தலைக் கவசம்
Posted on June 11, 2015 • 2 minutes • 313 words
Photo by Naveen Saxena on Unsplash
ஜூலை 1 முதல் தலைக் கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் இப்போது மீண்டும் ஒரு படையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு நினைவு தெரிந்து 4 ஆவது முறையோ 5 ஆவது முறையோ, இப்படி நீதிமன்றங்கள் தலையிட்டு இதை கட்டாயமாக்குவது. இந்த முறையாவது கடுமையாக கடைபிடிக்கப் படுமா என்பதை கொஞ்ச நாட்கள் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்னால் என் அப்பா இப்படி ஒரு தற்காப்பு இல்லாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது தான் ஒரு விபத்தினால் தலையில் அடிபட்டு இறந்து போனார். அவர் மருத்துவமனையில் இருந்த ஒரு 3 வாரமும் பல அனுபவங்கள். மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவின் முன் அமர்ந்திருப்பது என்பது கொடுமையான தண்டனைகளில் ஒன்று. என் அப்பாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு வந்த இதே போல விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உறவினர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சொன்ன விஷயங்கள் அப்படியே மனதை உலுக்கும் படியாக இருந்தன.
மருத்துவமனையில் தங்கி இருந்த போது, பக்கத்தில் சில வேலைகளுக்குச் செல்ல எங்கள் இரண்டு சக்கர வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டி இருந்தது. அப்போது, ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஓட்டலாம் என்று பார்த்தால், கோவையில் பல இடங்களில் தேடியும் ஒரு ஹெல்மெட் கடை பார்க்க முடியவில்லை. நஞ்சப்பா ரோட்டில் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள். அங்கேயும் இல்லை. அதே ஊரில் இருப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்து வாங்க முடியுமோ என்னவோ, தெரியவில்லை. இது என் தவறு தான். கிடைக்கும் வரையில் தேடி வாங்கி இருக்க வேண்டும். சில விஷயங்களை நாம் கடைபிடிக்க கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன என்பது உண்மைதான்.
இந்த சட்டங்கள் எவ்வளவு கடுமையாக கடை பிடிக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத் தான் இதன் பலன் இருக்கும். ஓட்டுனர் உரிமம் கொடுக்கும் இடத்தில் இருந்து கடுமையான சட்டங்கள் வேண்டும். மேலும், ஓட்டுனர் மட்டும் இல்லாமல், பின்னால் உட்கார்ந்து வருபவர்களும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும். இப்போது வரும் சட்டமும் அப்படிதான் சொல்கிறது என்று நம்புகிறேன்.
வாகனங்கள் பற்றியும் விபத்துக்கள் பற்றியும் பேசும் போது, இந்த மூன்று தற்காப்பு விஷயங்கள் பற்றியும் சொல்ல வேண்டும்.
- விபத்துக் காப்பீடு : ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தது ஒரு 5 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு அவசியம். இன்றைய நிலையில், மருத்துவமனை செலவுகள் என்பது மிகவும் அதிகம். ஒரு வேளை எதாவது விபத்து ஏற்பட்டால் அந்த நேரத்தில் செலவுகளை சமாளிக்க ஓடிக் கொண்டிருப்பதற்கு பதில் இது உதவும். இதுவும் ஒரு தற்காப்பு தான்.
- சீட் பெல்ட் : அடுத்த விஷயம். காரில் போகும் போது, சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியம். பல விபத்துக்களிலிருந்து காப்பாற்றப் படலாம். பல நிகழ்வுகள் கேள்விப்படுகிறேன்.
- பயணிக்கும் நேரம் : முடிந்த அளவு, அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணி வரை பெருவழிச் சாலைகளில் பயணிக்காமல் இருப்பது நல்லது. இந்த நேரத்தில் தான், தூக்கத்தினால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள்.