சிந்தனைக் கால் தடம்
Posted on July 23, 2017 • 2 minutes • 329 words
Photo by [Mier Chen][1] on [Unsplash][2]நாம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்து இந்த வலைத் தளத்தை ஆரம்பிக்கும் முன் எனக்குள் இருந்த பல கேள்விகளில் ஒன்று : பிறர் எழுதாததை என்ன எழுதி விடப் போகிறோம்.
இதற்கு பதில் என்ன என்பதை ஓரளவிற்கு புரிந்து கொண்டு தான் எழுதத் தொடங்கி இருக்கிறேன்.
- எழுத்து என்பது ஒரு வகை சிந்தனைக் கோர்வை மற்றும் எண்ணத்தை ஒருமுகப்படுத்துதல். இன்றைக்கு, எல்லாத் திசைகளிலும் இருந்து நம் மீது வந்து விழும் செய்திகளும் தகவல்களும் நமக்கு பரபரப்பை கூட்டிக் கொண்டே இருக்கிறது. இணையம், கைப்பேசி, தொலைக்காட்சி, செயலிகள், வானொலி இப்படி எல்லா வழியாகவும் நமக்குத் தேவை, தேவையில்லாதது என்ற பாகுபாடே இல்லாமல் எல்லாமும் வந்து சேர்கின்றன. இதில் பெரும்பாலான தகவல்கள் நமக்குத் தேவை இல்லாதது. ஆனால், அவை தேவை என்று நம்ப வைக்கப்படும் சூழல். இது நம் மன நிலையை எப்போதும் நகரும் மனநிலையாகவே வைத்திருக்கிறது. எதையும் நின்று நிதானித்து “அறிந்து” கொள்ளக் கூடிய மனநிலை பெரும்பாலும் இல்லை. இந்தச் சுழலுக்குள் இழுக்கப்பட்டுக்கு கொண்டிருக்கிறோம் என்ற ஒரு தெளிவும், இதில் இருந்து விடு பட வேண்டும் என்ற எண்ணமும் தான் முதல் விஷயம்.
- ஒரு பிரச்சனையோ அல்லது துறையோ அல்லது சித்தாந்தமோ, அதைப் பற்றிய ஆழ்ந்த அனுபவமும், ஆக்கபூர்வமான பங்களிப்பும் கொடுக்க வேண்டுமானால், முதலில் அதைப் பற்றி கற்றுக் கொண்டு, அதில் அனுபவம் பெற்று, அல்லது அதில் அனுபவம் உள்ளவர்களிடம் கற்றுக் கொண்டு, பிறகு அதில் உள்ள குறை நிறைகளை சிந்தித்து, ஒரு சிந்தனை ஆளுமையாகத் திகழ்வது. எழுத்து அப்படி ஒரு நிலைக்கு நம்மை உந்தித் தள்ளுகிறது என்று நம்புகிறேன். இது மணலில் மிதிவண்டி ஓட்டுவது போல. முதலில் தடுமாறும். சில நேரம் அதன் போக்கில் விட்டுவிட்டால் பின்பு சீராகி விடும். எழுத்தும் அப்படித்தான். ஆரம்பிக்கும் போது ஒரு இலக்கில்லாமல் இருக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அது புலப்படும். இலக்கு என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது இல்லாமேலே கூட இருக்கலாம். அது எழுதுபவரின் விருப்பம்.
- அடுத்து… ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு. பெரும்பாலும், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், குறுந் தகவல்கள் விரும்பிகளாக இருப்பவர்கள். இது போன்ற குறுந் தகவல்கள் நம் நேரத்தை நிரப்பக்கூடிய விஷயங்கள் மட்டுமே. நமக்கு ஒரு அர்த்தமுள்ள அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய அளவிற்கு தகுதியுடைய விஷயங்கள் அதில் வெகு குறைவே. அதுவும் இப்போது அதிகமாக காணொளி வழியாக தகவல்கள் பரிமாறப்படுகிறது. அது நம் சுய சிந்தனையை மற்றும் கற்பனை வளத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதாகவே இருக்கிறது. அதைத் தாண்டி, பல பக்கங்கள் இருக்கும் பதிவுகளையோ, கட்டுரைகளையோ படிப்பவர்கள், மேம்போக்காக வாசிக்கும் மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறார்கள். இவர்களுக்கு ஒரு தேடல் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களின் நட்பைத் தான் ஆரோக்கியமான நட்பு வட்டம் என்று சொன்னேன். இது ஒரு ஆச்சர்யமூட்டும் திறவுகோல். இது வரை நேரில் சந்தித்திராத மனிதர்களிடம் நேரிடையாக பேசுவது போன்ற ஒரு வாய்ப்பு. ஒத்த கருத்து உடையவர்களாயின், அவர்களுடன் நம்மை அறியாமல் நிகழும் மனப் பிணைப்பு.
<div>
</div>
இவையெல்லாம் தாண்டி, இது, பொது வெளியில் இருக்கும் என் சிந்தனைக் கால் தடம்.