டிஜிட்டல் நாக்குகள்
Posted on June 19, 2015 • 3 minutes • 518 words
Photo by Jelleke Vanooteghem on Unsplash
குழந்தை அழுது.. என்ன பண்ண?
வூட்வர்ட்ஸ் க்ரேப் வாட்டர் குடு சரியாயிடும். (இது அம்மாக்கள் காலம்).
குழந்தை அழுது.. என்ன பண்ண?
க்ரேப் வாட்டர் குடு. அப்பவும் நிறுத்தலேன்னா அந்த செல்போன் அல்லது Tab எடுத்து கைல கொடு. சரியாயிடும். (இது நம்ம தலைமுறை)
இன்றைய குழந்தைகளுக்கு ஆரம்ப அறிமுகமே டிஜிட்டல் உலகம் தான். டிஜிட்டல் புரட்சியினால் வந்த பயன்கள் ஏராளம் தான். அதை மறுப்பதற்கில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாவற்றிற்கும் சாதனங்கள், செயலிகள். அதனால் தான், இன்றைக்கு, தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் வேகமும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இந்த முன்னேற்றங்கள் போலவே, நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகள் நம்மை வந்து அடைவதின் வேகமும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. முன்பெல்லாம், பத்திரிக்கையில் ஒரு செய்தி வர ஒரு முழு நாள் உழைப்பு தேவைப்பட்டது (இன்றும் அப்படிதான்). பின் தொலைகாட்சி வந்த பிறகு, உடனுக்குடன் என்ற வசதி வந்தாலும், எல்லோரும் எல்லா நேரமும் அதன் முன்னால் இருக்க முடியாது என்ற நிலையில், இன்டர்நெட் வந்து, அதை எளிமையாக உபயோகிக்கும், குறைந்த செலவு செல்போன்கள் வந்தவுடன் எல்லாம் மாறிப் போனது. இன்று, ஆன் லைன் பத்திரிகைகள் அல்லாமல், தனி மனிதன் கூட செய்தியாளராக மாறி, செய்திகளை சில வினாடிகளில் உலகில் எங்கு வேண்டுமானாலும் பரப்ப முடிகிறது. அதோடில்லாமல், பல கோடிப் பேர் பகிர்ந்து கொள்ள, கருத்துக்கள் சொல்ல, வலைத்தளங்கள் வந்து விட்டன.
இங்கு தான் சில சிக்கல்கள்.
எந்த செய்தியானாலும் அதை முறையாக விசாரித்து, அதில் இடம்பெறும் மனிதர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வது தான் பத்திரிக்கை தர்மம் (media ethics). இன்று, அதை வெகு சில பத்திரிக்கைகள் தான் கடை பிடிக்கின்றன என்பது வேறு விஷயம். அப்படி இல்லாமல் கிடைக்கும் செய்திகளை, எதுவும் விசாரிக்காமல், அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சிந்திக்காமல், ஒரு பத்திரிக்கை அப்படியே வெளியிட்டால் என்ன ஆகும். தகவல்கள் பரவும் வேகம் அதிகமாக அதிகமாக, தவறான செய்திகளால் பாதிக்கப்படுபவர்களின் பாதிப்பு மிக அதிகம் ஆகும். ஏனெனில், சில வினாடிகளில் அத்தனை மனிதர்களை இந்த செய்தி போய் சேர்த்திருக்கும். இதுவே அந்த செய்தியை நூற்றுக்கணக்கான , அல்லது லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும். அது தான் இன்று சமூக வலைத்தளங்கில் நடந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் டிஜிட்டல் நாக்குகள்.
பத்திரிக்கைகளுக்கு தேவை sensational news. ஒவ்வொரு கிளிக்கும் பணம். ஏனெனில், ஒவ்வொரு கிளிக்கும் விளம்பரங்களை ஈர்க்கும் ஒரு காந்தம். அதிக பயனாளர்கள் -> அதிக கிளிக்குகள் -> அதிக விளம்பரம் -> அதிக வருமானம். இதுதான் இன்றைய நிலை. பத்திரிகையாளர்களே இப்படி என்றால், தனி மனிதர்கள்?? தனி மனிதர்கள், ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் போது. இந்த ethics ஐ பின்பற்றுவது இன்று மிகவும் குறைந்து வருகிறது.
அப்படி தவறான தகவல்கள், வசவுகள் என்று ஒருவரை இணையம் வழியாக மிரட்டுவது, தொல்லை கொடுப்பது, கொடுமைப்படுத்துவது தான் Cyber Bullying.
இது குழந்தைகளுக்கு நடந்தால் என்ன ஆகும்?
உலக அளவில் இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 8 – 18 வயது பையன்கள் மற்றும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எது Bullying என்பது ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடும் விஷயம். இனம் / ஜாதி, மொழி, பாலினம், நிறம், உடல், நம்பிக்கை – இது போன்ற எதாவது ஒரு விஷயத்தை வைத்து, தவறான கருத்துகளைப் பரப்புதல், கிண்டல்கள் செய்தல், ஆபாசமான வர்ணனைகள் செய்தல், தனியாக மிரட்டுதல், இப்படி பல வகையான விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கின்றன. இதைக் கடந்து, சமாளித்து மீண்டு வரும் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், பல குழந்தைகள் இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான், இதை பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவை என்பதற்கான அபாய மணி.
http://nobullying.com/
http://stopitcyberbully.com/
நம்மாலான சில விஷயங்களையும் செய்யலாம்.
– குழந்தைகளை தங்கள் பர்சனல் புகைப்படங்களை எல்லோருக்கும் அனுப்புவதைத் தவிர்க்கச் சொல்லலாம்
– முடிந்த அளவு, 12 அல்லது 13 வயதுக்குப் பிறகு பர்சனல் செல்போன் கொடுக்கலாம். அதற்கு முன் அதை தவிர்க்கலாம்
– ஈமெயில் முகவரி இருந்தால், நீங்களும் அதன் பாஸ்வோர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். என்ன தான் சுதந்திரம் கொடுக்கிறோம் என்றாலும், நம் கவனிப்பும் அவசியம்.
இதில், இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த statistics அப்படியே சரியா என்பதைப் பற்றியெல்லாம் நாம் மிகவும் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. தெரிந்து கொள்ள வேண்டி விஷயம் என்னவென்றால், இது போன்ற விஷயங்களை எப்படி எதிர் கொள்வது என்பதைப் பற்றி நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியதும், அவர்கள் வெளிப்படையாக தங்கள் பிரச்சனைகளை நம்மிடம் சொல்லக் கூடிய அளவு ஒரு நட்பு சூழ்நிலையை உருவாக்க வேண்டியதும் முக்கியம்.