குமார் பக்கம்
July 16, 2015

நான், நீ, நாம் – 3

Posted on July 16, 2015  •  3 minutes  • 537 words

View point

Photo by Nathan Dumlao on Unsplash

நான் என்பது பெயரோ, உடலோ, உயிரோ, வெறும் செயலோ மட்டும் அல்ல. செயலும் அதன் விளைவுமே, நான்.

“நான்”, என் அனுபவங்கள் எனும் கண்ணாடி வழியே தான் உலகத்தைப் பார்க்கிறேன். அதன் மூலம் தான் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு அர்த்தம் கொள்கிறேன். இந்த “அர்த்தப்படுத்துதல்” என்பதை தான் Perception என்று சொல்கிறோம். பொதுவாகவே, எல்லா நேரங்களிலும், கவனிக்கவும்.. “எல்லா நேரங்களிலும்”, என் Perception சரி என்றே நம்புகிறேன்.

ஒரு கதை.

**************************

ஒரு ஊர்ல (பொதுவா கதைன்னா இப்படி தானே ஆரம்பிக்கணும்) .. ஒரு விசித்திரமான பழக்கம். அந்த ஊர்ல யாராவது சிரிச்சா திருப்பி சிரிப்பாங்க. அப்புறம் கன்னத்துல ஒரு அறை கொடுப்பாங்க. இப்படிப்பட்ட ஊர்ல ஒரு குழந்தை பிறக்கிறது. அது அவங்க அம்மாவை பார்த்து சிரிக்குது. அவங்க அம்மாவும் திருப்பி சிரிச்சுட்டு அந்த குழந்தை கன்னத்துல ஒரு சின்ன அடி கொடுக்குறாங்க. இப்படி அந்த குழந்தை வளர வளர அது இந்த pattern ஐ புரிந்து கொள்ளும் வரை, சிரிச்சா அடி விழுகுது. அதற்கப்புறம் அந்த குழந்தை பையன் சிரிப்பதை நிறுத்தி விட்டான்.

இந்த ஊரில் இருந்து வெளி ஊருக்கு யாருமே போனதில்லை. இப்போ இந்த பையன் பெரியவனாகி முதன் முதலா பக்கத்துக்கு நகரத்துக்கு போறான். அங்க இவன பாத்து ஒருத்தர் சிரிச்சு வைக்கிறார். இவனும் திருப்பி சிரிச்சிட்டு, விட்டான் ஒரு அறை.

இங்கே, யார் செய்தது தவறென்று சொல்வது?

**************************

சென்ற முறை ஊருக்கு போன போது, என் மனைவியின் laptop battery பழுதாகி விட்டது. சரி செய்வதற்காக கோவை யில் ஒரு service center இல் கொடுத்திருந்தோம். அதை வாங்க போயிருந்தேன். 7800 ருபாய் செலவு. பொதுவாகவே Apple நிறுவனம் தாங்கள் விற்கும் எல்லா பொருளுக்கும் 20% – 30% லாபம் பார்க்கும். வெளியே வரும் போது நினைத்துக் கொண்டேன். “இன்னக்கு Apple கம்பெனி பேங்க் அக்கௌண்டில் நம் பணம் 2340 ருபாய் போட்டாச்சு..”.

பசித்தது. 2 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு போக ஒரு ஆட்டோ பிடித்தேன். ஒரு முதியவர் தான் ஓட்டுனர். பெரிய பேரம் எல்லாம் பேசவில்லை. 30 ருபாய் கேட்டார் என்று ஞாபகம். போகும் வழியில், இவ்ளோ லாபம் பார்க்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறோம். சரி ஆட்டோ டிரைவர் இந்த வயதில் உழைக்கிறாரே, அவருக்கு ஒரு 10 ருபாய் அதிகம் கொடுக்கலாம் என்று இறங்கும் போது 40 ருபாய் கொடுத்தேன். அவரோ வேண்டாம் என்று மறுத்ததுடன், “அளவாக ஆசைபடணும் சார். எனக்கு இதே போதும்” என்று அவர் கேட்ட பணத்தை மட்டும் வாங்கிட்டு போயிட்டார். ஒரு வேளை அவருக்கு 2 km க்கு வெறும் 20 ருபாய் செலவு ஆகலாம். 30 ருபாய் வாங்கியதால், 30% லாபம் பார்த்திருக்கலாம். எனக்கு தெரியாது.

ஆனால், இறுதியில், அவரிடம் என் Perception தவறாக போனது. இதற்கு காரணம் பெரும்பாலும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் மிக அதிகமாக பணம் எதிர்பார்ப்பதும், அந்த அனுபவங்கள் வழியாக நான் “அர்த்தப்படுத்திக் கொண்டது”, இவரும் அப்படித் தான் இருப்பார் என்றதாலும்.

இது அரிதாக நடந்த விஷயம். அதனால், எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் இப்படிதான் இருப்ாபர்கள் என்று என் மனதில் பதியவில்லை. ஒருவேளை நான் சந்தித்த எல்லா ஓட்டுனர்களும் (அல்லது பெரும்பாலானவர்கள்) இப்படி இருந்திருந்தால், என் Perception மாறி இருந்திருக்கும்.

இப்பொது இது இப்படி நடந்திருந்தால்…

நான் சர்வீஸ் center இல் இருந்து வெளியே வருகிறேன், ஆட்டோ பிடிக்கிறேன், போகும் வழியில், அந்த ஓட்டுனரிடம் இப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியாதாகி விட்டது என்று சொல்கிறேன்.

இதல்லாம் கேட்டுவிட்டு, இறங்கும் போது, அவர் – “சார், இவ்ளோ செலவு பண்றீங்க, எனக்கு ஒரு 10 ரூபா சேர்த்து கொடுங்களேன்!” என்று சொல்கிறார்.
நானும் கொடுத்து விட்டுச் செல்கிறேன்.

இப்படி ஒரு நாலு பேர் செய்தால் (அவர் அதிகம் பணம் கேட்டு, மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்து விட்டால்)..
இப்போ அவர் Perception – “இந்த சர்வீஸ் center இல் இருந்து யார் வந்தாலும் அவர்கள் அதிக பணம் கேட்டால் கொடுத்து விடுவார்கள்”. அதற்கு காரணம் அவரின் செயல் (அதிகம் கேட்பது) + அதற்கான விளைவு (கேட்டது கிடைத்தது).

செயலால் தான் விளைவு.. ஆனால், ஓவ்வொரு மனிதனின் ஒரே மாதிரியான செயலுக்கு, விளைவுகள் வெவ்வேறாக இருக்கின்றன. அப்படிப்பட்ட விளைவுகளின் தொகுப்பும் அனுபவமும் தான் ஒரு மனிதனின் பாதையை நிர்ணயிக்கிறது.

பல கோடி வருடங்கள் கடந்து வந்த மனித உடலியல் (anatomy), நம் உடல் சார்ந்த செயல்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று, தானாகவே கற்று வைத்திருக்கிறது. நாம் பயந்தால் adrenaline சுரப்பதும், காயம் பட்டால், T-Cells விரைவதும், இது போல reflex actions தான். அப்படிப்பட்ட reflex actions கூட ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த விளைவுகளை பொருத்துத் தான் அந்த மனிதனின் ஆரோக்கியம் இருக்கும்.

அது போல் தான், இந்த perception building ம்.. இது மனதின் reflex action. நம் பழைய அனுபவங்களின் அடிப்படையில் சட்டென ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுதல்.

ஆனால், இது தான் நம் பல பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம்.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com