ஒரு நாள் கொண்டாட்டம்
Posted on June 24, 2015 • 4 minutes • 698 words
Photo by kike vega on Unsplash
இந்த யோகா தினம் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது, Fitness பற்றிய இதுவரையான என் அனுபவங்கள் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ங்கற படம். ஒரு பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ண ஆள் பலத்தோட கெத்தா பசுபதி வருவார். அப்போ அவருக்கு வீட்டிலிருந்து அதட்டலா ஒரு போன் வரும். உனக்கு தான் பிரஷர் இருக்கே. சரியா மாத்திரை போட்டியா? அப்படின்னு. அந்த மாதிரி தான், இந்த இன்சூரன்ஸ் கம்பெனிகாரங்க. நம்ம கெத்தா சுத்திட்டு இருந்தா, அடிக்கடி ஒரு கடிதம் அனுப்பி விடுகிறார்கள். உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கு தானே. அதனால, இந்த வருஷம் மருத்துவர பார்த்து டெஸ்ட் செஞ்சுக்கிட்டீங்களா? அப்படின்னு. அதுவரைக்கும் நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கும். இதப் படிச்ச பிறகு தான் நமக்கு பிரஷரே ஏறும்.
சரி. என்ன பண்ண? வழக்கமான மருத்துவர் கிட்ட போவோம்ன்னு போக வேண்டியது தான்.
இங்கே ஒரு தமிழ் பெண் மருத்துவர் இருக்கிறார். அவர் தான் எங்கள் குடும்ப மருத்துவர்.
கவுண்டமணி ஒரு படத்தில் நாட்டு மருத்துவராக இருப்பார். அவரிடம் வரும் ஒருவர், தன உடல் உபாதைகளைச் சொல்வார். ஒரு வரி தான் சொல்லியிருப்பார். வந்தவரை பார்த்து, கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு, இவரே மற்ற எல்லாவற்றையும் சொல்வார். இப்படி இருக்குமே, இதுவும் இருக்குமே, என்று. வந்தவரும், அடடா, நாம் சொல்வதை நன்றாக புரிந்து கொண்டார் என்று நம்பிக் கேட்பார். இதற்கு என்னங்க மருந்து என்று. கவுண்டமணி, நீ சொன்ன எல்லா பிரச்சனையும் எனக்கும் இருக்கு, இதுக்கு மருந்தே இல்லை என்பார்.
அது போலத் தான். இந்த மருத்துவரும், நாம் என்ன சொன்னாலும், அதையே தனக்கும் இருப்பதாகச் சொல்வார்.
டாக்டர், அடிக்கடி back pain என்று சொன்னால்.. ஹ்ம்ம்..இதெல்லாம் அதிக நேரம் தவறான posture ல உட்கார்ந்து இருக்கிறதால வர்றது. பாருங்க, நான் ரெகுலரா நடந்திக்கிட்டு தான் இருக்கேன். எனக்கே இருக்கு என்பார். டாக்டர், seasonal allergy என்று சொன்னால், இந்த ரெண்டு வாரமா எனக்கும் ஒரே தும்மல் என்பார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது, நாம் தான், ஐயோ பாவம், இந்த டாக்டர் தான் எத்தன கஷ்டப்படுறாங்க என்று வருத்தப்பட்டுக் கொண்டே வர வேண்டும்.
மூன்று வருடங்கள் முன்னால், வருடா வருடம் செய்து கொள்ளும் ஜெனரல் செக் அப் பிற்கு பிறகு, மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். வழக்கமான செய்தி தான். உங்களுக்கு triglyceride அதிகம். அதனால, தினமும், ஒரு 45 நிமஷமாவது நல்லா மூச்சு வாங்க உடற்பயிற்சி செய்யணும் என்று அறிவுரை. வெளியே வரும் போது, இந்த முறை சிக்ஸ் பேக் வைக்கிற அளவிற்கு தொடர்ந்து உடற் பயிற்சி செய்யணும் என்று நினைத்துக் கொண்டேன். அப்படியே, இலை தழை எல்லாம் பறந்தது என்னுடைய வேகத்தைப் பார்த்து. 6 மாதம், தொடர்ந்து உடற் பயிற்சி, மலை ஏற்றம் என்று ஒரே படம் தான். சிக்ஸ் பேக் .. சுவடே இல்லை. அப்புறம் தான், வெறும் நடை, ஓட்டம் எல்லாம் பத்தாது என்று தெரிந்து கொண்டேன். இந்த எடை தூக்குவாங்களே, அதையும் பண்ணனும் என்று. அதுவும் கொஞ்ச நாள். 6 மாதங்கள் கழித்து, எவ்வளவு எடை குறைத்திருக்கிறேன் என்று பார்த்தேன். ஒரு 5 கிலோ கம்மி ஆகி இருந்தேன். இதோ இன்னும் கொஞ்ச நாள், அதற்குப் பிறகு, ஜிம் பாடி தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போ பார்த்து, வெயில் காலம் முடிந்து குளிர் காலம் வந்து தொலைத்தது. 4 – 5 மணிக்கு இருட்டி விடும். குளிராகவும் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஜிம்மிற்கு போவது குறைந்தது. எதாவது சாக்குப் போக்கு மனது சொல்லிக் கொள்ளும். சிக்ஸ் பேக் என்பது ஆபத்தானதாமே.. fat அவ்வளவு கம்மியா இருக்கக் கூடாதாமே என்று அறிவு பூர்வமான விஷயங்களெல்லாம் அப்போதான் நம்ம கண்ணுக்குத் தெரியும்.
இது வேறு கண்ணில் பட்டுவிட்டது. இதில் முதல் 5 நிமிடங்கள், சோ அவர்களின் கிண்டல் பாருங்கள்.
[embedyt]https://www.youtube.com/watch?v=yiOomLlf1wk[/embedyt]
இந்த சிக்ஸ் பேக் கனவெல்லம் போய், சே.. 5 கிலோ குறைக்கிற அளவிற்கு என்ன உழைப்பு உழைச்சிருகோம் என்று பெருமையினால் மனது சந்தோஷப் பட்டுக் கொள்ளும். அதற்குப் பிறகு அவ்வளவு தான்.. 2 வருடம் கேப் ஆகிப் போனது.
கல்லூரியில் படிக்கும் போது, விடுதியில் ஒரு நண்பன் இருந்தான். உடற்பயிற்சி, குறிப்பாக எடை தூக்குதல் போன்றவற்றில் மிகுந்த விருப்பம் அவனுக்கு. இரவு ஊறவைத்த கொண்டை கடலை சாப்பிட்டுவிட்டு, மாலை உடற்பயிற்சி செய்து விட்டு, கண்ணாடி முன்னாலேயே இருப்பான். கையை மடக்கி மடக்கிப் பார்த்துக் கொள்வான். நம்மை திரும்பி ஒரு பெருமை பார்வை பார்ப்பான். இப்போது அமெரிக்காவில் நான் இருக்கும் இடத்துக்கு அருகில் தான் இருக்கிறான். ஒரு 15 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். இன்னும், அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கும் வெயில், குளிர் காலம் எல்லாம் வரும் தான். ஆனால், அதைத் தாண்டிய ஒரு முயற்சி.
ஹ்ம்ம்.. நாங்கெல்லாம் கான்டீன் இல் உட்கார்ந்து சமோசா சாப்பிட்டுக் கொண்டு உலகத்தை எப்படி மாற்றுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த கூட்டம். இப்போதும் அப்படித்தான்.
இந்த யோகா தினம் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது, இது தான் தோன்றியது. ஒரு விழிப்புணர்வு கொண்டு வரும் இந்த முயற்சி எல்லாம் நல்லது தான். இதை அன்றாடம் கடைபிடிக்கும் ஒழுங்கு நம்மில் எத்தனை பேருக்கு வரும்?
யோசித்துப் பார்த்தால், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், வெறும் விருப்பத்திற்கும், அதில் தொடர்ந்து செயல்படுவதற்கான ஆர்வம் கொண்டிருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. Interest இல் இருந்து அது Obsession ஆக மாற வேண்டும். End result மட்டுமே எதிர்பார்த்துச் செய்யப்படும் ஒரு காரியம் அந்த பலன் கிடைத்து விட்டால், மீண்டும் அதை செய்ய விருப்பம் போய் விடும். அல்லது குறைந்து விடும். Obsessive ஆக இருப்பவர்கள் தான், தொடர்ந்து அவர்கள் விருப்பப் பட்டதைச் செய்கிறார்கள். அது அவர்களின் அன்றாட வாழ்கை முறை ஆகிப் போகிறது.
சரி.. நாம் செய்யும் செயல்களில் எப்படித்தான் ஒரு டிசிப்ளின் கொண்டு வருவது? இதற்கு ஒரே வரியில் பதில் சொல்ல முடிந்தால், அதை செயல்படுத்த வைக்கவும் முடிந்தால், நீங்கள் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆகி விடலாம். அப்படி ஒரு வரி பதில் இதற்கு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. இது, தேவை, விருப்பம், மனநிலை, தொடர் பயிற்சி என்ற பல விஷயங்கள் சார்ந்த ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். அதனால் தான் ஒரே துறையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு அளவில் வெற்றி பெறுகிறார்கள். இந்த உடற்பயிற்சி முயற்சியும் அப்படிதான். சிலர், ஒரு மாதம் தொடர்கிறார்கள், சிலர் ஒரு வருடம், சிலர் தொடர்ந்து.
இதோ. இப்போ இங்கே வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. இன்சூரன்ஸ் கம்பெனி யும் கடிதம் அனுப்பி விட்டார்கள். அடுத்த ஆறு மாதம் ஒரே படம் தான்.