உங்கள் வாழ்க்கையின் கதை மாந்தர்கள் யார்?
Posted on October 9, 2015 • 4 minutes • 793 words
Gifted Hands என்று ஒரு படம். இப்பொது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்கும் Ben Carson என்ற ஒரு மருத்துவரின் வாழ்க்கை தான் இந்தப் படத்தின் கதை. நண்பர் சாந்தகுமார் தான் இந்த படத்தைப் பற்றி சொன்னார். அவருக்கு நன்றி.
Netflix இல் இந்தப் படம் இருக்கிறது. இல்லை என்றால் Amazon இல் கிடைக்கும். அப்படியும் இல்லை என்றால், இன்டர்நெட் இருக்கவே இருக்கிறது. தேடினால் யாராவது எங்காவது upload செய்து வைத்திருப்பார்கள். கண்டிப்பாகப் பாருங்கள். கொஞ்சம் வயது வந்த குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் சேர்ந்து பார்க்கலாம். அவர்களுக்கு இது மிகப் பெரிய நம்பிக்கை கொடுக்கும்.
இவர் அமெரிக்காவின் John Hopkins மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் மூளை மற்றும் நரம்பியல் துறையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர். இவரின் தலைமையில் தான், உலகிலேயே முதல் முறையாக, தலை ஓட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு 24 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாகப் பிரித்து எடுத்தார்கள்.
– சிறு வயதில், மதிப்பெண்கள் வாங்குவதில், வகுப்பில் கடைசி மாணவன்..
– அப்பா, அம்மாவை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். ஒரு அண்ணன் உண்டு. இருவரையும் கவனித்துக் கொள்வதற்கு அம்மா மட்டும் தான்.
– பாடங்கள் சொல்லித் தருவதற்கு அம்மாவுக்கு அவ்வளவு படிப்பறிவில்லை. பிற வீடுகளில் வேலை செய்து அதில் வரும் வருமானம் தான்.
– தான் எதற்குமே லாயக்கில்லை என்ற நம்பிக்கை
இது தான் Ben இன் ஆரம்பம். அவரின் அம்மாவிற்கு இவர் மேலும் இவர் அண்ணன் மேலும் ஒரு பெரிய நம்பிக்கை. அவர்கள் நன்றாகப் படிக்க முடியும் என்று நம்பினார். தான் ஒரு முட்டாள் என்று Ben அடிக்கடி வருத்தப்படும் போது, ஒவ்வொரு முறையும், “இல்லை.. நீ மிகவும் திறமையானவன்.. உன்னால் முடியும்” என்று நம்பிக்கை ஊட்டுவார்.
முழுக் கதையையும் இங்கே சொல்வது அல்ல என் நோக்கம். எனவே, பிறகு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் அல்லது கருப்புத்திரையில் காண்க.. ஆனால் ஒன்று, நம்ம ஊர் மாதிரி ஒரே ஒரு பாட்டில், ஊரில் உள்ள எல்லா இடங்களிலும், நின்று, நடந்து, படுத்து, தெரு விளக்கில் படித்து பெரிய ஆள் ஆகவில்லை. இயல்பாகத் தான் படம் போகிறது.
நேரிடையாக சொல்லாத சில விஷயங்களும், சில perspectives ம் தான், இங்கே நான் சொல்ல விரும்புவது.
மூளையின் physiology பற்றி சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் பற்றி படித்துத் தெரிந்து கொண்டது ..
– நம் மூளை, ஒரு அதிசயம்: அமைப்பிலும் சரி, அதன் செயல்பாடுகளிலும் சரி. சுமார் 1.35 கிலோ எடை
– குறிப்பாக மனிதனின் சிறப்பே மனிதனின் கற்பனை சக்தி தான். இது தான் நம்மை மற்ற எல்லா உயிர் இனங்களில் இருந்தும் மாறுபடுத்தி நிற்க வைப்பது. கற்பனை என்பது, நாம் பார்த்த விஷயங்களை, இதுவரை பார்த்திராத கோணத்தில் உருவகப்படுத்திக் கொள்ளுதல். மூளையின் பாஷையில் சொல்லுவதானால், re-wiring. எப்படி நமக்கு மட்டும் இந்த சக்தி வந்தது என்பது அறிவியலால் விளக்க முடியாத ஒரு விஷயம். இந்தக் தேடல் மற்றும் கேள்வியின் நீட்சி – படைப்பு, கடவுள், இயற்கை இப்படிப் போகலாம். அது பற்றி வேறு ஒரு முறை பேசலாம்.
– ஒரு குழந்தை வளரும் பருவத்தில், மூளையின் ஒரு சில பகுதி இல்லாமல் போனாலும், மற்ற பகுதிகள் அதன் வளர்ச்சி விகிதத்தின் மூலம் சமன் படுத்தி விடும் என்று விளக்கம் இந்தப் படத்தில் வரும். ஆச்சர்யப்படுத்துகிறது..
– ஒருவரைப் பார்த்துப் பேசுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உருவம், மற்றும் அவர் குரல் இரண்டும் வெவ்வேறு இடங்களில் பதிந்து வைக்கப்படுகிறது. வெவ்வேறு circuit வழியாக சரி பார்க்கப்படுகிறது. காதின் மூலம் கேட்கப்படும் ஒலி, ஒரு circuit வழியாகப் போய் ஏற்கனவே நாம் பதிந்து வைத்திருக்கும் பல மனிதர்களின் குரலுடன் voice comparison நடக்கிறது. அதற்குப் பின், இந்த ஒலி க்கு எந்த முகம் தொடர்புடையது என்று ஒரு linking / mapping நடக்கிறது. இப்பொது, எதாவது ஒரு விபத்தினால், முகங்கள் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அழிந்தாலோ, அல்லது அந்த circuit பழுதாகி விட்டாலோ, அப்படி பாதிக்கப்பட்டவருடன் தொலைபேசியில் ஒருவர் பேசினால், பேசுபவர் யார் என்று சொல்ல முடியும். ஆனால், அந்த மனிதரை நேராகப் பார்த்தால், அவர் பேசினாலும், அவர் பெயர் நினைவு வரலாம். ஆனால், நீங்கள் அந்த நபர் தான் இவர் என்று சொன்னால், அது நிஜம் என்று நம்பத் தெரியாது.
– தூக்கம், கனவு, மூளை இவையாவும் நிறைய தொடர்புடையவை. ஏன் கனவுகள் வருகிறது என்பதற்கு பல தியரிகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, தூங்கும் போது, நாம் கற்றுக் கொண்ட விஷயங்களை தொகுத்து, சேமித்து வைக்க மூளை வேலை செய்கிறது. அப்படி செய்யும் போது, சில மாற்றங்கள் நடக்கிறது. அதன் விளைவும் கனவுகள் வர காரணம் என்கிறார்கள். அதிகாலை 5 மணிக்கு கனவு வந்தால், அது அப்படியே நடக்கும் என்பதெல்லாம் நம் கற்பனை சக்தியின் மூலம் நாம் உருவாக்கிய கதைகள்.
– எவ்வளவு விஷயங்களை தேக்கி வைக்க முடியும்? இதை மிகச் சரியாக கணிக்க முடியாது என்கிறார்கள். ஆனால், ஒரு மணி நேரம் ஓடக்கூடிய சுமார் 30,00,000 டிவி சீரியல்கள் பதிந்து வைக்கலாம் என்கிறார்கள் (2.5 Petabytes). தொடர்ச்சியாக 300 வருடங்கள் ஓட்டலாம்.
இப்படி பல அதிசயங்கள் கொண்ட, சிக்கல்கள் நிறைந்த மூளையைக் கையாளும் போது, ஒரு மருத்துவராக, எவ்வளவு நிதானம் தேவை என்பதை நாம் இந்தப் படம் பார்க்கும் போது உணர்ந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒவ்வொரு மருத்தவரின் கைகளும் வரம் பெற்ற கைகள் தான். குணமாகிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவர் கடவுள் தான்.
மளிகைக் கடைக்கு போகும் போது மட்டும், சரியாக , வெண்டைக்காய் நுனியை ஒடித்துப் பார்த்து வாங்க வேண்டும் போன்ற சமாச்சாரங்கள் ஏன் மறந்து போகிறது என்று Ben Carson ஐ பார்த்தால் கேட்க வேண்டும் என்று இருக்கிறேன். ஒரு வெண்டைக்காய் கூட ஒழுங்கா வாங்கத் தெரியாதா போன்ற கேள்விகளில் இருந்து தப்பிக்கலாம்.
***
நமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இது நாள் வரை வந்த நம் வாழ்க்கைப் பயணத்தில், நம் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான திருப்பங்களிலும் யாராவது ஒரு நபர் இருப்பார்கள். அந்தத் திருப்பம் என்பது, நம் குறைகளை அறிந்து கொள்ள உதவியதாக இருக்கலாம், ஒரு நம்பிக்கை தந்ததாக இருக்கலாம், நம்மை கோபம் கொள்ள வைத்திருக்கலாம், நம் அத்தனை நம்பிக்கையையும் இழக்க வைத்திருக்கலாம், அவமானம் கிடைத்திருக்கலாம், இப்படி எதாவது ஒன்று. அப்படி ஒரு சந்திப்போ அல்லது ஒரு பிரிவோ தான் நம் பயணத்தின் பாதையை சற்று திருப்பி விடுகிறது. அடுத்த திருப்பம் வரும் வரை நாம் அதில் போய்க் கொண்டிருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் நம் கதையின் பாத்திரங்கள் இவர்கள் தான். இவர்கள் இல்லை என்றால், வேறு யாராவது வந்திருப்பார்கள். அந்த அறிமுகங்கள் நம் பாதையை இன்றிருக்கும் நிலையில் இருந்து முற்றிலும் வேறு இடத்திற்கு இட்டுச் சென்றிருக்கலாம். அது நல்லதாகவும் இருந்திருக்கலாம், அல்லது இப்போது இருப்பதாய் விட மோசமாக இருந்திருக்கலாம். அதை நாம் கணிக்க முடியாது.
Ben வாழ்க்கையின் முக்கியமான பாத்திரங்கள் 6 – 7 பேர். அம்மா, அண்ணன், நிற வெறி கொண்ட ஒரு ஆசிரியை, Ben இன் அம்மா சந்தித்த ஒரு செல்வந்தர், இரு நண்பர்கள், காதலி, John Hopkins இல் இவரை சேர்த்துக் கொண்ட அதன் நிறுவனர் போன்ற முக்கியமான முக்கியமான மனிதர்கள் தான் இவரின் பாதையை நிர்ணயித்தது. பொதுவாக, வெற்றி பெற்றவர்கள் வாழ்கையில், அவர்கள் தங்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை விட, பிற மனிதர்கள் அவர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை அவர்களின் குறைகளைத் தாண்டி முன்னேற உதவுகிறது.
உங்கள் வாழ்க்கையின் கதை மாந்தர்கள் யார்?