ஜாதிகள் உள்ளதடி பாப்பா
Posted on June 11, 2015 • 3 minutes • 582 words
கோவையில் வாடகைக்கு வீடு வேண்டி சில வீடுகளைப் போய் பார்த்தேன். முதலில் ஒரு வீடு. சுற்றி எல்லாம் பார்த்து விட்டு, உரிமையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சின் இடையே அவர்கள் சாதி பெயரைச் சொல்லி.
நீங்க எங்க ஆளா? என்று கேட்டனர்.
நான் “ஆமா” என்று சொல்லி வைத்தேன்.
அவர்களுக்கு சந்தோஷம். சரிங்க நான் யோசித்து திரும்ப அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.
அடுத்த வீடு. அந்த அம்மா வீட்டையெல்லாம் காட்டி விட்டு, வேலை, சொந்த ஊர், குடும்பம் பற்றி மட்டும் கேட்டார். வாடகை பற்றி பேச்சுகளுக்குப் பின் வேறு எதுவும் கேட்கவில்லை.
அடுத்த வீடு. அந்த வீட்டுக்காரர் இருந்தார். முதல் வீடு மாதிரியே சாதி பெயரைச் சொல்லி (இவிங்க வேற க்ரூப்பு) – “நீங்க எங்க ஆளா”? என்று கேட்டார். இல்லை என்றாலும், அதற்கும் “ஆமா” என்று சொல்லி வைத்தேன். இங்கே வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
நல்லாத் தான் போயிட்டு இருந்துச்சு. அப்போது ஏதோ வேலையாக மாடியில் இருந்த அவர் மனைவி வந்தார். அந்த அம்மாவிடம் இவர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். எல்லாம் சொல்லி விட்டு, “நம்ம ஆளுங்க தான்” என்று சொல்லி விட்டார். அவரும் “அப்படியா.. ” என்று சிரித்துக் கொண்டே “நீங்க என்ன பிரிவு” என்று கேட்டு விட்டு, தெலுங்குக்குத் தாவி விட்டார். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. நமக்குத் தெரிந்த தெலுங்கு எல்லாம், எல்லாவற்றுக்கும் கடைசியில் “லு” போட்டுப் பேச வேண்டும் என்பது தான். அதற்கு மேல் ஒண்ணும் தெரியாதுலு. “மாட்டிகினியா” என்று என் மனது கிண்டல் செய்தது. என்ன புண்ணியமோ, செல்போன் அடித்தது. மார்டின் கூப்பர் க்கு மானசீகமாக ஒரு நன்றி சொல்லி விட்டு, செல்போன் எடுத்தேன்.
ஒரு நிமிஷங்க.. இப்போ, இப்போ வந்திடறேன் என்று சொல்லி வெளியே வந்தேன். “Magic bricks” இல் இருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். சார் நீங்க வீடு வாடைகைக்கு வேணும்னு register பண்ணியிருந்தீங்க, அது விஷயமா கூப்பிடறோம் என்று சொன்னார். “உங்க அழைப்பிற்கு ரொம்ப நன்றி” என்று சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு என்னைத் தப்பிக்க வைத்த இந்த களேபாரம் எல்லாம் எப்படித் தெரியும்? அவ்வப்போது உள்ளே பார்த்துக் கொண்டேன். அந்த அம்மாவோ போர்டிகோ வில் நான் வந்தவுடன் தெலுங்கில் மாட்லாட காத்திருக்கிறார். நானும் கோவையில் இருந்து சென்னை வரை எல்லா வீட்டு வாடகை விபரங்களையும் போனில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நல்லவேளையாக, ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து ஒரு சின்னப் பையன் இறங்கினான். அவர்களின் பேரன் ஸ்கூல் விட்டு வந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உள்ளே போனான். அந்த அம்மா அவனுடன் பேசிக் கொண்டே உள்ளே சென்று விட்டார்கள். ஆஹா.. இது தான் நேரம். மீண்டும் போனில் கூப்பிட்ட பெண்ணுக்கு நன்றி சொல்லி விட்டு உள்ள போனேன். அந்த ஐயா இருந்தார். அவரிடம், உங்க நம்பர் கொடுங்க, நான் போய் அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.
பொய் சொல்ல வேண்டும் என்று இவர்களிடம் நானும் அவர்கள் “ஆள்” என்று சொல்லவில்லை. பொதுவாகவே எனக்கு ஜாதி சார்புகள் பிடிப்பதில்லை. அதனால் அவர்கள் கேட்பதற்கு ஆம் என்று சொல்லிவிட்டால் அதற்கு அப்புறம் மற்ற விஷயங்கள் பேசலாம் என்று கட் செய்வதற்காக சொன்னது இப்படி தமாஷ் ஆகி விட்டது. இவ்வளவு உள்ளே போவார்கள் என்று தெரியவில்லை. ஒரு 6 மாதம் – 1 வருடம் வாடகைக்கு கொடுக்கக் கூட இவர்களுக்கு அவர்கள் ஜாதியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. இன்றைக்கும் கூட, சில மக்களுக்கு ஜாதியின் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படும் போது, அதை எதிர் கொள்ள அவர்கள் ஒரு அணி திரள வேண்டி இருக்கிறது. இதனால் மற்ற ஜாதியினரும், கூட்டம் சேர்த்தால் தான் அவர்கள் தரப்பு விஷயங்களை செயல்படுத்த முடியும் என்று ஆரம்பித்து, இன்று ஒரு சாதாரண விஷயத்திற்குக் கூட அவர்கள் “ஆள்” ஆக இருக்க வேண்டி இருக்கிறது.
ஜாதி ரீதியிலான அடக்கு முறை எதுவும் எனக்கு நடந்ததில்லை. எனக்கு தேவையான விஷயங்கள் தேவையான நேரத்தில் கிடைக்கப் பெற்றேன். அதனால் ஜாதி சார்பற்று இருக்க விரும்புகிறேன் என்று சொல்வது எளிதாக இருக்கிறது. இதுவே, இன்னமும் இதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனால், அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் அடக்குமுறைகள் அனுபவிக்கும் ஒருவரால் இப்படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
பெரிய நகரங்களில் இப்படி இல்லை என்று பேசப்படுவதைக் கேட்டிருகிறேன். அது உண்மை இல்லை. அங்கேயெல்லாம் ஜாதியின் பெயர்களில் இல்லை. ஆனால் majority, minority என்று அங்கேயும் உண்டு, பெங்களூரில் இருந்த போது, தமிழர்கள் minority என்று உணர்வு இருந்தது. அப்படித் தான் சில விஷயங்களும் நடந்தன. எனவே தமிழர் அமைப்புகள் என்று சில அமைப்புகள் ஆரம்பித்தார்கள்.
அமெரிக்காவில், பொதுவாக இப்படி ஏற்றத் தாழ்வுகளைக் காண முடியாது. ஆனால் இங்கேயும் பல தலை முறைகளாக கறுப்பின மக்களும், மெக்சிகன்களும் இரண்டாம் தர குடி மக்களாகத் தான் நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். அது ஒரு பெரிய அரசியல். ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver) என்ற மனிதரைப் பற்றி சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். இணையத்தில் தேடித் பாருங்கள். தமிழிலேயே ஒரு புத்தகம் இருக்கிறது. எவ்வளவு கொடுமையான அடிமை முறை இருந்தது என்று புரிந்து கொள்ளலாம்.
எங்கள் குழந்தைகளிடம் ஜாதி சொல்லி வளர்ப்பதில்லை. அதே நேரம் புரிந்து கொள்ளும் வயதில் இதை பற்றி எல்லாம் கேட்கும் போது, உலகம் சம தர்ம இடம் என்று பொய் சொல்லவும் முடியாது. அதனால், இப்போதைக்கு “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்று தான் சொல்ல முடியும் போலிருக்கிறது.