குமார் பக்கம்
May 29, 2016

அன்றும், இன்றும்

Posted on May 29, 2016  •  6 minutes  • 1123 words

ஒரு வருஷம் முன்னாடி, ஒருநாள் .. காலை மணி 7:55. என் பையன் இந்த நேரத்துக்கெல்லாம் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்க வேண்டும். இன்று நேரம் ஆகிவிட்டது. நானும் அவனும் காருக்கு ஓடினோம். போய் காரை கிளப்பினால், எரிபொருள் சுத்தமா இல்லை. நிரப்பனும் என்று இருந்தேன். இப்போ என்ன செய்வது? பையன் சொன்னான். “டாடி.. வேகமாக நடந்தால் சரியான நேரத்துக்கு போயிடலாம்.” . சரி. வா .. ஓட்டமும் நடையுமாக 10 நிமிட நடை. சரியாக பெல் அடிக்கும் நேரத்தில் பள்ளியில் இருந்தோம். போகும் வழியில், என் பையனுக்கு ஒரே பதை பதைப்பு. ஏன் என்றால், தாமதமாகப் போனால் “Responsibility slip” கொடுத்து விடுவார்கள். அது என்னனா, உன் பொறுப்பில் இருந்து தவறி விட்டாய் என்று பொருள். தொடர்ந்து இது போல 6 அல்லது 7 வாங்கினால், பிறகு வீட்டிற்குத் தெரிவிப்பார்கள். அவனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பும் போது, மனது அப்படியே என் பள்ளி அனுபவங்களை நினைவு கூர்ந்தது.

5ம் வகுப்பு வரை, பள்ளியும் வீடும் ஒன்று தான். அதனால் தாமதமாகப் போவது, அதற்கு தண்டனை என்பதெல்லாம் நினைவில் இல்லை. 6 முதல் 12 வரை உடுமலைப்பேட்டையில் தான் பள்ளி. பேருந்தில் தான் செல்ல வேண்டும். அது தாமதமாக வந்தால் பிரச்சனை இல்லை. ஏன் என்றால் கூட பயணிக்கும் பிற மாணவர்களும் சேர்ந்து எல்லோரும் ஒன்றாகப் போனால், பள்ளியில் தண்டனை இல்லை. அப்படி இல்லாமல், வேறு காரணங்களுக்காக, நாம் மட்டும் தாமதமாக, தனியாகப் போனால், வாசலில் ஒரு ஆசிரியர் கையில் பிரம்புடன் நிற்பார். தாமதமாக வரும் நமக்கு ஒரு சுளீர் கிடைக்கும். அதனால் தாமதமாகப் போவதற்கு எங்களுக்கு “பயம்”.

இந்த இரண்டிற்கும் ஒரு அடிப்படை ஒற்றுமையும் வித்தியாசமும் உண்டு. ஒற்றுமை: பயம். வேறுபாடு : எதைப் பற்றிய பயம் என்பது. நான் பள்ளியில் படிக்கும் போது, எங்கள் பயம் எல்லாம் அடி விழும் என்பது தான். என் பையனுக்கோ, அவன் பள்ளியில் கற்றுக் கொடுக்க முயல்வது, பொறுப்பில் இருந்து தவறி விடுவது தவறு என்று. எனவே தான், நேரம் தவறாமை என்பதை நமது “பொறுப்பு” என்று பள்ளியின் போது கற்றுக் கொண்டேனா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குழந்தை வளர்ப்பு மற்றும் பள்ளி: இந்த இரண்டு விஷயங்களில், நம் குழந்தைகள் அனுபவத்திற்கும், நம் அனுபவங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இந்த வேறுபாடுகள் இடத்திற்கு தகுந்தாற்போல் இருக்கிறது.

நான் பள்ளியில் படிக்கும் போது கற்றுக் கொடுக்கப்பட்ட விதம்,

  1. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, சொன்னால் சொன்னதைச் செய்ய வேண்டும். ஏன், எதற்கு என்ற கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது
  2. தவறு செய்தால், அடி உண்டு (என் பெற்றோர் என்னை அடித்ததே இல்லை. பள்ளியில் தான் வாங்கியிருக்கிறேன் 🙂 )
  3. வெளி உலக தொடர்பிற்கான வாய்ப்பும், அதில் நம் விருப்பமும் மிகவும் குறைவு.
  4. ஆசிரியர்களின் கண்டிப்பு எவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ அவ்வளவு நிம்மதி பெற்றோருக்கு :). ஒருமுறை என் அப்பா ஒரு ஆசிரியரிடம் சொன்னது : “கண்ண மட்டும் விட்டுட்டு தோல உரிச்சிருங்க.” இதை இன்று என் பையனிடம் சொன்னால், “இதுல லாஜிக்கே இல்லையே” என்கிறான். 🙂

ஆனால், இன்று, (பெரும்பாலான வீடுகளில்),

  1. குழந்தைகளுக்கு கேள்வி கேட்கும் உரிமை நிறைய கொடுத்திருக்கிறோம்.
  2. கண்டிப்பு என்பது வார்த்தைகளின் மூலம் தான். வீடுகளில் குழந்தைகளை அடிப்பது என்பது இன்று நான் அவ்வளவாக கேள்விப்படுவதில்லை.
  3. விரல் சொடுக்கினால் நல்லது கெட்டது என்று அனைத்தும் சில வினாடிகளில் இணையம் வழியாகப் பார்க்க முடியும்
  4. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி என்பது இன்று ஒரு மாறுபட்ட இடம். அவர்கள் குழந்தைகளை கண்டிப்பதில் ஒரு எல்லையோடு நின்று கொள்கிறார்கள். அதைத்தான் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். பள்ளிகளில் அடிப்பது என்பதும் இன்று குறைந்திருகிறது (பெரும்பாலான இடங்களில்).

இதில், பொதுவாக இந்த முறை தான் சரி, இது தவறு என்று சொல்வதற்கில்லை. இது ஒரு கால மாற்றம். அவ்வளவு தான். இதில் எது எல்லாம் நல்ல மாற்றம், எது எல்லாம் நல்லது இல்லை என்று வேண்டுமானால் பார்க்கலாம். அதே போல் எல்லா இடங்களிலும் இந்த மாற்றம் வந்து விட்டது என்றும் சொல்வதற்கில்லை.

கல்வி பற்றிய விழிப்புணர்வு இன்று மிகவும் நன்றாக உள்ளது. அவ்வளவாக வசதி இல்லாதவர்களும், படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்கள் குழந்தைகள் நல்ல கல்வி கற்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல, பெண்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதும் இன்று பெரும்பாலான இடங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போல, சமச்சீர் கல்வியின் தேவை பரவலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதன் முக்கியத்துவமே, புரிந்து படிக்கக் கற்றுக் கொடுப்பது தான். ஆனால், அரசியல் காரணங்களுக்காக இது சரியாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்று தெரிகிறது.

இன்ஜினியரிங், மருத்துவம் தாண்டி மற்ற பிற பாடங்களும் வாய்ப்புகளும் இருக்கின்றன என்று உணரத் தொடங்கியிருகிறார்கள். இதுவும் நல்ல மாற்றம் தான். முற்றாக இது மாறவில்லை என்றாலும், இது ஒரு நல்ல ஆரம்பம் தான்.

பொதுவாக, இன்றைய அறிவியலும், அரசியலும் நம் புற எல்லைகளை விரிவு படுத்திக்கொள்ள மிகவும் உதவுகின்றன. ஆனால், மனதாலும், உண்மையான மகிழ்ச்சி எது என்பதிலும் நம் எல்லைகளை சுருக்கிக் கொண்டே வருகிறோம் என்பது மேற்சொன்ன எல்லா நல்ல மாற்றங்கள் கூடவே கொஞ்சம் அக்கறையோடு கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

அவற்றில் சில..

இன்று, ஒவ்வொரு குடும்பமும் ஒரு individual micro unit. தனியாகவே இருக்க விரும்புகிறார்கள். தங்களின் வேலை, வசதி, நட்பு, வசிக்கும் இடம், குழந்தைகளின் படிப்பு நிலை, தங்களின் சுதந்திரத்திற்கான முக்கியத்துவம் என்று இது போன்ற பல ஏற்றத் தாழ்வுகளால், ஒரு தனித்துவமான நிலையிலேயே இருக்க விரும்புகிறார்கள். சகோதர சகோதரி குடும்பங்களுக்குள்ளேயும் இது தான் நிலை. இதனால் எல்லோருக்குமே ஒரு self-centeredness வந்து விடுகிறது. இது, எல்லோரிடமும், குறிப்பாக குழந்தைகளிடத்தில் சகிப்புதன்மையை குறைக்கிறது.

இப்போதெல்லாம், பள்ளிகளில், குறிப்பாக நம் ஊரில், ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தையை ஒப்பிடுவது என்பது ஒரு சிஸ்டம் ஆகவே நடக்கிறது. 10th, 12th போன்ற தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் வாங்கிய மாணவன் / மாணவி க்கு கட் அவுட் வைக்கும் நிலையும் சாதாரணம். இதோடு நிறுத்தினால் பரவாயில்லை. மற்றவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இது சமீப காலமாக (ஒரு 10 – 15 வருடத்தில்) வந்த வருத்தப் படவேண்டிய மாற்றம். எப்போதுமே, 10 முதல் 12 வரை படிக்கும் குழந்தைகளுக்கு உலகில் இந்த இரண்டு வருடங்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அப்படி உழைக்கும் மாணவர்கள் / மாணவிகள், ஒரு சில மதிப்பெண்கள் குறைந்தால் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்கிறோம். அவர்களை இந்த நிலைக்குத் தள்ளுவது பள்ளி மற்றும் பெற்றோர்களின் தவறான ஒப்பீடும், நிர்பந்தமும் தான். திறன், அறிவு இவை இரண்டைப் பற்றியும் ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தையை ஒப்பிடிவது போல தவறு வேறு எதுவும் இல்லை. சரியான ஒப்பீடு என்பது அந்த மாணவனின் முந்தைய performance க்கும் இப்போதைய performance க்கும் தான் இருக்க வேண்டும். உதாரணமாக, போன பரீட்சையில் நீ 100 க்கு 80 வாங்கினாயா, இப்பொது 100 க்கு 85 வாங்கி இருக்கிறாயா, சபாஷ்.. அடுத்தது 95 க்கு முயற்சி செய் என்பது தான் சரியான ஒப்பீடு. இது இரண்டு விஷயத்தைக் கற்றுக் கொடுக்கும். ஒன்று self-assessment. இரண்டு self-improvement. பக்கத்து வீட்டுப் பையன் முதல் மதிப்பெண் வாங்கினால், அதைப் பாராட்டுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அதை “நீயுந்தான் இருக்கியே?” என்று ஆரம்பிப்பதற்கு பதிலாக, அதற்கு அவன் போட்ட உழைப்பு அதிகம் என்பதை நம் பிள்ளைக்கு புரிய வைத்தால், அது தான் வெற்றி. நாம் அதோடு நிறுத்திக் கொள்ளலாம். குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

என் பையனின் வகுப்பிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அந்த அறையில் ஒரு போஸ்டர். அதில் உள்ள வாசகம் இது. “Everybody is a genius. If you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid”. என் குழந்தை மீனாக இருந்தால், அது நீந்தும் அழகை ரசிப்பதை விட்டு விட்டு, புது நீர் நிலைகளை காட்டுவதை விடுத்து, நீ ஏன் மரம் ஏற மாட்டேன் என்கிறாய் என்றால் அது என்ன செய்யும்? பெற்றோர்களின் பதை பதைப்பு, என் குழந்தை நல்ல வருமானம் உள்ள வேலைக்கு சென்று நல்லா இருக்கனும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நம் ஆசைகளை அவர்களிடம் திணிப்பது தான் கொடுமை. நான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன், என்னால முடியல, நீயாவது அதுக்குப் படி என்பது போல. இதில் அவர்களுக்கும் விருப்பம் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கவிதை தான் தன் அத்தனை நேசிப்பும் என்று வாழும் ஒரு பையனையோ பெண்ணையோ, நீ என்ஜினியர் ஆகு என்று சொன்னால், அவர்கள் ஒருவேளை அதில் பாஸாகி விடலாம். ஆனால் ஒரு வைரமுத்துவையோ, நா.முத்துகுமாரையோ இந்த உலகம் பார்க்காமல் போகலாம். அமெரிக்காவில் இந்திய மற்றும் சீன பெற்றோர்களிடம் ஒரு பொதுவான பழக்கம் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளை குறைந்தது ஒரு 5 extra-curricular விஷயங்களில் கலந்து கொள்ள வைக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு இது ஒரு தண்டனை. டென்னிஸ், கிரிக்கெட், baseball இப்படி ஒரு 2 அல்லது 3 விளையாட்டுக்கள். பிறகு கணக்கு, அறிவியல் என்று மேலும் சில வகுப்புகள், இப்படி “எத்தனை அடிச்சாலும் தாங்கறான், ரொம்ம்ப நல்ல பையன்” என்கிற ரேஞ் ஆகிவிடுகிறது அந்த குழந்தைக்கு. பையன் சச்சினாகவும் வேண்டும், பெடெரெர் ஆகவும் வேண்டும் என்றால் என்ன செய்வான்?

கல்வி என்பது வேலைக்கான பயிற்சி மட்டுமே அல்ல. அது வாழ்வியல் அறிமுகமாக இருக்க வேண்டும். இன்று, வேலைக்கான பயிற்சி வேண்டுமானால், on demand பயிற்சித் தளங்கள் நிறைய உள்ளன. YouTube, Khan Academy போன்றவற்றில் ஆயிரக்கணக்கான பயிற்சிக் காணொளிகள் உள்ளன. வெல்டிங் செய்வதில் இருந்து விவசாயம் செய்வது வரை, ஒரு விஷயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு 10 மணி நேரம் செலவழித்தால் போதும், அதன் அடிப்படை விஷயங்களைப் பற்றிய புரிதல் கிடைத்து விடும். இதை நான் வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். பள்ளிக்கு போக வேண்டியதில்லை.

இன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு கூட தன்னைப் பாதுகாக்கும் விஷயத்தைத் தான் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதைக் கற்றுக் கொடுக்காமல் அறிவாளி ஆக்குவதில் என்ன இருக்கிறது. அதனால் தான், இன்று சின்னக் குழந்தைகள் கூட ஆசிரியர்களிடமே பாலியல் கொடுமைக்கு ஆளாவதைப் பார்க்கிறோம்.

எனவே, பள்ளியின் பொறுப்புகள்: சமூகம், அரசியல், நம் பண்பாடு, பிறருடன் சேர்ந்து வேலை செய்தல், உடல் மனம் பற்றிய உளவியல், தற்காப்பு இதெல்லாம் கற்றுக் கொடுப்பது தான் அடிப்படை. அதைக் கற்றுக் கொடுத்து விட்டு, அதற்குப் பிறகு வேலைக்கான மற்ற விஷயங்கள் கற்றுக் கொடுக்கலாம். இந்தத் தேவை முன்னை விட இப்போது மிகவும் அவசியம்.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com