குமார் பக்கம்
June 15, 2015

ஆறரைக் கோடி

Posted on June 15, 2015  •  3 minutes  • 515 words

Dinosaur

Photo by Amy-Leigh Barnard on Unsplash

இன்று நண்பர்கள் மற்றும் குழந்தைகளுடன் Jurassic World படம் போயிருந்தேன்.

என்னத்த சொல்ல.

– 10 டினோசர் கூட மெயின் டினோசர்க்கு ஒரு ஒபெனிங் சாங் இல்ல
– உலகின் பல இடங்களை ஓசியில் பார்க்கும் குடுப்பினை இல்ல (பாடல்கள் வழியாக.. ஏன்னா ஒரு பாட்டு கூட இல்ல)
– நம்ம தனுஷ் கூட, ஒடிசலான ஒரு ஒடம்ப வச்சிக்கிட்டு ஒரு கையில அடிச்சா பத்து பேர் 20 அடி தள்ளி போய் விழுறான். 60 – 70 டன் எடையுள்ள நம்ம டினோசர் அப்படியே நடந்தா ஒரு 100 பேர் தெரிச்சு பறக்க வேண்டாமா? அது என்னமோ ஒவ்வொருத்தனா புடிச்சி அடிக்குது.
– இறுதியில் மக்களுக்கு கருத்து சொல்ற 10 நிமிஷ வசனங்கள் இல்ல

சப் ன்னு ஆகிப் போச்சு. நீங்க இன்னும் வளரனும் கண்ணுங்களா என்று நம்ம ஹாலிவுட் இயக்குனர்களை நினைத்துக் கொண்டேன்.

திரு. இராம நாராயணன் இறப்பதற்கு முன்னால் வைத்திருந்த கதை இது என்று ஒரு நண்பன் சொன்னதை நம்பி போன என்னைத்தான் சொல்லனும்.

ஆனாலும் பாருங்க. வெளியான சில நாட்களில் இந்திய ருபாய் மதிப்பில் 3000 கோடிகள் மேல் அள்ளி இருக்கிறது.

இந்த படம் போறோம் என்று சொன்னவுடன், இதற்கு முந்தைய version ஆன Jurassic Park படம் போன ஞாபகம் வந்தது. 7 th Std அல்லது, 8 th Std ன்னு நினைக்கிறேன். பள்ளியில் இருந்து அழைத்துப் போனார்கள். படத்தில் என்ன நடக்குது என்று மட்டும் கொஞ்சம் புரிந்தது. படத்தின் பிரம்மிப்பு, தரம் (richness) எல்லாம் பிடித்திருந்தது. ஆனால், கதை . ஹ்ம்ம் ..சுத்தம்.

இப்போ அப்படி நடக்காது என்று கொஞ்சம் நம்பிக்கை. ஏன்னா ..
ஒரு ரெண்டு வருஷத்திற்கு முன்னால் என் பையன் வந்து, “டாடி, நான் Paleontologist ஆகணும்” அப்படினான். நானும், நமக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம், என்ஜினியர், டாக்டர் தவிர எது படிச்சாலும், உருப்பட முடியாது அப்படினுதான். அதனால் நான் அவன்கிட்ட கேட்டேன்: “இது இன்ஜினியரிங் ல வருதா இல்ல மெடிசின் ல வருதா” ன்னு. அவனோ, இது ஒரு தனி field என்றான். என்ன என்று பார்த்தால், பல ஆயிரம் வருடங்களாக மண்ணில் புதைந்து போயிருக்கும் விலங்குகள், உயிரினகள் பற்றிய விபரங்களை தோண்டி ஆராய்ச்சி செய்வது பற்றிய துறை அது. ஏன் இதில் விருப்பம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்: டினோசர்கள் பற்றி பள்ளியில் படித்த போது அதில் மிகுந்த விருப்பம் கொண்டு, அதன் வெவ்வேறு சந்ததிகள் பற்றிய ஒரு ஆராய்ச்சியே செய்து வைத்திருந்தான். இதெல்லாம் வெளி உலகிற்கு தெரிய வர, Paleontologists மற்றும் அவர்கள் ஆராய்சிகள் தான் உதவுகிறது என்று தெரிந்து கொண்டு அதன் மேல் அவனுக்கு ஒரு விருப்பம். பல முறை, டினோசர் வகைகளின் பெயர்கள், அதன் படங்கள், அதன் குணங்கள் என்று நிறைய சொல்லி இருக்கிறான். இந்த படம் பார்த்த போது, பல வகைகளில் இருந்து ஜீன்களை எடுத்து செயற்கையாக செய்தது என்று சொன்ன போது, அவைகளின் குணாதிசயங்கள் பற்றி இவன் சொன்னது நினைவு வந்து கொஞ்சம் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது.

இவ்வளவு பலமுள்ள மிருகங்கள் எப்படி ஒரேயடியாக அழிந்து போயின என்று தேடித் பார்த்தால், பல தியரிகள் சொல்கிறார்கள்.

அதில் பெரும்பாலனவர்கள் சரி என்று நம்பும் ஒரு தியரி.

ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன்பாக ஒரு பெரிய்ய்ய விண்கல் ஒன்று பூமியில் விழுந்து, பலப் பல மாற்றங்களை செய்து விட்டது என்கிறார்கள். அதில் ஒன்று தான் உயிரினங்களின் அழிவும்.
இந்த விண்கல் விழுந்த பாதிப்பில் உருவான புகை, குப்பை, கடல் மாற்றங்கள் எல்லாவுமாகச் சேர்ந்து, காற்றில் அமிலத் தன்மை அதிகம் ஆகி, அமில மழையாக பெய்து, பல தாவரங்கள், அதை நம்பி இருந்த சின்ன மிருகங்கள்,அதை நம்பி இருந்த மற்ற மிருகங்கள் என்று உணவுச் சங்கிலி (Food Chain) உடைந்து, இது போல அழிந்து விட்டது. அப்படி, உணவுக்காக பிற விலங்குகளை நம்பி இருந்த டினோசர்களும், பல காலம் உணவில்லாமல் மரித்துப் போனதாகச் சொல்கிறார்கள். இது தியரி தான். வெவ்வேறு இடங்களில் நடந்த விஷயங்களைச் சேர்த்து, connecting the dots. உண்மையாகவே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஆவிகளுடன் பேசும் திறமை உள்ளவர்கள் யாராவது, செத்துப் போன எதாவது ஒரு டினோசர் ஆவியுடன் பேசி சொன்னால்தான் உண்டு.

இது எதோ டினோசர் மட்டும் அழிந்து விட்டது என்று இல்லை. 25 கிலோ வுக்கு மேல் இருந்த பெரும்பாலான எல்லா உயிரினங்களும் தான். அது வரை, Reptiles (ஊர்வன) தான் இருந்திருகிறது. அதற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக பாலூட்டிகள் (Mammals) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன.

இதற்கு மேல் சொன்னால் டாகுமெண்டரி மாதிரி ஆகி விடும்.

அதனால்.. மீண்டும் ஒரு எச்சரிக்கை. Jurassic World இராம நாராயணன் கதை என்று நான் போன மாதிரி நீங்களும் நம்பி போய் விடாதீர்கள். அவ்வளவு தான்.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com