குமார் பக்கம்
July 16, 2015

குடிமக(ன்/ள்)கள்

Posted on July 16, 2015  •  5 minutes  • 978 words

கோவையில், பள்ளி சென்று கொண்டிருக்கும் ஒரு 16 வயதுப் பெண், காதல் தோல்வியால் (???), மிகவும் குடித்து விட்டு, நீதாம்மா ரௌடி என்று எல்லோரும் ஒத்துக் கொள்ளும் வரை பெரிய ரகளை செய்து விட்டாள் என்று செய்தி படித்தேன்.

சமீப காலமாக கேள்விப்பட்ட மற்றும் படித்த சில விஷயங்கள்…

இப்படி, குடியைப் பற்றி இப்போதெல்லாம் நாம் கேள்விப் படும் விஷயங்கள், இது எதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் விஷயங்களாகத் தெரியவில்லை. படிக்கும் செய்திகளும், மற்றவர்கள் தாங்கள் பார்த்து சொன்ன விஷயங்களும், மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன.

2003 – 2015.. இந்த 12 வருடத்தில் மக்கள் வருமானம் 7 மடங்காக ஆகவில்லை. வாழ்க்கைத் தரம் 7 மடங்காக ஆகவில்லை. ஆனால், இந்த 12 வருடத்தில் TASMAC இன் வருமானம் 7 மடங்கு பெருகி இருக்கிறது. 2003 – 2004 இல் 3500 கோடி யாக இருந்த வருவாய், 2014-15 இல் 27,000 கோடி. தமிழக அரசின் 25% வருவாய் இதில் இருந்து தான் வருகிறது என்று வெட்கம் இல்லாமல் அறிவிக்கப்படுகிறது. வருவாய் குறைந்த இடங்களில் ஏன் குறைந்தது என்று காரணம் கண்டு பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது சமீபத்திய செய்தி. 2015 இல் மொத்த விற்பனை குறைந்தாலும், வருவாய் அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால், விலை அதிகமாக்கப் பட்டிருக்க வேண்டும்.

இது எதோ தமிழ் நாட்டின் சாபம் மட்டும் தான் என்று இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 20% முதல் 25% வரை, மது விற்பனை வழியாகத் தான் வருகிறது. சில மாநிலங்கள், மொத்த விற்பனையாளராக இருக்கிறது (உதாரணம்: கர்நாடகா), தமிழ் நாட்டில் இருப்பது போல, சில மாநிலங்கள் சில்லறை (சரியான வார்த்தை தான்…) வணிகமாகச் செய்கிறது. சில மாநிலங்களில் இது தனியாரிடம் விடப்பட்டிருக்கிறது. எல்லா இடங்களிலும், Excise tax, Sales tax போன்ற வரிகள் அரசாங்கத்திற்கு தான். இப்படி, பல வழிகளில் இந்த 20% – 25% வருவாய். சில மாநிலங்களில் மட்டும் தான், மது விலக்கு இருக்கிறது.

நம் எல்லோர் மனதிலும் உடனடியாக வரும் சிந்தனைகள் தான் எனக்கும் முதலில்..

ஆனால், இதைப் பற்றிய விவாதங்களில், மாறுபட்ட சில கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

மது பழக்கம் கொண்டவர்களை, நான்கு குழுக்களாகப் பிரிக்கலாம்.

  1. மேல் தட்டு மக்கள்: இவர்கள் பெரும் பணக்காரர்கள். இவர்களின் பொன் மாலைப் பொழுதுகள், தொழில் அறிமுகங்கள், தொழில் பரிவர்த்தனைகள் போன்ற நிகழ்வுகளில் எல்லாம் மது இருக்கும். குடியினால் இவர்கள் குடும்பம் உணவில்லாமல் தவிக்கப் போவதில்லை. சொல்லப் போனால், மது அருந்துவது இங்கே ஒரு கலாச்சார நிர்பந்தம். ஒரு பொழுது போக்கு. கௌரவம். இவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டியதில்லை.
  2. குடிக்கும் வயது வந்த நல்ல சம்பாத்தியம் இருக்கும் நடுத்தர வர்க்கம்: சமீப காலமாக, பெரும் கலாசார மாற்றத்தை சந்திந்துக் கொண்டிருக்கும் குழு. ஒரு 20 வருடம் முன்பாக, குடிப்பது, சமுதாயத்தில் மற்றும் குடும்பத்தில் ஒரு களங்கமாப் பார்க்கப் பட்டது. பெரும்பாலும், பெண்கள், தங்கள் வீட்டு ஆண்கள் குடிப்பதை விரும்பியதில்லை. அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இன்று அது ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய வழக்கமாக மாறி விட்டது. ஆண்கள், பெண்கள் யாரும் விதி விலக்கல்ல. சமீபத்தில், நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னது: “சென்னைல இருக்கறப்போ, வெள்ளிகிழமை ஆச்சுன்னா பிரண்ட்ஸ் எல்லாம் விடவே மாட்டாங்க. பார்ட்டி, தண்ணி தான். சில நேரம் வாரம் 10,000 – 15,000 கூட செலவு செய்வேன். இப்போ இங்கே வந்ததும், எல்லாம் அப்படியே விட்டுட்டேன்.” இவர்கள் கொஞ்சம் பிசகினால், வாழ்க்கையே மாறிப் போகும். சேமிப்பு கரைந்து போகும். ஏற்கனவே, மாத வருமானத்தை வைத்து மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் சேமிப்பு போய், ஆரோக்கியம் போய், வேலையும் போனால்??? அறிவுரை சொல்லித்தான் புரிய வேண்டும் என்கிற நிலையிலும், அடிப்படை விஷயங்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்ற நிலையிலும் இவர்கள் இல்லை. ஆனாலும், இவர்களைப் பற்றி நாம் வருத்தப்பட்டுத் தான் ஆக வேண்டும்.
  3. வசதி அற்றவர்கள்: இவர்கள் குடும்பம், இவர்களின் அன்றாட வேலையை நம்பியும், வருமானத்தை நம்பியும் ஓடிக் கொண்டிருக்கும். இவர்கள் தங்களுக்கென சேமிப்பு, காப்பீடு என்று எதுவும் வைத்துக் கொள்ள வசதி இருக்காது. இவர்கள் இந்த பழக்கத்திற்கு ஆளானால், குடும்பம் எல்லா விதத்திலும் பாதிக்கும். குழந்தைகளின் கல்வி, இருக்கும் இடம், தொழில் ..இப்படி எல்லா வித பாதிப்பும் இவர்களுக்கு உண்டு. ஒரு விதத்தில், இவர்கள் வேலை பெரும்பாலும் கடின உடல் உழைப்பு சார்ந்ததாக இருக்கும். உடல் வலியைப் போக்க இவர்கள் ஆரம்பித்து, பின் மதுவுக்கு அடிமை ஆவதும் உண்டு.
  4. மாணவர்கள், சிறார்கள்: குடும்பமும், சுற்றமும் குடிகாரர்களாக இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள். எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ள முடியாத வயது. ஆர்வம். எளிதில் மது கிடைக்கும் என்ற நிலை.

இதில், வசதி அற்றவர்கள், அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் மிக வசதியான target. இவர்களை எளிதாக வசப்படுத்த முடியும். பணமும், மதுவும் வைத்து. அப்படி வசப்படுத்தி, புத்தியை மழுங்கடித்து, ஓட்டு வாங்கி விடலாம். மீண்டும் அவர்களை அப்படியே வைத்திருந்தால் தான், இவர்கள் காலம் ஓடும்.

அடுத்து, மாணவர்கள் மற்றும் சிறார்கள், அடுத்த தலைமுறை நம்பிக்கைகள். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனால், எதிர்காலம் அவ்வளவு தான். சரியான கல்வியும், முயற்சியும் போய், நம்பிக்கை இழந்து, வாழ்க்கை சரியாக அமையாமல் போனால், மீண்டும் குடி தான்.

இவை இரண்டுமே ஒரு கொடூர சுழற்சி.

இதற்கு என்னதான் தீர்வு?

வெறும் மது விலக்கால் இதை முற்றிலும் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை. ஆனால், அரசாங்கம் செய்யக் கூடிய சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கிறது.

  1. பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தளங்கள், மக்கள் அதிகமாக இருக்கும் இடம் – இப்படி இருக்கும் இடங்களில் மதுக் கடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது
  2. திரைஅரங்குகளில் காட்டப்படும் திரைப்படம் தவிர, தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போது, அந்தத் திரைப்படங்களில், குடிக்கும் காட்சிகளை முற்றிலும் இல்லாமல் ஒளிபரப்ப வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற கண்ணுக்குத் தெரியாத வரி மட்டும் மாற்றத்தைக் கொண்டு வராது
  3. 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் மது வாங்க முடியும் என்ற சட்டம் கொண்டு வரலாம். அதை ஒழுங்காக கடைப்பிடிக்க மதுக் கடைகளை நிர்பந்திக்கலாம்
  4. குடிப் பழக்கத்தில் இருந்து மாற விரும்பும் மக்களுக்கு தேவையான counseling மற்றும் வழிகளை இலவசமாகத் தரலாம்
  5. Alcohol குறைவான, மாற்று பானங்களை விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். Mead, Wine இப்படி.

ஆனால், இதையெல்லாம் இன்றைய தலைவர்கள் / தலைவிகள் செய்வார்களா என்று யோசித்தால், ஏமாற்றம் தான் வருகிறது. இவர்களின் குறிக்கோள் எல்லாமே பணமும், அடிமைப்படுத்த ஒரு வழியும் தான்.

இன்று கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம். ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது, தான் பார்த்த ஒரு ஏழையின் குழந்தை, மாடு மேய்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களிடம், ஏன் அவன் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதைக் கேட்டு, மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர். ஒரே ஒரு குடும்பத்தின் அவலம் கண்டு, லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒளி ஏற்றியவர் அவர். அதனால் தான் அவர் “பெருந் தலைவர்”.

இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழிந்த பின்னால் நாம் புரிந்து கொள்ளப் போகிறோம்?

உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். மேலும், நீங்கள் இருக்கும் இடத்தில், பள்ளி, கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் இருந்தால், அந்த இடத்தின் பெயரை இங்கே சொல்ல முடியுமா? இந்த தகவல்களை அந்த அந்த மாவட்ட ஆட்சியாளர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.. சின்ன மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தால் கூட அது நல்லது தான்.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com