ஆசிரியர் அப்துல் கலாம்
Posted on August 13, 2015 • 4 minutes • 736 words
சில நேரங்களில், விடுமுறை நாட்களில், என் மகனை என் அலுவலகத்திற்கு அழைத்துப் போவது வழக்கம். சமீபத்தில் ஒரு நாள், அப்படி அழைத்துப் போனேன். போகும் வழியில், வழக்கமான சில பேச்சுக்கள் போய்க் கொண்டிருந்தது. என் அலுவலக கட்டிடம் நெருங்கும் நேரம். தூரத்திலேயே எங்கள் நிறுவனத்தின் பெயர் பலகை தெரியும். அதைப் பார்த்தவன், திடீர் என்று கேட்டான். “Daddy, what is your goal at Citrix?”.
நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்கும் தன் பேரனிடம் நாயகன் பட கமலஹாசன் காட்டும் அளவு சோகத்தை என் முகத்தில் வைத்துக் கொண்டு என் பையனிடம் சொன்னேன்..
“தெரியலையேப்பா”…
கடந்த சில வருடங்களாக லட்சியத் தேடலால் (Vision Quest) என் மனதில் எழும் கேள்வி தான். அதைத் தான், என் பையன் சுருக்கமாகக் கேட்டிருக்கிறான். வேலை, அதில் தினமும் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வை திறம்பட செயல்படுத்துதல், இவை எல்லாமே சரிதான். இதை எல்லாமே நன்றாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதற்கான பலனும், முன்னேற்றமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இவை எல்லாமுமே, வேறு யாரோ ஒரு நிறுவனம் / மனிதர்களின் தேவை, பிரச்சனை, கனவு. இப்படி எதாவது ஒன்றை செயல்படுத்திக் கொடுக்க / அதில் இருக்கம் குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க, நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி செய்யும் வேலையில், நம் விரும்பும் எத்தனை விஷயங்களை செய்ய முடிகிறது, இதைத் தான் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கப் போகிறோமா.. என்ற ஒரு தேடல் தான், பல வருடங்களாக என் மனதில். இந்தக் கேள்வி / தேடல், ஒவ்வொரு பிறந்த நாள் அன்று இன்னும் அதிகமாக இருக்கும்.
தினமும், காலையில் எழுந்தவுடன், நம்ம ஊரில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, தமிழ் நாளிதழ்களை ஒரு 5 நிமிடம் பார்ப்பது வழக்கம். “நடிகர் அஜீத் அவர்கள், இன்று பிரியாணி சமைத்தார்” என்பது போல முக்கியமான செய்திகள் இருந்தால் மட்டும் அதைச் சொடுக்கி படிப்பது வழக்கம். இல்லை என்றால், cursory look உடன் நிறுத்தி விடுவது. இந்த வருடம், என் பிறந்த நாளின் அன்று, காலையில் நாளிதழை பார்த்தவுடன், என் கண்ணில் பட்டது, திரு. அப்துல் கலாம் அவர்களின் மறைவு என்ற செய்தி. அதன் பின், சமூக வலைதளங்கள், செய்திகள் என்று பல ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் தான் நாள் முழுவதும்.
அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்து சிலாகிக்கும் ஒரு கூட்டமும், அவரைப் பற்றிய கடும் விமர்சனங்களை வைக்கும் இன்னொரு கூட்டமுமாய், இங்கே ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கையில்.. இந்த சத்தங்களில் இருந்து மெல்ல விலகி, இந்தக் கருத்துக் குவியல்களில், எனக்கான செய்திகள் என்ன என்று தேடுவதில் தான் என் மனம் முழுவதும் இருக்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு செய்தி / தொடர்பு நமக்கு இருக்கிறது (சில நேரங்களில் நமக்குப் புரியா விட்டாலும் கூட).
என் மிக நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாளும், அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் தேதியும் ஒன்று. ஒவ்வொரு வருடமும், அவரின் பிறந்த நாள் அன்று, இதை நினைத்துக் கொள்வோம். இப்போது, அப்துல் கலாம் அவர்கள் மறைந்தது என் பிறந்த நாள் தேதியில். அப்துல் கலாம் அவர்களுக்கும் எனக்கும், ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்ப்பட்டு விட்டதாய் ஒரு பிரம்மை. அவரை நான் நேராக சந்தித்து இல்லை என்றாலும், அவர் எனக்கு எதோ சொல்லவதாக ஒரு கற்பனை. அவர் சொன்ன பல கருத்துக்கள் பல வருடங்களுக்கு முன் அவர் சொன்னது தான். ஆனாலும், இந்த நாளில் இறந்தது, அவர் சொன்ன சில விஷயங்களை எனக்கு மீண்டும் மீண்டும், ஒவ்வொரு வருடமும் நினைவுபடுத்தவோ அல்லது நான் தேடிக் கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு அவரின் வரிகளின் மூலம் பதில் இருக்கிறது என்று நினைவு படுத்தவோ .. எதோ ஒன்று.. என்ற நம்பிக்கையில், அவர் சொன்ன பல கருத்துக்களைப் படித்துக் கொண்டிருக்கையில், எனக்கு பெரிய எழுத்துக்களில் தெரிந்தது இது தான்.
“நீ யாராக அறியப் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்”..
இந்தக் கேள்விக்கு தனக்கான பதில் என்னவென்று அவரே சொல்லி இருக்கிறார். அவரின் பதில்: “ஆசிரியனாக”.
சிக்கலான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை எப்படி சில மனிதர்கள் எடுக்க முடிகிறது என்று கேட்டால், அவர்கள், சரியான கேள்விகளைக் கேட்பவர்களாக இருப்பவர்கள் என்று புரிந்து கொள்ள முடியும். நல்ல கேள்விகள் தான் நல்ல சிந்தனைகளின் தொடக்கம். நல்ல சிந்தனைகள் நல்ல தீர்வுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
“யாராக அறியப் பட வேண்டும்” என்ற இந்தக் கேள்விக்கு அவர் சொன்னதைப்போல ஒற்றை வார்த்தையில் நமக்கான பதில் கண்டு பிடிப்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது என்று புரிகிறது. மிகப் பெரிய சிக்கலே அங்கு தான். நாம் எல்லாவுமாக ஆசைப்படுகிறோம். ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்வதிலும், அந்த லட்சியத்தில் தெளிவு என்பதும், எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. சிலருக்கு அது சின்ன வயதில் வருகிறது.. சிலருக்கு பல வருடங்கள் தேடிய பின்.. இன்னும் சிலர், இதில் இருந்து மாறுபட்டு, தங்கள் வாழ்க்கைப் பாதை பற்றிய கவலையை பிறரிடம் கொடுத்து விட்டு, அதன் வழியில் போகிறார்கள். இது தான் சரி என்று ஒரு பொது கருத்தை எல்லோருக்கும் திணிக்க முடியாது.
இதில் நாம் எந்த ரகம் என்பதிலாவது ஒரு தெளிவு இருந்தால், அதுவே நல்ல தொடக்கம். அப்துல் கலாம் அவர்கள் கூட, சின்ன வயதில் இருந்து இந்த நோக்கத்தை வைத்திருந்தார் என்று தெரியவில்லை. முதலில் அவருக்கு இருந்தது aeronautical engineer ஆக வேண்டும் என்பது தான். அதற்குப் பின் அவருக்கு அமைந்த வாய்ப்புகள், மற்றும் அவரின் முயற்சிகள் அதன் மூலம் நாட்டிற்குக் கிடைத்த பலன்கள், அவரை வேறு என்னவெல்லாம் செய்தால் நாடு வளம் பெரும் என்ற சிந்தனையில் செலுத்தியபோது, அவர் கண்டு கொண்ட விஷயம், இந்த நாட்டின் மிகப் பெரிய சொத்து இளம் தலைமுறை என்பது. அதன் பின், அவர்களை பெரிய இலட்சியங்கள் கொண்டவர்களாக வழி நடத்த விரும்பி, ஒரு “ஆசிரியனாக” தன் பணி இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அதைத் தான் தன் இறுதி மூச்சு வரை செய்திருக்கிறார். மாணவர்களிடம் உரை நிகழ்த்தும் போது தான் அவர் உயிர் துறந்திருக்கிறார்.
அதே சமயம், தன்னுடைய பணிக்கு திருமணம் ஒரு தடையாக இருக்கும் என்பதை சின்ன வயதிலேயே அறிந்து அதை தவிர்த்திருக்கிறார். சில மனிதர்கள் தான், சமுதாய, குடும்ப நிர்பந்தகளை எல்லாம் தாண்டி, இளம் வயதில் இருந்தே இந்த அளவு தெளிவான பாதையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய குடும்பமும் கூட அவரின் உயர்ந்த லட்சியங்களுக்குத் துணை நின்றிருக்கிறார்கள் என்று தான் தெரிகிறது.
இதில் இன்னொரு விஷயமும் அடங்கும். “யாராக அறியப் பட வேண்டும்” என்பது பிறரின் பார்வையின் அடிப்படையில் நம் லட்சியங்களை வகுத்துக் கொள்வது போல இருக்கிறதே என்று நினைக்கலாம். அது ஒரு வகையில் உண்மை தான். ஒவ்வொரு மனிதனுக்கும், சமூகம் என்பது பெரியதாகவோ அல்லது, சின்னதாகவோ (தன் குடும்பம் மட்டும்) என்று இருக்கலாம். ஆனால், எல்லா செயலும், ஏதாவ்து ஒரு வகையில், தன் சமூகத்தின் பிற மனிதர்களின் அங்கீகாரம் எதிர்பார்த்தே இருக்கிறது.
எனவே.. “நீங்கள் யாராக அறியப் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்”?