குமார் பக்கம்
June 17, 2015

நானும் அம்மாதான் – சிறுகதை

Posted on June 17, 2015  •  4 minutes  • 662 words

Mother and Kid

Photo by Liv Bruce on Unsplash

டேய்.. சரண் .. வாடா கண்ணா.. வந்து இந்த ஷூ வ போட்டுக்கோ.
ஏங்க! அந்த ஸ்டவ்வ 10 நிமிஷம் கழிச்சு ஆப் பண்ணிடுங்க. அப்புறம் நான் ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடறேன். வந்து எங்கள பிக் அப் பண்ணிக்கோங்க. மறக்காம கார்ல பெட்ரோல் போட்டுட்டு வந்துடுங்க. கம்மியா தான் இருக்கும்.

சரி. மறக்காம போன் எடுத்துட்டு போ..

அம்மா! எனக்கு வர்றப்ப ஐஸ்கிரீம் வாங்கித் தருவீங்களா?

கண்டிப்பா. ஆனா ஒன்னு தான். அதுக்கு மேல கேட்கக் கூடாது.

ம். ஓகே.

இந்த ஷூ லேஸ் கட்டி விடுங்கம்மா. ப்ளீஸ் ..

ஹ்ம்ம்.. 6 வயசாச்சு. பல தடவ சொல்லிக் கொடுத்தாச்சு. இன்னும் இத கத்துக்க மாட்டேங்கற .. சரி வா..

ஓகே ப்பா.. பை ..

பை கண்ணா. ஆட்டோவிலிருந்து வெளியே எல்லாம் எட்டிப் பார்க்கக் கூடாது. மால் ல அம்மா கூடவே இருக்கணும்.

ஓகே.

—-

ஹே. எங்கப்பா இருக்கே? ஒரு 5 நிமிஷம் முன்னாலே கூட 2 வாட்டி கூப்ட்டிருன்தேன்.. இப்போதான் நீ எடுக்கற.

ஹா.. சொல்லு மகி! ஆட்டோல போயிட்டு இருக்கோம். அதுனாலதான் எனக்கு கேட்கல.

சரண், முகுந்த் அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க? என்ன ஷாப்பிங்கா?

யா. அவர் நல்லா இருக்கார். சரண் என் கூடத் தான் வர்றான். ஸ்கூல் திறக்கப் போறாங்க இல்லையா.. இவனுக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். அப்படியே எனக்கும் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு.

ஓ பிஸி மாம் தான்.

நீயும் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு உன் பொண்ணுக்கு ஒடுவ தான. அப்ப தெரியும்.

சரி சரி. ஏய். உங்க அத்தையை நேத்து கோவில்ல பார்த்தேன். ரொம்ப வருஷம் ஆச்சில்ல நான் அவங்கள பார்த்து. உடனே அடையாளம் தெரியல. இவர் தான் சொன்னார். இவங்கள தெரியலியா.. முகுந்த்தோட அம்மா ன்னு. அப்பறம் தான் ஞாபகம் வந்துச்சு.

ஹ்ம்ம்.. என்னவாம்.

கொஞ்சம் டல்லா இருந்தாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். முகுந்த், சரண் எல்லாம் நல்லா இருக்காங்களான்னு என்னை கேக்கறாங்க. ஏண்டி.. அவங்க வீட்டுக்கு வர்றதில்லையா?

ஹ்ம்ம்.. எ கோவத்தே கெளப்பாதெ. ஆமா. அவங்க வந்து ஒரு வருஷம் ஆச்சு. பக்கத்துல தனியா தானே இருக்காங்கன்னு போன வருஷம் வந்து ஒரு மாசம் எங்க கூடவே இருங்கன்னு இவர் சொன்னார். வந்து சும்மா இருக்கணுமில்ல.. எப்பப் பார்த்தாலும் எதுத்த அபார்ட்மெண்ட், பக்கத்து அப்பார்ட்மெண்ட் ன்னு எல்லாப் பக்கமும் போய்ப் பேச்சு. அப்புறம் வீட்டுக்கு வந்து, அந்த வீட்டுக்காரங்க இதனால கஷ்டபடுறாங்க, இந்த வீட்டுக்காரம்மா இப்படி இருக்காங்க என்று நம்மகிட்ட. நமக்கு எதுக்கு இதெல்லாம். பாரு, எதுத்த வீட்டு பையன ஒரு நாள் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டார். என்னனு கேட்டா, அவங்க எங்கயோ ஹாஸ்பிடல் போறாங்களாம், ஒரு 4 – 5 மணி நேரம் நான் பார்த்துகறேன் நு. நம்ம வேலையை மட்டும் பார்த்தா போதாதா. இவர் அவங்களுக்கு சப்போர்ட் வேற. எனக்கு வந்த கோவத்துல, இப்படி தொல்ல பண்ணாதீங்கனு சொல்லிட்டேன். அப்போ இருந்து வரல. இவர் போய் பார்த்துட்டு வர்றனு சொல்வார். நான் இவர் கிட்ட, நீங்களா போய் பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்படி என்ன ஒரு ஈகோ.

ஹ்ம்ம். சரி விடு. பெரியவங்க தானே.

சரி மகி. மால் வந்துடுச்சு. நீ ப்ரீயா இருந்தா அடுத்த வாரம் வா. நம்ம பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு. நிறைய பேசலாம்.

சரி. அப்பறம் பேசலாம். பை ..

மேடம்.. நான் தான் இந்த மால் மேனேஜர். எதுக்கு அழறீங்க? நிதானமா சொல்லுங்க.

சார், என் பையன்.. 6 வயசு. பாத்ரூம் போகணும்னு சொன்னான். நான் வெளிலதான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன். 10 நிமிஷமா காணம்னு செக்யூரிட்டி கிட்ட கேட்டேன். அவங்க பார்த்துட்டு யாரும் இல்லன்னு சொல்றாங்க. அப்பத்தான் இந்த டாய்லெட் க்கு ரெண்டு எக்ஸிட் இருக்குன்னு தெரிஞ்சிது. அவன் தெரியாம இன்னொரு வழில போய்ட்டானு நினைக்கிறேன். எங்க தேடியும் காணோம். ஏதாவது செய்ங்க .. ப்ளீஸ் ..

இதப் பாருங்க. அழாதீங்க. கண்டு பிடிச்சர்லாம்.

ஏம்பா..கேமரால பார்த்தீங்களா? மத்த ஆளுங்க கிட்டயும் சொன்னீங்களா?

கேமரால மானிடர் பண்ணிட்டு இருக்கோம் சார். இது வரைக்கும் அப்படி யாரும் பாக்கல.

சரி, இப்பவே ஸ்பீக்கர் ல சொல்லிடுங்க.

மேடம், உங்க பையன் கிட்ட உங்க போன் நம்பர் இருக்கா?

ஆமா சார். அவனுக்கு எங்க நம்பர் தெரியும்.

கவலைப்படாதீங்க மேடம். எப்படியும் இங்க தான் இருக்கனும்.

ஹல்லோ! ஆமா. நான் அவன் அம்மா தான் பேசறேன். அப்படியா.. ஒ மை காட். ரொம்ப தேங்க்ஸ் ங்க. ரொம்ப தேங்க்ஸ். இப்போ நான் அங்கே வரேன்.

கண்ணா, எங்கடா போன?
ரொம்ப தேங்க்ஸ் மா. எங்கே பார்த்தீங்க இவன?

ம்மா. ம்மா.

அழாதேடா.

என்னடியம்மா ஊர் இது? நான் இங்கே வந்தப்போ, இவன் நின்னு அழுதிட்டிருந்தான். எல்லாரும் பாக்கறாங்களே தவிர, யாரும் நின்னு கேட்கல. என்கிட்ட போன் இல்ல. மத்தவங்க கிட்ட கேட்டா, எதோ சொத்த கேக்குற மாதிரி பாத்துட்டுப் போறான். கடைசியா ஒரு பையன் போன் கொடுத்தான். அப்புறம் தான் உனக்கு போன் பண்ணினேன்.

உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுனே தெரியல மா.

இதுக்கு என்னம்மா நன்றி. இந்த மாதிரி நேரத்துல நம்ம வேலையை மட்டும் பார்த்துட்டு போயிர முடியுமா? இவன பார்த்தா என் பேரன் மாதிரியே இருக்கு. ………………..அச்சச்சோ, பையன அழ வேண்டாம்னு சொல்லுட்டு நீ இப்ப ஏன் அழற?

அம்மா.. நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு ஒரு நாள் வரணும். உங்க நம்பரோ, அட்ரஸோ கொடுங்க.

என் பையன் வீடு இங்கே தாம்மா இருக்கு. அவன் நம்பர் தரேன்.

நீ ஐஸ்கிரீம் கேட்ட இல்ல. வா. வாங்கி தரேன்.

வேண்டாம்மா. உங்கள அழ வெச்சுட்டேன். ஐ ம் சாரி.

இல்லடா கண்ணா. அது உன் தப்பு இல்ல. லீவ் தட். ஆனா கொஞ்ச நேரம் உன்ன பாக்காம துடிச்சுப் போயிட்டேன். அதான்.

அம்மா.. நான் ஒன்னு கேட்கட்டுமா?

கேளு.

இந்த மாதிரி தான் அப்பாவோட அம்மாவும், அப்பாவ பாக்காம பீல் பண்ணுவாங்களா?

ஹலோ.. முகுந்த்..

ஹலோ.. ஹ்ம்ம் சொல்லு. இன்னும் 5 நிமிஷத்துல மால் க்கு வந்துடுவேன். லஞ்ச் அங்கேயே ஒரு ஹோட்டல்க்கு போலாமா?

வேண்டாம். வெளிலயே வெய்ட் பண்ணுங்க. நாங்க வந்துடறோம். உங்க அம்மாவெ போய் பார்த்துட்டு வரலாம்.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com