் உக்காந்துட்டான். சத்தம் வராமே தானே எதோ பேசிக்கிட்டான்..
“சதா” – என் அம்மாவோட குரல். அம்மா உள்ள இருந்து எங்கள பாத்து வந்தாங்க. அவரு கூட நானும் நிக்கறத பாத்துட்டு, “நீ எப்படா கண்ணு வந்தெ? ஸ்கூல்ல இருந்து இப்பதான் வந்தியா?”
“ஆமாம்மா. வீட்டுக்கு போன. அக்கா தா இருந்தா. அவதான் சொன்னா”.
அம்மா சதா மாமன்கிட்ட, “சதா, அம்மாவுக்கு தெரியுமா? அம்மாவ கூட்டியார தோட்டத்துக்கு யாராவது போயிருக்கறாங்களா? ”
“இல்லக்கா. அம்மாவ கொஞ்ச நேரங் கழிச்சு கூட்டிட்டு வரலாம்னு பாக்கறேன். அது என்னனா .. ” சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடி, ஈஸ்வரன் வந்து, “ஏனுங், ராத்திரிக்கு உப்புமா போட்டுக்கலாமுங்களா? எத்தன பேருக்கு பண்றதுங்”
மாமன் அம்மாவிடம், “அக்கா, ஒரு நூறு பேருக்கு செய்ய சொல்லலாமா?”
“சரியாத்தா இருக்கும்”
சதா மாமா ஈஸ்வரனிடம், “ஆமா ஈஸ்வரா, நீ ஒரு நூறு பேருக்கு வர்ற கணக்கா செஞ்சிரு.”
பாலு பெரியப்பா அம்மாவ பாத்ததும் எங்ககிட்ட வந்தார்.
பெரியப்பா, அம்மாவிடம், “ஏ அம்மிணி, நீ அப்பளயாவே வந்திட்டியா?. நா கவனிக்கவே இல்ல போ. அய்யனுக்கு இப்போ எப்படி இருக்குது. டாக்டர் தா வந்து அப்பப்போ பாத்துக்கறாருனு நேத்து பாத்தப்போ கூட சொல்லிட்டுருந்தாரு.”
“ஹ்ம்ம். என்ன சொல்றது போங்க மாமா. அய்யனுக்கு இப்போ பரவாயில்லங்க. நாந்தே அவர வூட்லயே இருக்க சொல்லீட்டனுங்க. அவருக்கு வரணுமுனுதான். இப்பதான் காய்ச்சல் கொஞ்சம் பரவாயில்ல. எதுக்குன்னு தான். வந்து பாத்து இனி என்ன ஆகப் போகுது உடுங்க. நம்ம வூட்டுப் புள்ளையாட்டம் எப்பவும் வந்து அக்கறையா பாத்திட்டு இருந்த மனுஷன் இப்போ இல்லனு நெனெச்சா என்னனு சொல்றது? இந்த சின்ன வயசுல இப்படி ஒரு முடிவு எடுத்து போடுச்சுங்களே?”
ஈஸ்வரன் போன பின்னாடி, மாமா அம்மாகிட்ட திரும்பி சொன்னார். “அதுக்கா, இன்னைக்குனு பாரு, அம்மா காலையில நா சொசைட்டுக்கு பால் ஊத்த கெளம்பறப்ப என்னைக்கும் இல்லாம புதுசா, எதுக்கும் ஒரு எட்டு போய் இன்னைக்கு டாக்டர பாத்துட்டு வா.. ன்னு சொல்லிச்சு. ஒடம்புக்கு எதாவது பண்ணுதா ன்னு நான் கேக்க, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ மனசு செரியில்ல நேத்து ராத்திரியில இருந்தே. அந்த புள்ளையும் வந்துட்டு போய் ஒரு மாசம் ஆச்சு. ஒரு நடை வந்துட்டு போக சொல்லு ..ன்னும் சொல்லிச்சு. என்னடா இது, என்னைக்கும் இல்லாம இப்படி சொல்லுதே னுட்டு தான் நேர சொசைட்டியில இருந்து இங்கே வந்த. வந்து பாத்தா, கதவு தொறந்து கெடக்குது. ஆசாரத்துல அப்படியே குப்பற கெடக்கறாரு. எனக்கு என்ன பண்றதுன்னு சித்த நேரத்துக்கு தெரில. அப்பறம் வெளில ஓடிப் போயி பாக்கறப்போ, நம்ம தெக்கால தோட்டத்து சின்ராசு ட்ராக்டர்ல வந்திட்டிருந்தான். வண்டில அவங்கூட ரெண்டு மூணு பேரு இருந்தாங்க. உடனே எடுத்து போட்டுட்டு நம்ம தர்மராஜ் டாக்டர் கிட்ட போய் பாத்தோம். போய் நெறைய நேரம் ஆயிருக்கணும் னு சொல்லிட்டார். என்ன பண்றது. அப்படியே கொண்டு வந்துட்டோம்.”
“ஏ மாப்ள, அத பத்தி கேக்கறதுக்குத்தான் வந்த. அப்ப எடுக்கறத பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க? போலீஸ் கேசு எதாவது குடுக்கணுமா?” பெரியப்பா மாமாவ பாத்து மெதுவா கேட்டார்.
“ப்ரெசிடெண்டு அண்ணனுக்கு சொல்லி உட்ருக்குதுங்க மாமா. அவரு வந்துருட்டும்ங்க. இப்படி சிக்கல் வரும்னு நெனச்சு பாக்கவே இல்ல போங்க. இத்தன வருசம் இங்கே இருந்திருக்கிறாரு. ஆனா, ஒரு தடவ கூட சொந்த ஊருல இருக்கறவங்க தகவல நாம தெரிச்சுக்காம உட்டுட்டோம் யோசிச்சி பாத்தா, என்னன்னு சொல்றது. அதுவுமில்லாம இது போலீசு கேஸ்னு போச்சுன்னா நாம்ம எத்தன நாள் போய் அலையறது? உங்களுக்கு தெரியாதா? ஏகப்பட்ட செலவு வேற ஆகும்ங்க. ஆனா, சுத்தமா மறைக்கவும் முடியாது. நாளைக்கு ஒரு பிரச்சனைனு வந்தரக் கூடாது இல்லீங்களா? ”
“ஆமாம்மா. அதுக்குதான் பெட்டிசன் போடறதுக்குன்னே நம்ம பங்காளி இருக்கறாரே. அவரு கிவரு எதாவது எழுதி உட்டுட்டாருன்னா, நாளைக்கு வம்பாப் போயிரும்”.
“அதுக்கு தான் ப்ரெசிடெண்டு அண்ணன் வந்ததும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஏனுங்க?”
“ஹ்ம்ம். நானும் எப்பாவது பேசறப்ப கேட்டு பாத்திருக்கறன். ஆனா, திண்டுக்கல் பக்கத்துல எல்லா இருக்கறாங்கனு மட்டுந்தான் சொல்வுவாரே ஒழிய, வேற எதுவுஞ் சொன்னதில்ல”
பிரசிடெண்ட் மாமா பைக் சத்தம் கேட்டுது. அவரு வந்ததும், ஒரு பத்துப் பேரு சேந்து அவரு கூட பேசிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்துல போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டதா பேசிக்கிட்டாங்க.
இவ்வளவு நேரமும், இந்த வேல அந்த வேலைனு சொல்லிட்டே இருக்கறாங்களே ஒழிய, எங்கள உள்ள போய் பாக்கவே உடல. அப்ப தான், அம்மா மறுபடியும் வெளில வந்து எங்கிட்ட “தோட்டத்தில இருந்து எல வந்திருக்குது, போய் நீயும் பசங்களும் வண்டில இருந்து எடுத்துட்டு வந்து உள்ள வெச்சிருங்க” அப்படினாங்க. சொல்லிட்டு, “டாக்டர் மாமாவெ பாத்தியா?” னு கேட்டாங்க. அம்மா எப்பவுமே ரொம்ப எதார்த்தமா இருப்பாங்க. தைரியமானவங்க கூட.
இல்லேன்னு தலையை இப்படியும் அப்படியும் ஆட்டுன.
“சரி. எலய கொண்டு வந்து வெச்சிட்டு வா. நான் கூட்டிட்டு போறேன்.”
சாப்பிட்றதுக்கு எலை வந்திருந்த வண்டில இருந்து ஏறக்கறப்போ, மாயனும், சதா மாமனும் பேசிக்கிட்டிருந்தது கேட்டுச்சு.
“அட ஏ இப்பவே போகணும்கற? பொழுது உளுகரக்குள்ள எடுக்கறதுன்னு முடிவு. இரு எடுக்கறப்போ பாத்துட்டு போவியாம்மா”.
“அய்யோ, எசமானே.. அவர பாக்கறதுக்கு நா வல்லீங்க. சும்மா எம்.சி.ஆர் கணக்கா இருந்த மனுசன். சிரிச்சா எப்படி இருப்பாரு. வெறுஞ் சிரிப்பு மட்டுமுங்களா? எ வூட்ல கூட எங்கிட்ட அப்படி அக்கறையா கேக்க மாட்டாங்க. இவரு தான் எப்ப வந்தாலும் எதுமே கேக்காம வைத்தியம் பாப்பாரு. காசு இருந்தா குடுப்ப. இல்லேன்னாலும் கேட்டதில்ல. அவரு மூஞ்சிய பாக்கறதுக்குன்னே அப்பப்போ நா இங்க வாரது. அப்படி பாத்த மனுசன இப்போ இப்படி எப்படீங்க நா பாக்கறது. நா சாகற வரைக்கி வேற எப்படியு அவர நெனைச்சி பாக்க முடியாதுங்க. அந்த சீவனுக்கு அது தா மதிப்பு. நா வந்தது வேற ஒரு சோலியாங்க. உங்க சொந்தம் எல்லா எங்கன்னு கேட்டா, நீயு எனக்கொரு சொந்தந்தா அப்படீம்பாரு. அவங்கூட்டு மொறை என்னான்னு எனக்கு தெரியாதுங்க. இன்னைக்கு போய் ரெண்டு குட்டிய வித்து போட்டானுங்க. இந்தாங்க இத வெச்சு என்ன மொறை செய்வீங்களோ, இது எங் கணக்குங்க.”
அண்ட்ராயர் உள்ள இருந்து கை நெறைய பணத்த எடுத்து சதா மாமன் கையில துணிச்சுட்டு, உள்ள பாத்து கையெடுத்து கும்பிட்டிட்டு, கண்ணெ தொடச்சிட்டு விறு விறுனு நடந்து போயிட்டான் மாயன்.
மாமன் போறவனேயே பாத்திட்டிருந்தாரு.
எலையை உள்ள கொண்டு போய் கொடுத்துட்டு வர்றப்போ, அம்மா வந்தாங்க..
“வாடா கண்ணு, உள்ள போய் பாக்கலாம்”
எனக்கென்னமோ மனசு வரல.
“வேண்டாம்மா. நா வீட்டுக்கு போற.”