குமார் பக்கம்
May 9, 2021

ஒரு தேர்தல் என்பது

Posted on May 9, 2021  •  7 minutes  • 1316 words

ஒரு தேர்தல் என்பது

பொருந்தாத நேரத்தில், இந்த முறை, கொரோனா தொற்று பற்றிய எல்லா விதிகளையும் மீறி, தேர்தல் என்னும் நம் ஊரின் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கும் இந்த நேரத்தில், மிகத் தீவிரமான நோய் பரவலும் நடந்து, பலர் பலியாகி கொண்டிருக்கின்றனர். மிகவும் வருந்தத்தக்க நிகழ்வுகள் எங்குமே. அதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. வேறொரு பதிவில் பேசுவோம்.

அதே நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், இன்றைய நிலையில், இருக்கும் கட்சிகளில், சற்றேனும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யும் கட்சியாக திமுக இருக்கிறது. 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாமல், இப்பொது வென்றிருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழகத் தலைவர்களில் பல ஆண்டுகளாக தமிழகத்தைப்  பற்றிய புரிதல் உள்ளவரும், கட்சிப் பணியில், சிறிய பொறுப்புகளில் தொடங்கி, இன்று முதலமைச்சர் பதவி ஏற்றிருக்கும், திரு ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திமுக என்ற கட்சியின் பேரில் பல விமர்சனங்கள் இருந்தாலும், திரு. ஸ்டாலின் அவர்களின் உழைப்பும், நிர்வாகத் திறமையும் சிறப்பானதாகத்  தான் இருந்திருக்கிறது. இந்த நிர்வாகம் திறமையாகப் பணியாற்றி நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும். 

இந்தப் பதிவு, தேர்தல் என்னும் ஒரு நிகழ்வைப் பற்றிய பார்வை. குறிப்பாக தமிழ்நாடு தேர்தல்.

தமிழக தேர்தல் நடக்க இருந்த சில வாரங்களுக்கு முன்னால், தோழி ஒருவர், திரு. சகாயம் அவர்களின் மக்கள் பாதை அமைப்பு தேர்தலில் பங்கெடுக்க இருப்பதன் பேரில், அதற்கு ஆகும் செலவுக்கான நிதி திரட்டும் பொருட்டு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். இந்த முயற்சிக்கு நன்கொடை அளிக்க எனக்கு விருப்பமில்லை என்ற என் நிலைப்பாட்டையும், அதற்கான ஒரு சிறு விளக்கத்தையும் அனுப்பி இருந்தேன். தேர்தல் முடிந்து இப்பொழுது வரும் தரவுகள் என் நிலைப்பாட்டை உறுதி செய்வதாகத் தான் இருக்கிறது. 

இன்றைய நிலையில், ஒரு அரசியல் கட்சி என்பது, தெளிவான, திட்டமிட்ட, லாப நோக்கோடு நடத்தப்படும் ஒரு வணிக நிறுவனம். வருமானத்திற்காக இந்த வணிக நிறுவனத்தை நேரிடையாகச் சார்ந்து இருப்பது, அதன் மேல்மட்ட பொறுப்பாளர்களில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை, கணிசமான அளவில் உள்ள, சரியாகச் சொல்லப் போனால், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இவர்கள் அனைவரும். மேலிடம் கொடுக்கும் கட்டளையை நடத்தி முடிப்பது தான் இவர்களின் ஊழியம், அதற்குத் தான் இவர்களுக்கு ஊதியம். ஊதியம் என்பது தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் நேரிடையான பணமும், பின் தொகுதியில் நடக்கும் வேலைகளில் கமிஷன் மற்றும் பிற வருமானமும் தான் முக்கியமான வருமானங்கள். இவர்கள், தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருப்பதிலும், கண்ணை மூடிக்கொண்டு, மேலிடம் எடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் கட்டுப்படுவதின் மூலமாகவும், தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள்.  கொள்கை அடிப்படையில் ஆதரவு என்பதெல்லாம் சரியாக வராது. ஒரு சிலர், மிகக் குறைந்த அளவில், அப்படி இருக்கலாம். அவர்கள் “பிழைக்கத் தெரியாதவன்” , “துரோகி” என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். நிரந்தர லாபமீட்டும் ஊழியர்களிடம் கொள்கை அளவில் விவாதிப்பதோ, அல்லது ஒரு அறச்சிந்தனைப் பார்வையை எதிர்பார்ப்பது என்பதெல்லாம் நடக்காது. இந்த ஊழியர்களின் எண்ணிக்கை தான் ஒரு கட்சியின் பலம்.

அதே போல, ஒரு வாக்காளர் என்பவர், இந்த வணிகக் கட்டமைப்பை ஓரளவுக்கேனும் புரிந்து வைத்திருக்கும் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர். தங்களுக்குக் கொடுக்கப்படும் சேவையின் வழியாக இந்த வணிக நிறுவனங்களும், அதன் ஊழியர்களும், மிகப் பெரிய அளவில் பொருளீட்டுகின்றனர் என்ற உண்மையையும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் வாடிக்கையாளர். இன்றைக்குக் கூட, ஜனநாயகம் என்ற இந்த பெரும் கட்டமைப்பு உயிர்ப்புடன் இருக்க காரணமான அங்கத்தினர்கள். வாக்காளர் என்ற பொதுமக்கள் தங்களுக்கு என்று சில பொது அறம் கொண்டவர்கள். இதில் சில மாறாமலும், சில அறங்கள் மாறிக் கொண்டே இருப்பதுமானது. இன்றைக்கும் மாறாமல் (மிகப் பெரும்பான்மையானவர்களிடம்) இருக்கும் ஒரு வாக்காளர் பொது அறம் என்பது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது. உனக்கு வாக்களிக்கிறேன் என்ற உறுதியை ஒருவருக்குக் கொடுத்து விட்டால், அதைக் காப்பாற்றுவது. ஆனால், அப்படி ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கான ஒப்பந்த முறை மாறிக் கொண்டே இருக்கிறது. அது தான் மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் அறம். லாபமீட்டும் வணிக நிறுவனங்களிடம் தெளிவான எதிர்பார்ப்புடன் தங்கள் பங்கினைக்  கேட்டுப் பெறும் திறன் பெற்றவர்கள் இன்றைய வாடிக்கையாளர்கள்.
இந்த இரண்டு தரப்பும், வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஒரு பொதுப் புள்ளி தான் தேர்தல். 

ஒரு நிறுவனம் தங்கள் பொருளை சந்தைப்படுத்த என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் ஒரு அரசியல் கட்சி என்ற வணிக நிறுவனமும் செய்தாகவேண்டும். வாடிக்கையாளரை ஈர்க்கும் விஷயங்களாவன: 

  1. பிராண்ட் (அடையாளம்). உதாரணமாக, கட்சியின் பெயர், மற்றும் சின்னம். இவை ஒரு கட்டத்திற்கு மேல், ஒரு நிறுவப்பட்ட அடையாளம். பொதுமக்களிடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாளங்கள். இவை வெற்றிக்கு பங்காற்றும் மிகப் பெரிய காரணி. அதனால் தான், ஒரே சின்னத்தை தொடர்ந்து தக்க வைக்க, சிறிய கட்சிகள் போராடுகின்றன. புதிய கட்சிகள் இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி விடுகின்றன. அவர்களுக்கு இந்த பலம் இல்லை. ஒரு கட்சி, கணிசமான அளவில் வெற்றியைப் பெற தேவையான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது 10 – 15 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. 

2)  அடுத்து, ஒரு பரிச்சயமான முகம் அல்லது பெயர். இன்றைக்குக் கூட பல கட்சிகள் திரு. காமராஜர், திரு. கருணாநிதி, திரு. எம்.ஜி.ஆர், செல்வி. ஜெயலலிதா ஆகியவர்களின் பெயரை, மறைந்த பிறகும் விடுவதாக இல்லை. அவர்களின் பெயருக்கான வெகுஜன மதிப்பு என்பது அப்படிப்பட்டது. இது ஓரிரு நாளில் வந்ததல்ல. இது அந்தந்த கட்சிகளுக்கான ஒரு பலம். இந்த பலமும் பெரிய கட்சிகளுடன் போட்டி போடும் அளவிற்கு புதிய கட்சிகளுக்கில்லை. இதில் ஜாதி மற்றும் மதம் என்ற ஒரு விஷயமும் முக்கியப் பங்காற்றுகிறது. தலைமை வேட்பாளர் ஒருவேளை பரிச்சயம் இல்லாதவராக இருந்தால், அடுத்த நிலையில் உள்ள, தங்கள் பகுதி வேட்பாளர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு. அதனால் தான், பல ஜாதிக் கட்சிகள் இன்றைக்கு முளைத்து வந்திருக்கிறது. 

  1. அதற்கு அடுத்து, அந்த நிறுவனம் கொடுக்கும் சலுகைகள் மற்றும் பயன்கள். இதில் தான், மக்கள் மிகவும் தெளிவடைந்து, ஒரு முறை (தேர்தலின் போது) தாங்களும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்ற நிலைக்கு வந்து, லாபத்தில் பங்கு கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இது ஏதோ, வறுமையை வாங்கும் போக்கு என்றும் வறுமையில் உள்ளோர் மட்டும் இப்படி சிந்திக்கிறார்கள் என்று பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து, என் உறவினர்கள் பல பேர், மிக நல்ல பொருளாதார நிலையில் இருப்பவர்கள் கூட, அரசின் இலவசங்களை வாங்கிக் கொண்டுள்ளனர். உதாரணமாக, வண்ணத் தொலைக்காட்சி, கணினி, இப்படி. தங்கள் பங்கு என்பதில் இருப்பவர் இல்லாதவர் அனைவரும் ஒன்றாகவே சிந்திக்கும் போக்கைப் பார்க்கிறேன்.
    ஒரு கட்சி, முதல் இரண்டு படிநிலையைத் தாண்டிய பின்னர் தான், மூன்றாவது நிலைக்கு வர முடியும். ஏன் என்றால், மக்கள் முதலில் “யார்”  சொல்கிறார்கள் என்று பார்த்து, பிறகு தான் “என்ன” சொல்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். இது அடிப்படை உளவியல்.  ஒரு பொருளை  விற்க கொடுக்கும் விளம்பரத்திலேயே இது தேவைப்படுகிறது. 

தமிழ்நாட்டின் 2020-21 நிதிநிலை ஆண்டில் கொடுக்கப்பட்ட தகவல் படி, செலவு சுமார் 3 லட்சம் கோடி. அதன் படி, இந்த தொகையில், ஒரு சிறு பங்கு இந்த வணிக நிறுவனமான கட்சிக்கும், அதன் ஊழியர்களுக்கும் போய்ச் சேருகிறது என்பது இன்று யாருமே மறுக்க முடியாத உண்மை. ஒரு சிறு அட்டவணை. இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இந்த எண்ணிக்கை, கோடிகளில்.

<img src="http://kumarpakkam.com/wp-content/uploads/tbl1.png" alt="tbl1">

இந்தப் பணம் எப்படி பிரித்துக் கொள்ளப்படுகிறது? இதுவும் ஒரு தோராயமான ஒன்று தான்.

குறைந்தபட்சம் ஒரு 45000 கோடி ரூபாய் மொத்தமாக இந்த ஆட்சிக் காலத்தில் கட்சிக்கு வருகிறது என்றால், அதில் வெறும் 10 சதவிகிதம் கட்சித் தலைமைக்கு சென்றால், கட்சி நிதியாக 4500 கோடி சேரும். ஒரு 20 சதம் முதல் கட்ட பொறுப்பாளர்களுக்குச் (அமைச்சர், அவர் நெருங்கிய ஆதரவாளர்கள், இப்படி) சென்றால், இந்த எண்ணிக்கை ஒரு 500 பேர் இருப்பார்கள் என்று சொல்லலாம். சுமாராக 20 – 60 கோடி ரூபாய் ஒரு ஆட்சிக் காலத்தில் வருமானம் ஈட்டுவார்கள் என்று சொல்கிறார்கள். அதை மீண்டும் பெருகிக் கொள்வது அவர்கள் திறமை தான். அதேபோல, மற்ற நிலைகளில் இருப்பவர்கள் அவர்களின் பங்கை அடைகிறார்கள். இந்தக் கட்டமைப்பு என்பது, சுமார் 60000 இல் இருந்து 80000 மனிதர்களின் கூட்டு. இதை பெரிய கட்சிகள் அன்றி சிறு கட்சிகளால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. கடைமட்ட கட்சி களப் பணியாளர் சுமார் 3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது.

<img src="http://kumarpakkam.com/wp-content/uploads/tbl5.png" alt="tbl5">

ஒரு பூத் என்பது 1000 வாக்காளர்கள். ஒரு பூத் ஏஜென்ட் என்பவர் இந்த 1000 வாக்காளர்களுக்குப் பொறுப்பேற்கிறார். ஒன்று, தன் தனிப்பட்ட செல்வாக்கினால், இந்த 1000 வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால், கட்சி கொடுக்கும் பணத்தை முறையாக இந்த வாக்காளர்களுக்குக் கொடுத்து, வாக்கை உறுதி செய்து கொள்ள வேண்டும்.     இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்த வாக்காளர்கள், சுமார் 6.1 கோடி.  மொத்த வாக்கு சதவிகிதம் (~73%).

<img src="http://kumarpakkam.com/wp-content/uploads/tbl3.png" alt="tbl3">

ஒரு பொருளை சந்தைப்படுத்தும்போது, ஒரு வாடிக்கையாளரை சென்றடைய (Cost of acquiring a customer) ஆகும் செலவை கணக்கிடுவார்கள். அந்த வகையில், சில கணக்கின் படி, ஒரு வாக்காளரை அடைய ஆகும் செலவு தோராயமாக 500 ரூபாய். இது பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க ஆகும் செலவில் இருந்து, தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூக வலைத்தளம் வழியாக ஆதரவு திரட்டுவோருக்கு கொடுக்கப்படி தொகை, இப்படி, பல வழிகளில், இந்த 500 ரூபாய் என்பது மிகவும் சாதாரணமான தொகை தான்.  வாக்குக்கு பணம் என்ற விஷயத்திற்கு இன்னும் போகவே இல்லை. இந்தத் தொகை என்பது, 6.1 கோடி வாக்காளரையும் சென்று சேர ஆகும் செலவல்ல. உதாரணமாக, கட்சிகளுக்கு,  யாரெல்லாம் தங்களுக்கான வாக்காளர்கள் என்பதில் ஒரு தெளிவு இருக்கும். இவர்களின் ஆதரவு வாக்குகளை குறி வைத்துச் செய்யப்படும் செலவுகள் தான் நான் சொல்ல வருவது. 

திமுக, அதிமுக போன்ற கட்சிகள், அவர்களின் பல வருட கட்டமைப்பின் மூலம், சுமார் 2 கோடி வாக்காளர்களைச் சென்றைடைய, தலா ~800 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தத் தொகை என்பது, ஒருவேளை, கட்சித் தலைமை கொடுக்கலாம். இல்லை என்றால், நாம் மேலே பார்த்தபடி, அமைச்சர்கள், வட்ட, கிளை மற்றும் ஒன்றியங்கள் தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு சிறு பங்கை இதற்கு செலவு செய்கிறார்கள். ஏனெனில், இது ஒரு முதலீடு தானே?  அப்படியே பார்த்தாலும், இந்தத் தொகை என்பது பெரிய காட்சிகளுக்கு மிக மிகச் சாதாரணமான செலவு தான். 

ஆனால், மக்கள் நீதி மையம் போன்ற கட்சியை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வாங்கி இருக்கும் வாக்கிற்கு, அவர்கள் சுமார் 50 கோடி செலவு செய்திருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். இது மக்களைச் சென்றைடையும் செல்வு மட்டுமே. இந்தக் கட்சி, வாக்கிற்கு பணம் கொடுக்கவில்லை என்று நம்பப்படுவதால், இவர்களின் மொத்த செலவென்பது மக்களைச் சென்றடையும் செலவு மட்டுமே. அதே போல தான், நாம் தமிழர் கட்சியும். அவர்கள், சுமார் 150 கோடி செலவு செய்திருக்க வேண்டும். வேண்டுமானால், அந்தக் கட்சி மட்டும், பெருவாரியான வாக்குகள் இளைஞர்கள் என்பதால், சமூக வலைத்தளம் வழியாக அவர்கள் வாக்காளரைச் சென்று சேர்வதற்கு ஆகும் செலவை குறைத்திருக்கலாம். ஆனாலும், ஒரு 100 கோடி செலவு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. நேரிடையான பணமாக இல்லாவிட்டாலும் கூட, வேலையை விட்டு, அந்த வருமானத்தில் கட்சிக்கு உழைக்கும் மனிதர்களின் பங்கு என்று பார்த்தால், இது சாத்தியம் என்று தான் தோன்றுகிறது. 

பெரிய கட்சிகள், மிகத் தாராளமாக வாக்கிற்கு பணம் தந்திருக்கிறார்கள். சுமார் 10,000 கோடி பணம் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, திமுக, ~6000 கோடி கொடுத்திருந்தால் (ஒரு வாக்காளருக்கு 3500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்), இது அவர்களுக்கு மொத்த ஆட்சியில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதம் தான். கடந்த 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாவிட்டால் கூட, இது ஒரு சிறு தொகை தான். மாறாக, அதிமுக கடந்த 10 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி. அவர்கள் செய்த செலவு, இந்தப் 10 வருடத்தில் சம்பாதித்ததின் சிறு பங்கு தான்.

எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், மிகச் சுமாராக 15,000 கோடி ரூபாய் பல கைகளுக்குச் சென்றடைந்த ஒரு வர்த்தகம் ஒப்பந்தம் தான் இந்தத் தேர்தல். 

இது தான் கள எதார்த்தம்.

இதில், ஒரு சிறிய கட்சி, ஒரு மனிதரையோ, அல்லது ஒரு சித்தாந்தத்தை மட்டும் வைத்துக் கொண்டோ, போட்டியிடும் எல்லா தொகுதிகளும் கணிசமான வாக்குகள் வாங்கும் எதிர்பார்ப்பு என்பது, வெற்றுக் கனவு மட்டுமே. நடைமுறைக்கு வெகு தொலைவில் இவர்கள் இருக்கிறார்கள். 

இது சரியா? மக்கள் இப்படி பணம் வாங்கலாமா?  இந்தக் கேள்விகளுக்கான அலசல் இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

ஆனால், இது தான் நடக்கிறது.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com