உதவி
Posted on June 1, 2016 • 6 minutes • 1177 words
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நான்கு சாலை சந்திப்பு அது. வாகனங்கள் எப்போதும் போய் வந்து கொண்டிருக்கும். ஆறு மாதத்திற்கு முன்னால், சிக்னலுக்காக நிற்கும் இடத்தில், தொடர்ந்து ஒரு 3 அல்லது 4 வாரம், ஒரு பெண் – சில சமயம் ஆண், எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள். கையில் ஒரு அட்டை. “Homeless. Need to support the family. Please help. God bless”. இது தான் அந்த வாசகம். இந்த சிக்னலுக்கு பக்கத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கும். அங்கே தான் இவர்கள் தங்கிக் கொள்கிறார்கள். இரண்டு ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு நாய். இது தான் அந்தக் குடும்பம். சில நேரம் பக்கத்துக் கடையில் இருந்து உணவு வாங்கி வருவதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் சில நேரம் அந்தப் பெண் புகை பிடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்ததுண்டு.
இன்னொரு முறை, ஒரு பெண், ஒரு கைக்குழந்தையுடன் உதவி கேட்டு நின்று கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு முறை இவர்களைப் பார்க்கும் போதும், எங்கள் வீட்டில் ஒரு உரையாடல் நடப்பது உண்டு. அவர்களின் நிலையின் மீது எங்கள் எல்லோருக்கும் பொதுவான கருணையும், பரிதாப உணர்ச்சியும் இருந்தாலும், ஏன் அவர்கள் இப்படி நிற்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பார்கள் என்பதைப் பற்றி எங்கள் உரையாடல் போகும். ஏன் இப்படி வந்து ரோட்டில் நின்று உதவி கேட்க வேண்டும், அதற்கு எங்காவது போய் வேலை செய்தால் பணம் கிடைக்கும் அல்லவா.. அப்படி செய்யலாம் தானே என்பதும் எங்கள் எண்ணம். மேலும், என்ன மாதிரி சந்தர்பங்கள் மற்றும் செலவுப் பழக்கங்கள், நம்மை தவறான பொருளாதார நிலைக்குத் தள்ளி விடும் என்பதனை பையனுடன் பேச உதவும் தருணங்கள் இவை.
ஒரு முறை இவர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். அதன் பின், பணமாக கொடுக்க விரும்பவில்லை. சில நாட்கள் வைத்து சாப்பிடும் வகையில் உணவு, ஜூஸ் இப்படி எதாவது வாங்கிக் கொடுப்பது உண்டு. பிற மனிதர்கள் இது போல உதவி செய்வதைப் பார்த்துள்ளேன்.
இந்த வாரம் .. ஒரு ஆண். கையில் ஒரு அட்டை. “Lost job. I can do any work. Willing to work any job. Please help”. ஒரு வாரமாக இந்த மனிதனைப் பார்க்கிறேன். இன்னும் வந்து நின்று கொண்டிருக்கிறார். பார்க்க அழுக்காக இருக்கும் இந்த மனிதனை யார் நம்புவார்கள் என்று தெரியவில்லை.
இதைப் பார்த்த போது, எங்கள் உரையாடல் நினைவு வந்தது. வேலைக்கு போகாமல் பணம் கேட்டு நின்றதை தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது ஒரு மனிதன் வேலை கேட்டு ஒரு வாரமாக நின்றும், யாரும் இன்னும் வேலை கொடுக்கவில்லை. பணம் கேட்டிருந்தாலாவது அவ்வப்போது யாராவது கொடுத்திருப்பார்கள். ஒருவேளை சேமிப்பாக எதாவது வைத்திருக்கலாம், தெரியவில்லை. போய் கேட்கலாம் தான். இவருக்கு கொடுப்பதற்கு வேலை ஒன்றும் என்னிடம் இல்லை. அப்படி இருக்கையில், போய் இதெல்லாம் கேட்டு விட்டு, சும்மா நான் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன் என்று சொல்ல மனமில்லை.
கடந்த சில வருடங்களில் மட்டும், அமெரிக்காவில், லட்சகணக்கான மக்கள் வீடுகளை இழந்து, பிறரின் வீடுகளிலும், உதவி மையங்களிலும் தங்குகிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.
Living beyond means என்று சொல்வார்களே. அது இங்கே மிகவும் சாதாரணம். Capitalism என்ற தத்துவத்தின் அடிப்படையில், இங்கே எல்லாமே வணிக நோக்கம் தான். (நம் ஊரிலும் இப்பொது இது அப்படியே பின்பற்றப்படுகிறது.) உதாரணமாக, ஒருவர் வீடு வாங்கும் போது, அவருக்கு கூறப்படும் ஆலோசனை, வாங்கும் சம்பளத்தில் வீட்டுக் கடனுக்கு கட்டவேண்டிய பணம் (வரிக்கு முந்தய வருமானம்) 40% – 45% இருக்கலாம் என்பது. இது ஒரு மிகப்பெரிய பொருளாதார ஆபத்து. வாங்கும் சம்பளம் 30 லட்சம் என்று வைத்துக் கொள்வோம், எனவே, மாதம் 2.5 லட்சம். இதில் 40 – 45% என்றால் 1.12 லட்சம். இதை வைத்து, வங்கி, வீடு விற்கும் நிறுவனம் இப்படி எல்லோரும் பெரிய நம்பிக்கை கொடுப்பார்கள். உங்க வருமானத்திற்கு ஒரு கோடி மதிப்புள்ள வீடு கூட வாங்கலாம் என்பார்கள். பெரும்பாலும், வரிக்குப் பிந்தைய வருமானம், 75% – 80% தான் இருக்கும். அப்படிப் பார்த்தால் 22.5 லட்சம் தான் சம்பளம். மாதம் 1.875 லட்சம். conservative approach என்பது உங்கள் வரிக்குப் பிந்தைய சம்பளத்தில் 25% சதவிகிதம் தான் வீட்டுக்கு கட்டும் கடனாக இருக்க வேண்டும். ஆக, சுமார் 45 ஆயிரம். 1.12 லட்சம் எங்கே, 45 ஆயிரம் எங்கே? இப்படி ஆசை காட்டி காட்டித் தான், எவ்வளவு சுமக்க முடியுமோ அதற்கு இரண்டு / மூன்று மடங்கு எடுத்துக் கொண்டு, பின் ஒரு நாள் வேலை போய், வீட்டு விலை வீழ்ந்து போய் விட்டால், வீட்டை இழக்க வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்படுகிறார்கள்.
திடீரென ஒரு 500 அல்லது 1000 டாலருக்கு ஒரு செலவு வந்தால், 60 – 65% அமெரிக்கர்கள் தங்கள் கையில் இருந்தோ, சேமிப்பில் இருந்தோ செலவழிக்கும் அளவு கூட வைத்திருப்பதில்லை என்று இன்னொரு புள்ளி விபரம் கூறுகிறது. நாம், எதிர்காலத்தை நினைத்துக் கொண்டே, நிறைய செலவுகளை தவிர்த்து, எல்லாவற்றையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற பெரும்பான்மையான நம்பிக்கையில் இருந்து வந்தவர்கள். அதற்கு மாறாக, இவர்கள், அன்றைய நாளுக்கான சந்தோசங்களில் மட்டும் கவனம் செலுத்தி எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள்.இந்தியா போன்ற நாடுகள் “எல்லாம் இன்றே செலவு” கலாச்சாரத்திற்குக் மாறிக் கொண்டிருப்பதும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருளாதார நிர்பந்தங்களால் (சிலர்) கூட்டுக் குடும்ப முறையை பின்பற்ற முயல்வதும், அதிகம் சேமிக்க விரும்புவதும் சுவாரிஸ்யமான விஷயம்.
இவை எல்லாம் பொதுவான புள்ளி விபரங்கள் தான். நான் மேலே சொன்ன குடும்பதிற்கு ஏன் இப்படி ஒரு நிலை என்று தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்வது நல்லது. அது, Proper financial planning என்பது சாதாரணமான விஷயமல்ல என்பது தான். ஒரு சிறு சறுக்கல் கூட, மீண்டு வர முடியாத அளவிற்கு நம்மைத் தள்ளி விடலாம். இந்த சறுக்கல்கள் மற்றும் தவறுகளுக்கு, சரியான பொருளாதாரத் திட்டம் இல்லாமல் போவது, வருமானத்தை வளர்த்திக் கொள்ளும் வழிகளை ஆராயாதது, சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லாதது, பேராசை, தவறான நம்பிக்கைகள், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளாத தன்மை, இப்படி பல காரணங்கள் சொல்லலாம்.
அமெரிக்கர்களை காப்பாற்றுவது எப்படி என்று சொல்வதல்ல என் நோக்கம். அவர்களைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி Donald Trump ம், Hillary Clinton ம் (தங்களுக்கு) தீவிரமாக பணம் சேர்த்துக் கொண்டிருகிறார்கள். 🙂
நான் சொல்ல வந்தது…
இப்படி பாதிக்கப்பட்டவர்கள், நம்மிடம் நேராக உதவி கேட்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது, எப்போது, யாருக்கு, எப்படி உதவுவது என்பது மிக மிக நுட்பமான விஷயம். சிக்கல் நிறைந்ததும் கூட. இதைத் ஓரளவிற்குத் தெளிவாகப் புரிந்து கொள்ள எனக்கு சுமார் 15 வருடங்கள் ஆகி இருக்கிறது.
பணத்திலும் சரி, வழிகாட்டுதலிலும் சரி, என் ஒவ்வொரு நகர்விலும் எதாவது ஒரு மனிதரின் உதவி தேவையான நேரத்திற்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். எனவே, யார் எந்த உதவி கேட்டாலும், இன்று என்னால் அதைச் செய்ய முடியும் அளவிற்கு இருந்தால், அதைச் செய்வது நம் பொறுப்பு என்ற நிலையில் செய்திருக்கிறேன். எப்போது, யாருக்கு, எப்படி உதவுவது என்ற புரிதல் இல்லாமலேயே. ஏனெனில், ஒவ்வொரு முறையும், அது என் emotional decision ஆக மட்டுமே இருந்திருக்கிறதே ஒழிய, தெளிவான analysis இருந்ததில்லை. பல அனுபவங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த விஷயங்கள் என்னவென்றால்,
அடிப்படையில், உதவி என்பதை இரண்டு வகையாகப் பிரித்து விடலாம்.
- எந்த ஒரு பலனையும் திரும்பப் பெற நினைக்காமல் நாம் செய்யும் உதவி
- நாம் செய்ததற்கு பலனை எதிர்பார்த்து நம்மால் செய்யப்படும் உதவி
எல்லா உதவிகளையும் இந்த இரண்டு விஷயத்திற்குள் அடக்கி விடலாம்.
நாம் பலனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவிகள் நமக்கு எளிமையானவை. அது பணமாக இருக்கலாம், நம் நேரம் அல்லது உழைப்பாக இருக்கலாம், உதவி என்ன என்பதை வாங்குபவர்கள் தீர்மானிக்கலாம், அல்லது கொடுபவர்கள் தீர்மானிக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இந்த வகை உதவிகளில், நம்மிடம் உதவி பெறுபவர்கள் அதை திருப்பி செய்யவில்லை என்றால், அது நம்மை பாதிக்காது. அதே போல, நாம் உதவும் அந்தக் கண நேரம் தான் நாம் அதைப் பற்றி நினைப்போம். மேலும், அது நமக்கு மன நிறைவைத் தரக்கூடியது. ஏனென்றால் இந்த வகை உதவிகளில், நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பு என்பது நம் மன நிறைவையும், திருப்தியையும் தவிர வேறு அல்ல. ஆபத்து காலத்தில் உதவுவதும் இந்த வகை தான்.
ஆனால், இரண்டாவது வகை உதவி என்பது, வெறும் emotional instinct மட்டும் வைத்து செய்யக் கூடியதல்ல. அப்படிச் செய்தால், அதைப் போல நம்மை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயல் எதுவும் இல்லை. எப்போது ஒரு எதிர்பார்ப்பு வைக்கிறோமோ, அப்போது ஏமாற்றத்திற்கும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த வகை உதவிகள்,
– வெறும் அனுதாபமும் பரிவும் மட்டுமே வைத்து முடிவு எடுக்கக் கூடியது அல்ல. உதவி பெறுபவரின் நிலை, நமக்கு அவரிடம் உள்ள அனுபவம் / அனுபவமின்மை, நாம் செய்யும் உதவிக்கு நாம் அவரிடம் எதிர்பார்க்கும் பலனை கொடுக்கக் கூடிய சாத்தியகூறுகள், எவ்வளவு விரைவாக நாம் திருப்பி எதிர்பார்கிறோம், அதற்கு உத்திரவாதம், இப்படி பல விஷயங்களை ஆராய்ந்த பிறகே செய்வது நல்லது.
– சரி. இப்போது உதவுது என்று தீர்மானித்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம். நம் உதவி என்பதன் அளவுகோல் என்ன? அது, நாம் எந்த அளவு ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்பதைப் பொருத்தது. உதாரணமாக. நம்மிடம் ஒருவர் ஒரு 1 லட்ச ருபாய் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 1 லட்ச ரூபாயையும் நாம் அவரிடம் இழக்கும் சூழ்நிலை வந்தால், அது நம் தூக்கத்தை, நிம்மதியைத் தொலைக்காது என்று நம்பினீர்கள் என்றால், அதைக் கொடுக்கலாம். ஆனால், 10 ஆயிரம் போனால் பரவில்லை, 90 ஆயிரம் திரும்ப கண்டிப்பாக வேண்டும் என்று நினைத்தால், 10 ஆயிரம் தான் அளவுகோல். மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் ஆராய்ந்து விட்டு, பிறகு வெளிப்படையாக, உங்கள் முடிவு 10 ஆயிரம் கொடுப்பது என்று சொல்லி அதைச் செய்யலாம். Handling the worst என்ற முறை தான் இந்த வகை உதவிகளில் நாம் செய்யக் கூடியது. ஒருவேளை, ஒரு ருபாய் இழந்தாலும் தூக்கம் வராதவரா நீங்கள்? நாகரீகமாக மறுத்து விடுவது நல்லது. எதாவது ஒன்றை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஒன்று கேட்பவரின் பரிச்சயம் / நட்பு. அல்லது நீங்கள் செய்யும் உதவி (பணம், நேரம், etc). இதில் உங்கள் மதிப்பு எதன் மீது அதிகம் என்பதைப் பொருத்தும் உங்கள் முடிவு இருக்கிறது.
– அடுத்து, second / third opinion கேட்டுச் செய்வது நல்லது. உங்கள் வீட்டில் ஒருவரிடமோ அல்லது நல்ல நண்பர்களிடத்திலோ கருத்து கேட்கும் போது, அந்த உரையாடல்களில் வழியாக புதிதாக ஒரு perception கிடைக்கலாம். நாம் வேறு வகையில் உதவி செய்வதற்க்கு ஒரு வழி தோன்றலாம்.
நாம் உதவி என்று போகும் போது, நாம் கேட்கும் விஷயங்களையெல்லாம் எதுவுமே கேட்காமல் கொடுக்கும் நட்பைப் பெறுவதற்கும், அப்படிபட்ட நட்பாக இன்னொருவருக்கு நாம் இருப்பதும் மிகப் பெரிய வரம். ஆனால், அப்படிப்பட்ட நட்பு அமைவதும், நம்பிக்கை வருவதும் ஒன்று இரண்டு நாட்களில் வருவது அல்ல. அது ஒரு process.
அப்படி இல்லாத மற்ற அறிமுகங்கள் எல்லோரிடமும், ஆராய்ந்து பார்த்து உதவுவது தான் நல்லது.
Photo by Tim Mossholder on Unsplash