ஒரே ஒரு வாசகன்
Posted on July 23, 2017 • 2 minutes • 272 words
சரியாக ஒரு வருடம் ஆகி விட்டது இதில் எழுதி. இந்தத் தளத்தை வழங்கும் நிறுவனத்தில் இருந்து மாற்றி வேறு ஒரு முறையில், வீட்டில் இருந்தே வழங்கச் செய்ய எடுத்த முயற்சிகள் வேறு வேலைகளால் கால தாமதம் ஆகி, இப்பொது ஒரு வழியாக மீண்டும்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கிறது. சிலதைச் எந்தச் சலனமும் இல்லாமல் சட்டெனக் கடக்கிறோம். சில வகை வாழ்நாள் பாடங்கள். இப்படிப் பல விஷயங்களில், பகிர்ந்து கொள்ளத்தக்கதென இருப்பதை நம் அனுபவங்களுடன் சேர்த்து தொடர்ந்து எழுதுவது என்பது, ஒரு பெரிய முனைப்பும், ஒழுங்கும் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், நான் எழுதுவதை எதிர் நோக்கி பல பேர் காத்திருக்கிறார்கள் என்றெல்லாம் இல்லை என்பதனாலும், அப்பறம் பண்ணலாம் என்று விட்டு விட்டேன். ஆனால், இரண்டு வாரம் முன்னால், ஒரு அனுபவம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால், LinkedIn தளத்தில் என் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரு நபருக்கு, அவர் புதியதாக ஆரம்பிக்கும் நிறுவனத்திற்காக வாழ்த்துச் சொன்னேன். அந்த வாழ்த்திற்கு நன்றி சொல்லி பதில் வந்தது. கூடவே, “என்ன சார், குமார் பக்கம் தளம் போனால் வேறு ஒரு தளத்திற்குப் போகிறது” என்றார். ஆமாம். அதை சரி செய்யும் வேலை இருக்கிறது. செய்ய நினைத்து இன்னும் கிடப்பில் இருக்கிறது. சரி செய்கிறேன் என்று சொன்னேன். எனக்கு உண்மையாகவே சந்தோசம். நம்ம எழுதறத படிக்கணும்னு ஒரு மனுஷன் சொல்றத கேட்டதும், என்னெ ரொம்ப நல்லவேன்ன்னு சொல்லிட்டாங்க என்று வடிவேலு அழுத மாதிரி ஆகிப் போனது.
வேடிக்கையைத் தள்ளி விட்டுப் பார்த்தால், பல நேரங்களில், தனி மனிதனான என்னால் என்ன பெரியதாகச் செய்து விட முடியும் என்று நினைக்கும் மனிதர்கள் உள்ளார்கள். அல்லது, மாற்றினால் உலகத்தையே மாற்றும் சமயம் வரும் வரை காத்திருக்கிறேன் என்று சொல்பவர்களும் உண்டு. இது இரண்டுமே எதிர் எல்லைகள். நடைமுறையில், மாற்றம் என்பது ஒரு சின்ன தொடர் தீப்பொறி போல. ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம், பின்பு மற்றொருவரிடம், இப்படி ஒவ்வொரு அடியாக நகர்வது தான். பிறரை ஊக்குவிப்பது என்பதும் இப்படித் தான்.
நான் எழுதுவதை எதிர் நோக்கி பல பேர் காத்திருக்கிறார்கள் என்றெல்லாம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், ஒரே ஒரு வாசகன் இதை நினைவு கூர்ந்து கேட்டது கூட என் சோம்பேறித்தனத்தை தகர்த்து விட்டது. அதனால், இன்னும் சில மாதங்கள் கழித்து சரி செய்யப்பட்டிருக்கும் என் வளைத்தளம், முற்றிலும் என் சிந்தனையையும், நேரத்தையும் செலுத்தியதால் இன்று சரி செய்தாகி விட்டது.
சக மனிதர்களின் முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுங்கள். அவர்களின் மனதில் அது ஒரு பெரும் மாற்றத்தை நிகழ்த்தக் கூடும்.