கை முதல் கார் வரை
Posted on June 13, 2015 • 2 minutes • 349 words
தெற்கு ஆப்ரிக்காவில், சூடான் என்று ஒரு நாடு இருக்கிறது. பக்கத்தில் எகிப்து, எத்யோபியா. 1985 – 90 களில் வடக்கு மற்றும் தெற்கு சூடான் பகுதிகளுக்குள் வந்த போரினால் அந்த நாடு உருக்குலைந்து போயிருக்கிறது. இந்த போர், வடக்கு மற்றும் தெற்கு சூடான் பகுதிக்கும் பல வருடங்களாக நடந்து வந்த, பணம், மதம், மற்றும் வளங்களை சொந்தம் கொண்டாடுவது போன்ற பிரச்சனைகளால் பெரியதாகி பல வருடங்கள் நடந்து பின் ஒய்ந்தது. குறிப்பாக, அந்த நாட்டின் இலட்சகணக்கான குழந்தைகள், தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து, பெற்றோர்களை இழந்து, பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், உறுப்புக்கள் இழந்து என்று பல விளைவுகள்.
2012 இல் இதைப் பற்றி Time இதழில் ஒரு கட்டுரை வருகிறது. அந்தக் கட்டுரையில், டேனியல் ஓமர் என்ற ஒரு 14 வயதுப் பையனை பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். 14 வயதான அந்தப் பையன் போரினால் குண்டு பட்டு, தன் இரு கைகளையும் இழந்திருக்கிறான். எதிர்காலம் பற்றி பெரிய பயம். தன் கையினால் உணவு எடுத்து உண்ண முடியாது. கலிபோர்னியாவில் இருக்கும் எபெளிங் என்பவர் இதைப் படிக்கிறார். எதாவது செய்ய எண்ணி, ஒரு குழுவை அமைக்கிறார். அந்தக் குழுவில், நரம்பியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், robohand என்ற செயற்கைக் கைகளை தயாரிக்கும் வழியைக் கண்டு பிடித்தவர் என்று சேர்த்த இந்தக் குழு கூடவே ஒரு நிறுவனத்தையும் இணைத்துக் கொள்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இவர்கள் எல்லோரும் சேர்ந்து குறைந்த செலவில் (இந்திய மதிப்பில் ஒரு 6000 ருபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்) அந்த பையனுக்கு ஒரு செயற்கை கை தயாரிக்கிறார்கள். 2013 இல் அங்கே சென்று அந்தப் பையனுக்குப் பொருத்துகிறார்கள். அத்தோடு நில்லாமல் அங்கேயே ஒரு கூடத்தையும் அமைக்கிறார்கள். அங்கேயே செயற்கை கைகள் தயாரிக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கும் பொருத்துகிறார்கள்.
அப்படியே கொஞ்சம் இரண்டு வருடங்கள் முன்னோக்கி வாருங்கள்.
2015 மார்ச் மாதம் : சிகாகோ
Local Motors என்ற நிறுவனம் முழுதாக இயங்கக் கூடிய அளவில் ஒரு காரை 44 மணி நேரத்தில் தயாரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இப்படி, கை முதல் கார் வரை, நாம் இருக்கும் இடத்திலேயே தயாரிக்க உதவும் தொழில்நுட்பம் தான் : 3D Printing. சின்னச் சின்ன, அன்றாடம் உபயோகிக்கும் நாற்காலி, மேஜை உட்பட, செயற்கை உறுப்புக்கள், ஏன் ஒரு வீடு கூட இந்த முறையில் எளிதில் செய்து விடலாம் என்பது தான் இப்போதைய மிகப் பெரிய முன்னேற்றம்.
எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும், அது உயிர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதில் தான் அதன் வெற்றி இருக்கிறது. கை முதல் கார் வரை என்று சொன்னாலும் கூட, ஒரு கார் இந்த முறையில் முழுதாக உருவாவதைப் பார்க்கும் போது வந்த சந்தோஷத்தை விட, Project Daniel படத்தில் அந்த பையன் தன் (செயற்கை) கையால் உணவு எடுத்து உண்ணும் அந்த சில வினாடிகள், எத்தனையோ செய்திகளைச் சொல்கின்றன. எங்கோ இருக்கும், நமக்கு சம்பந்தமில்லாத பிறிதொரு மனிதனின் (குறைந்த பட்சம் ஒரு மனிதனின்) வாழ்வில் ஒரு அர்த்தத்தையும், புன்னகையையும் நம்மால் கொண்டு வர முடியும் என்றால், அது தான் நம் வாழ்வின் அர்த்தம். இதைச் செய்யும் மனிதர்கள் மிகப் பெரிய மரியாதைக்குரியவர்கள். ஏனெனில், அன்பு உடையவர்கள் தானே மேலோர்..!!
அந்த இரண்டு காணொளியும்..
Project Daniel
[embedyt]https://youtu.be/SDYFMgrjeLg[/embedyt]
3D Car Printing in 44 Hours
[embedyt]https://youtu.be/WwvwvjNjQaQ[/embedyt]