பெரும் பசி
Posted on April 12, 2021 • 1 minutes • 95 words
பெரும் பசி
வயிற்றுப் பசி மட்டுமே
வாழ்க்கை என்றிருந்திருந்தால்
வறண்டதாய் இருந்திருக்கும்
வரலாறுகள் எல்லாம்.
அதுவும் ஒன்று. அவ்வளவே.
வயிற்றின் பசியது
வற்றிய பின், மானுடர்
வளர்க்கும் பசியொற்றியே
வரலாறுகள் இங்கே.
பல கரங்கள் கொண்ட
பயங்கரக் காளியது
பிற பசிகள் என்ற
பெருஞ் சித்திரம்
வயிற்றை நிரப்ப
வேர்களை மட்டுமே
பெயர்ப்பது எளியோனின்
பசி யென்றால்
வரலாற்றை நிரப்ப
ஊர்களையே பெயர்ப்பது
வலியோன் கொள்ளும்
பெரும் பசி
காளிக்கும் கருணை
உண்டு தானே?
உலகப் பசி நீக்கும்
பெரும் பசிகொண்ட
அன்பு உரு வள்ளலாரை
அனுப்பி வைத்தாள்
ஞானத் தேடலாம்
பெரும் பசியுடன்
வள்ளுவன் என்றொரு
பெருவரம் கொடுத்தாள்
சிறுமை சகிக்கா சீற்றமெனும்
பெரும் பசியோடு
வறுமையிலும் உலகுவென்ற
பாரதியைத் தந்தாள்
அது என்னவோ..
பிறன் பசி போக்குவோர்
தம் பசி உணர்வதில்லை
தன் பசி முதன் என்போர்
தயை கரம் உயர்வதில்லை