(கெ)கட வுள்(ளே)
Posted on June 5, 2020 • 1 minutes • 112 words
நீ தூணிலும் துரும்பிலும் இருப்பதாக
எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்
நீ ஒளி நிறைந்து இருக்கிறாய் என்று
உன்னைப் பார்த்தவர்கள் பதறுகிறார்கள்
தொடங்கிய போது நீ ஒன்றே ஒன்றாகவும்
பிறகு, மனிதர்களின் வழியாக,
வெவ்வேறு உருப் பெறுவதாகவும்
விஷயமறிந்தோர் விளக்குகிறாரக்ள்
பகுத்து அறியும் அறிவியல் உன்னை
ஒரு தனித் துகளாகப் பார்க்கிறது
வகுத்துத் தொகுக்கும் அறவியல் உன்னை
பெரும் புவியுடன் சேர்க்கிறது
உனக்கு தோற்றமும் மறைவும் இல்லை
என்று நம்புபவர்கள் பலர்
நீ மீண்டும் உயிர்த்தெழுகிறாய் என்று
நம்புபவர்கள் மற்றும் பலர்
சிலருக்கு மட்டுமே உன்னைக்
காண்பதற்கான திறனும் பயிற்சியும் இருக்கிறது
மற்ற எல்லோருக்கும்,
நீ கொடுக்கும் அனுபவங்கள் மட்டுமே
சிலர், மனிதர்கள்தான் உன்னை உருவாக்கி
உலவ விட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்.
வேறு சிலர், எல்லா மனிதர்களுக்குள்ளும் நீ
வேறொன்றாய் இருப்பதாகச் சொல்கின்றனர்
என்ன அதிசயம்..
கண்டதை மட்டுமே நம்புவோம் என்னும்
எங்கள் ஊரின் பகுத்தறிவுவாதிகள் கூட
உன்னால், (கெ)கட வுள்(ளே) என்பதை
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.