ஹீரோ பேனா
Posted on June 10, 2015 • 2 minutes • 342 words
இந்த வருடம் என் பையன் கலந்து கொண்ட ஒரு கணிதப் போட்டிக்கான சான்றிதழ்கள் வாங்கப் போயிருந்தேன். இது மிகவும் கடினமான போட்டி . 78000 பேர் கலந்து கொண்ட இதில் Top 10% குரூப் இல் தேர்ச்சி பெற்றிருந்தான். திரும்பி வரும் போது அவனுக்குப் ரொம்ப பெருமை. அவனை ஊக்கப்படுத்த ஒரு பரிசும் கொடுத்தேன்.
சின்ன வயதில் நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
எங்க மாமா ஒருத்தர் இருக்கார். ரேடியோ கடை சந்திரன் மாமா. நான் பார்த்த ரெண்டாவது தொழில் முனைவர். பெரியகுமாரபாளையத்தில் 1980 – 1990 இல் ரேடியோ பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார். இவர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி. என்னுடைய 5 அல்லது 6 வயதில் இருந்து 10 – 12 வயது வரை அடிக்கடி இவர் கடைக்குப் போயிருக்கிறேன்.
மின் மற்றும் மின்னணுவியல் பற்றி மிகுந்த அறிவு கொண்டவர். அன்றாட தேவைகளுக்கான சின்னச் சின்ன கருவிகள் நிறைய செய்திருக்கிறார் என்று நினைவு.
அவருக்கு இன்னொரு திறமையும் உண்டு. Fonts மற்றும் Typography பற்றிய ஒரு அலாதி ஆர்வமும், அறிவும் கொண்டவர். அதன் அவசியமும், பயன்பாடும் பிற்க்காலத்தில் கணினியில் இருக்கப் போகிறது என்பதெல்லாம் அப்போது அவருக்குமே தெரியாது என்று நினைக்கிறேன். அல்லது அப்போது இருந்த, கணினிகளின் முன்னோடிகள் பற்றி தெரிந்து வைத்திருப்பாரோ என்னமோ எனக்குத் தெரியாது. ஆனால், அவரின் Typography வேலைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. ஒரு போஸ்டர் ஆக இருக்கட்டும், எதாவது வரைவதாக இருக்கட்டும், அவர் செய்திருக்கும் Font variations அப்படியே பிரமிக்க வைக்கும். அவ்வளவு அழகாக இருக்கும்.
நான் 1 ஆம் வகுப்பு படிப்பதில் இருந்து 5 ஆம் வகுப்பு படிக்கும் வரைக்கும், ஒவ்வொரு வருடமும் முதல் ரேங்க் எடுத்தால், ஒரு பரிசு தருவார். அவர் creativity மாதிரியே அவர் தரும் பரிசும் நன்றாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை முதல் ரேங்க் எடுத்தேன் என்ற நினைவு. அப்படி வாங்கிய போது ஒரு வருடம் ஹீரோ பேனா ஒன்றைப் பரிசாகத் தந்தார். எனக்குத் தெரிந்த யாருமே அப்போது இந்த பேனா வைத்திருக்கவில்லை. எல்லா பேனாவிலும் இங்க் நிரப்பும் போது சிந்தும். ஆனால், இதில் அந்த கவலை இல்லை. எழுத மிகவும் அருமையாக இருக்கும். அதனாலும், முதல் ரேங்க் எடுத்து இதை வாங்கி இருக்கிறேன் என்பதாலும், பல வாரங்கள் பயங்கர அலப்பறை செய்து கொண்டிருந்தது இன்றும் நினைவு இருக்கிறது. பல வருடங்கள் அதை பத்திரமாக வைத்திருந்தேன்.
என்றுமே, இது போன்ற ஊக்கம் மற்றும் நம் செயல்களின் விளைவுகளை நம்மைத் தவிர இன்னொருவரும் ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கிறார்கள் என்ற நினைப்பு போன்றவை நம் முயற்சியை வலுவாக்க உதவும்.
10th std க்கு அவருடன் அவ்வளவாக தொடர்பு இல்லாமல் போனது. பிறகு college எல்லாம் முடித்த பின் சந்தித்தேன். திறமை இருப்பவர்கள் எல்லோருமே பெரிய வெற்றிகளைப் பெற்று விடுவதில்லை. அவரும் அப்படிதான். அவரின் குடும்பம், மற்றும் அவரின் பொருளாதார நிலைமை சில காரணங்கள். தன் திறமையை பெரிதாக விற்கும் வாய்ப்புகள் அமையவில்லையா என்றும் தெரியவில்லை. சில நேரங்களில் நினைத்தால் கஷ்டமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன், நண்பர்கள் சேர்த்து ஆரம்பித்த ஒரு நிறுவனத்திற்கு அவரை சிபாரிசு செய்தேன். கொஞ்ச நாட்கள் அது அவருக்கு உதவி இருக்கலாம். மீண்டும் அவருடன் பேச வேண்டும்.