நான், நீ, நாம் – 1
Posted on July 16, 2015 • 6 minutes • 1239 words
சில வருடங்களுக்கு முன், இரவு விருந்துக்காக ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அப்போது வழக்கமான அரட்டைக்குப் பின், நண்பர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் பாதித்தது. என்னுடைய நண்பர் பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர். அவருடைய சொந்த ஊரில் இருந்து யாராவது புதிதாக இங்கே வந்தால், அவர்களுக்கு இவர் உதவுவது வழக்கம். சமீபத்தில் அவருடைய சொந்த ஊரில் இருந்து அமெரிக்கா வந்த, அவர் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு உறவினரின் மகள் (ஒரு சில ஆண்டுகள் முன் தான் மணமாகி உள்ளது) தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஒன்றரை வயதில் ஒரு குழந்தை. இந்த தகவல் அறிந்து இவரும் இவர் உறவினர்களும் போய் அந்த பெண்ணின் கணவருடன் தங்கி இருந்து பல விதங்களில் உதவி உள்ளனர். மருத்துவர்களின் பல கடினமான முயற்சிகளின் பயனாக, அதிர்ஷ்டவசமாக, அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஒரு படித்த பெண், ஒரு பச்சிளம் குழந்தை இருக்கும் போது என்ன விதமான மன வலி இருந்திருந்தால் அல்லது மன வலிமை இல்லாது இருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கும் போது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
இந்த சந்திப்பு முடிந்து, அதன் பாதிப்பு அகலாத நேரத்தில், ஒரு சில வாரங்கள் கழித்து, என்னுடன் பள்ளியில் படித்த ஒரு நண்பன் தற்கொலை செய்து கொண்டான் என்ற துயரச் செய்தி கேள்விப்பட்டேன். எப்போதுமே ஒரு புன்சிரிப்போடு இருப்பான். 20ஆண்டுகளுக்குப் பின் அந்த ஆண்டு தான் இந்தியா சென்றிருந்தபோது அவனைச் சந்தித்திருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சின்ன அளவில் கூட தன் கவலையையோ, வருத்தத்தையோ வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. வெளி உலகத்தைப் பொருத்தவரை, அவன் உலகம் சந்தோஷமான ஒரு இடம். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், உள்ளுக்குள் ஒவ்வொரு கணமும் உடைந்து நொறுங்கி கொண்டிருந்திருக்கிறான். எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு கொடுமையான விஷயம்? தன் கவலைகளை தாங்கிக் கொண்டு, வெளி உலகிற்கான முகமூடியை அணிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒன்று, மற்றொன்று, ஒவ்வொரு மனிதனுடனான உரையாடலின் போதும் தன் விடை தெறியா கேள்விகளுக்கான பதிலை வெளியே சொல்லாமல் மறைமுகமாகத் தேடிக் கொண்டிருந்திருப்பானோ என்னவோ. எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த மன வலியை சிறிதளவேனும் இப்பொது நினைத்தால் புரிந்து கொள்ள முடிகிறது.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு உரையாடலின் போது, நல்ல வசதி, குடும்பம், வேலை, என்று இருக்கும் ஒரு நண்பர், எதிர்காலத்தைப் பற்றிய பயத்தினால், எந்த விஷயத்திலும் மனம் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன் என்கிறது என்று தன் நிலையைப் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் சொல்லும் போது, “என் பெற்றோர், நான் இப்பொது இருக்கும் நிலையை விட மிகவும் தாழ்வான நிலையில் இருந்தவர்கள். பெரிய வசதி என்று இருந்ததில்லை, நிலையான வருமானம் இருந்ததில்லை, ஆனால், அதையெல்லாம் தாண்டி, எங்கள் வீட்டில் ஒரு சந்தோஷம் இருந்தது. என் பெற்றோர் எப்போதும் நம்பிக்கையுடனே தான் பேசுவார்கள். தங்களுக்கென்று ஒரு value system உண்டு. ஒரு முறை கூட, எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவர்களிடம் நான் உணர்ந்தது கிடையாது. அரசு நிதி பெறும் பள்ளியில் தான் நானும் என் சகோதரியும் படித்தோம். எங்களை மிகவும் நன்றாகப் படிக்க வைத்தார்கள். யோசித்துப் பார்த்தால், அவர்களை விட மிகவும் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆனால் எதோ ஒரு வெறுமை”, என்றார்.
மேலே சொன்ன மூன்று நிகழ்வுகளும் அடுத்தடுத்து சில நாட்களில் நடந்ததால், அதன் பாதிப்பு பல நாட்களுக்கு அகலாமல், “பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட பாக்குத் தூள் போல” என்று சொல்வார்களே, அது போல உருத்திக்கொண்டே இருந்தது. இதில், நான் முக்கியமாக கண்டு கொள்ள விரும்பியது ஒன்று. நான் மேலே சொன்ன மூன்று மனிதர்களுக்கும் பொதுவான விஷயம் என்ன என்பது தான். இந்தக் கேள்வி சில சுவாரிஸ்யமான கண்ணோட்டத்தைக் கொடுக்கும் என்று நம்பினேன். நான் மேலே குறிப்பிட்ட மூன்று மனிதர்கள் வாழ்க்கையிலும், அவர்கள் எடுத்த / எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றுக்கும், அவர்கள் மனநிலைக்கும் ஒரு நுட்பமான காரணம் இருக்கலாம். ஆனால், இவர்களுக்கு இடையில் பொதுவான விஷயமாக நான் கண்டு கொண்டது இது தான்.
** ஒரு நிலையில் தங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர்கள் தங்களை தோல்விகளாக முடிவு செய்து கொள்கிறார்கள் **
இது தனி ஒரு மனிதனை நோக்கிய கண்ணோட்டம்.
சரி, சமூகச் சூழல் இன்று எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு விதமான போராட்டங்கள், சிக்கல்கள், நோக்கங்கள். இந்தத் தலைமுறையின் மூன்று அடிப்படை அம்சங்கள் : முன்னேற்ற வேட்கை, மிகக் கடுமையான மன அழுத்தம், அறம் துறந்த பொருட்தேடல்.
இன்றைய சூழலில் வாழ்க்கை தரத்தை பொருளாத ரீதியாக உயர்த்திக் கொள்ள பல வழிகளும், வாய்ப்புகளும் உள்ளன. சில குறிப்பிட்ட வேலைகளுக்கு உலகில் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்யும் வகையில் வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் சில நாடுகள் தவிர பொதுவாக எல்லா நாடுகளிலும் பொருளாதாரமும் வேலை வாய்ப்புகளும் நன்றாகவே இருக்கின்றன. எல்லா தொழில் துறைகளிலும், மிகப் பெரிய எண்ணிக்கையில் உழைக்கும் வயது இளைஞர் கூட்டம் இன்று இந்தியாவில் தான் இருக்கிறது. நேரிடையான மற்றும் இணையம் வழியாக, ஒரு நிறுவனத்துக்கோ அல்லது சுயமாகவோ வேலை தேடித் கொண்டு தங்களின் முன்னேற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்போர் பலர். எல்லா தொழில் துறைகளிலும், மிகப் பெரிய எண்ணிக்கையில் உழைக்கும் வயது இளைஞர் கூட்டம் சீனாவுக்குப் பிறகு இன்று இந்தியாவில் தான் இருக்கிறது. நேரிடையான மற்றும் இணையம் வழியாக, ஒரு நிறுவனத்துக்கோ அல்லது சுயமாகவோ வேலை தேடித் கொண்டு தங்களின் முன்னேற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்போர் பலர். முன்னேற்ற வேட்கைக்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருப்பது உண்மை.
பிறகு என்ன மன அழுத்தம் என்ற கேள்வி வரலாம். நான் மேலே சொன்ன முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் என்பது எல்லோருக்கும் அவர்கள் நினைக்கும் அளவிற்கு கிடைக்கிறதா என்றால், அப்படி நடப்பதில்லை. இது புதிய விஷயமல்ல. என்றைக்குமே ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது உலகம் உள்ளவரை இருக்கும். எது இதை ஊதிப் பெரிதாக்குகிறது என்றால், இன்றைய ஊடக வளர்ச்சியும் மக்கள் அதை பயன்படுத்தும் விதமும் தான் காரணம். இன்றைய ஊடக வளர்ச்சி எத்தனையோ நன்மைகளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதன் மறுமுகம், சுய விளம்பரங்களை உலகில் ஒரு மூலையில் இருந்து இன்னோரு மூலைக்கு நொடிப் பொழுதில் பரவ வழிவகை செய்திருக்கிறது. இதன் பாதிப்பு என்னவென்றால், மிகப் பெரிய ஆசை அட்டவணையை ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தி விடுகிறது. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய செய்திகள் நாம் கேட்காமலேயே நிறைய நம்மை வந்தடைகின்றன. இவற்றில் பெரும்பான்மையான செய்திகள் நம்மை மனதளவில், ஒன்று, பொறாமையாலும், ஆற்றாமையாலும் நிறைக்கின்றன, அல்லது வலுவிழக்கச் செய்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் பிறரின் வாழ்க்கைமுறையை பார்த்து அதை நமக்கும் பொருத்திக் கொள்ள முயற்சி செய்யும் இன்றைய சூழ்நிலை, நிறைய மனிதர்களை ஆரோக்யமற்றவர்களாக, சந்தோஷமற்றவர்களாக மற்றும் மனநிறைவு அற்றவர்களாகவும் மட்டுமே மாற்றி இருக்கிறது. விரக்தி, மண முறிவு, தற்கொலை - இதெல்லாம் அதிகம் தான் ஆகி இருக்கிறது. இன்று மனக் கவலைக்கு ஆசிரமங்களில் மருந்து தேடும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் நல்ல வேலையிலும் வருமானமும் உள்ளவர்கள் தான்.
நம் மனதில் ஆசையை விதைக்கும் நிகழ்வு, ஒன்றாக, பத்தாக, நூறாக, ஆயிரமாக வளர்ந்து, பொருள் தேடல் என்ற வேட்கை, பூதாகரமாக, அறம் சார்ந்த நெறிகளைத் தகர்த்து உடைத்து, ஆசைகளுக்கும், சுய தேவைகளுக்கான ஞாயங்கள் மட்டுமே சரியென்ற தருகத்தை நம்பும் சமூகமாக வளர்ந்து நிற்கிறோம்.
சரி.. இதற்கு நாம் எதாவது பண்ண முடியுமா என்ற கேள்வி சிறிய அளவில் மனதில் எழுந்தது. அதற்கும் முன்னால் வந்த முக்கிய கேள்வி, இப்படிப்பட்ட சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் நாம் எப்படி தப்பிப்பது? என்ன கற்றுக் கொள்ள வேண்டும், என்னவற்றை விட்டுத் தள்ள வேண்டும், இப்படி பல குழப்பங்கள்.
பொதுவாகவே, என் வாழ்வில் இதுவரை நான் சந்தித்த கடுமையான சோதனைகளின் போது, ஒவ்வொரு முறையும், அதைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். அதற்கு சில குறிப்பிட்ட மனிதர்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். என் பெற்றோர், சில ஆசிரிய ஆசிரியைகள், நண்பர்கள், உறவினர்கள், என் மனைவி இப்படிப் பலர். புத்தகத்தின் போக்கில், சரியான இடங்களில் இவர்களின் பங்கு என்ன என்பதை விலாவாரியாக சொல்லி இருக்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் பல தருணங்களில் பல நீண்ட உரையாடல்களை நடத்தியது உண்டு. புத்தகங்களும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. இந்த முறையும் அதே வழியை பின்பற்ற முடிவு செய்தேன். அதன் அடிப்படையில், தனி மனித மற்றும் சமூக உளவியல் சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் கட்டுரைகளை தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் தான், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தொழில் நாடுகளில் 1929 முதல் 1939 ஆம் ஆண்டு வரை, மிகவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இது வரலாற்றிலேயே மிகவும் கடுமையான பொருளாதார தாழ்வு நிலை என்று சொல்லப் படுகிறது. அந்த காலகட்டத்தில் 1937 ஆம் ஆண்டு முதல் 1938 ஆண்டு வரை அமெரிக்க பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தது. அந்த ஆண்டில், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்த 268 மாணவ மாணவியர் எவ்வாறு இந்த மந்த நிலையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று ஆராய முடிவு செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சி பிறகு தொடர்ந்து 80 ஆண்டுகள் நடந்தது. இந்த நீண்ட ஆராய்ச்சியின் முடிவில், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்யமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம், ஆரோக்யமான சமூக பங்களிப்பும், உறவுகளின் ஆரோக்யமும் என்று சொல்லப்பட்டது.
வாடிக்கையாளர்கள் சம்பந்தமான உளவியலை அறிந்து கொள்ளாத ஒரு விற்பனையாளரோ நிறுவனமோ வெற்றிகரமான விற்பனையாளராகவும் நிறுவனமாகவும் இருக்க முடியாது.
மாணவர்களின் உளவியலை புரிந்து கொள்ளாத ஒரு ஆசிரியர் நல்ல ஆசிரியராக இருக்க முடியாது.
அந்த வகையில், ஆரோக்யமான உறவுகள் தான் ஒரு மனிதனின் ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணி என்ற நிலையில் அப்படிப்பட்ட உறவுகளைப் பேணவும், நல்ல நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், இவை சம்பந்தமான உளவியலை புரிந்து கொள்வது முக்கியம் இல்லையா?
இந்த ஆர்வம் உடலியல், உளவியல் என்று பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது. இப்படி புதிதாகக் கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்து நான் என் வாழ்வில் மிகச் சிக்கலானது என்று நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள உதவியது. அப்போது தான் இதை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. இணையத்தில் நான் அவ்வப்போது எழுதும் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தேன். சில பதிவுகள் எழுதினேன். பிறகு அதை தொடர முடியாமல் போனது. பிறகு, கொஞ்சம் என் நேர மேலாண்மையை சரி செய்து கொண்டு, ஒரு புத்தகமாக எழுதலாமே என்று சீரிய முயற்சியாக எழுத ஆரம்பித்தேன். அது தான் இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகம் எழுத ஆரம்பித்த போது, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சூத்திரங்கள் / காரணிகள் என்ன என்ற தேடல் நோக்கிய பயணமாகத் தான் இருந்தது. ஆனால், நாளடைவில், இந்த மையக் கருத்து, மகிழ்ச்சி என்பதில் இருந்து மாறி, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான தேடலாக மாறியது. தன் மகிழ்ச்சியை மட்டுமே துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் விரக்தியும் மன அழுத்தம் தான் அதிகமாகும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அதற்குக் காரணம் பல உண்டு. தன் மகிழ்ச்சியை மட்டுமே எதிர்நோக்கிப் போகும் ஒரு மனிதனின் வாழ்க்கை, பெரும்பாலும் ஒரு சுயநலப் போக்கின் அடிப்படையிலேயே அவனை நகர்த்தும்.
தன் தவறுகள் எல்லாவற்றிற்கும் ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுத்துக் கொண்டு, தான் செய்வது சரி தான் என்ற ஒரு தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும், ஆனால், அது எளிதில் அடுத்தவரிடம் தாவும் கூட்டமாக இருக்கும். ஆரோக்யமான நட்பு வட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதற்குப் பதிலாக, ஒரு நல்ல நோக்கத்தை நோக்கிய பயணமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களின் நிலை, பெரும்பாலும், ஆரோக்யமாக இருக்கும் என்றும். இதை நாம் பலரின் வாழ்க்கையைப் பார்ப்பதின் மூலமாகவும், படிப்பதன் மூலமாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.
சங்கர் IAS அகாடமி என்ற ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை நடத்திய சங்கர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி உலுக்குகிறது.