குமார் பக்கம்
June 9, 2015

சுஜாதா அவர்கள் சொன்ன 10 விதிகள்

Posted on June 9, 2015  •  5 minutes  • 892 words

இது, திரு. சுஜாதா அவர்கள் இளைஞர்களுக்குச் சொன்ன 10 விதிகள்.

இணையத்தில் தேடிய போது இங்கே கிடைத்தது. நன்றி.

————————————————————————————————————————–

  1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீனவிஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

  2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப்போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

  3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசுவிரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூவரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

  4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை,சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும்பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

  5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

  6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகிதமக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறைஎண்ணிப் பாருங்கள்.

  7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச்செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்லவேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்குமுக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்துபொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவதுதேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவதுதூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால்தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

  1. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம்அல்லது புத்தகம் படிக்கலாம்.

  2. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவதுஎன்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவதுஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். இந்த பத்தில்தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்… -இந்த கட்டுரை ,இணையத்தில் இருந்து தொகுக்கபட்டவை.

இதை ஒரு 15 அல்லது 20 வருடங்களுக்கு முன் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். இதையே அவர் நம்ம software துறையில் வேலை செய்பவர்களுக்கு இப்போ சொன்னால் எப்படி சொல்லி இருப்பார்? சுஜாதா வாசகர்கள், ரசிகர்கள் மன்னிப்பார்களாக.

  1. அன்றாட வேலையைத் தாண்டிய பிற விருப்பங்களையும், தேடலையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது எதாவது ஒரு பொழுது போக்கு சார்ந்ததாக இருக்கலாம், குழந்தைகளின் கல்வியில் உங்கள் பங்களிப்பாக இருக்கலாம், இப்படி ஏதாவது. வாழ்க்கை என்பதை பெரிய வட்டமாகப் போட்டு அதில் 100 சதவிகிதத்தையும் வேலை என்று நிரப்பவும் வேண்டாம், அது போனால் எல்லாமும் போன மாதிரி உடைந்து போகவும் வேண்டாம்.

  2. 2000 ஆம் வருடத்தைக் காட்டிலும் இப்போது 2015 இல், தகவல்கள் பெரும் வேகம் (நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து) சுமார் 1000 முதல் 17500 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. இந்த அசுர வளர்ச்சியை நீங்கள் எந்த முறையில் உபயோகப்படுத்திக் கொண்டீர்கள் அல்லது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு 4 GB சினிமா file ஐ 1 மணி நேரத்தில் டவுன்லோட் செய்து பார்க்க முடிகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் அல்ல. ஏனெனில், இந்த உதாரணம், இந்த வளர்ச்சியை உங்கள் இன்டர்நெட் வசதி அளிக்கும் கம்பெனி உபயோகப்படுத்திக் கொண்டதன் மூலம் உங்களுக்கு கிடைக்கப் பெற்றது.

  3. 36 x 20 என்ற கணக்கைக் கூட calculator உதவி உடன் தான் செய்கிறீர்களா? உங்கள் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக கருவிகளிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களை வழக்கம் போல் கருவிகள் இல்லாமல் செய்யப் பழக வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களை நினைவு வைத்துக் கொள்ளுதலில் இருந்து தொடங்கலாம்.

  4. இப்போது நீங்கள் ஒரு வேலையில் இருந்தால், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் நீங்கள் செய்த சாதனைகளைத் தொகுத்து உங்கள் resume ஐ மேம்படுத்துங்கள் (புதிய வேலை தேட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட). நீங்கள் செய்திருக்கும் விஷயங்கள் உங்களையே திருப்தி செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டு புதியதாக எதாவது கற்றுக் கொள்ளவோ அல்லது செய்து முடிக்கவோ திட்டமிடலாம். அப்படி இல்லை என்றால், புதியதாக வேலை தேட வேண்டி ஒரு நிர்பந்தம் ஏற்படுகிற போது இதை செய்வது இன்னும் மன அழுத்தத்தைத் தான் தரும்.

  5. அந்தக் காலத்தில் வீட்டில் திண்ணைகள் இருக்கும். பொழுது போகும். இப்பொது அதை conference room என்று வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு கூட்டத்தின் போதும் இது முடிந்து வரும் போது என்ன கற்றுக் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்துடன் தான் போய்ப் பாருங்கள். அப்படிப் போனால் அங்கே போய் உங்கள் கணினிகளைத் திறக்க மாட்டீர்கள். (கொசுறு தகவல்: சில நேரங்களில் திண்ணைப் பேச்சுக்களிலும் நல்ல விவாதங்கள் நடப்பதுண்டு.)

  6. இந்த துறையில் தான் கவனச் சிதறல்கள் அதிகம். ஒரு பக்க புத்தகத்தைப் படிப்பதும், ஒரு கணினியில் 10 நிமிடம் வேலை செய்வதும் முற்றிலும் வேறானவை. கணினியில் வேலை செய்யும் போது, 10 நிமிடத்தில் பல முறை வேறு வேறு வேலைகளுக்குத் தாவி இருப்பீர்கள். எனவே, ஒரு நாளைக்கு, குறைந்தது ஒரு மணி நேரத்தையாவது, முழு ஈடுபாடு நேரம் என்று ஒதுக்கி வைத்து விடுங்கள். இந்த நேரத்தில், அலைபேசி, பிறரின் குறுக்கீடு போன்றவற்றைத் தவிர்த்து, அன்று செய்ய வேண்டிய முக்கியமான வேலையை செய்து முடியுங்கள். கவனச் சிதறல்களால் வேலையின் நேரம் அதிகரிக்கும். வேலைகளைத் தள்ளிப் போடுதல் அல்லது தாமதப்படுத்துதல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை தோல்விக்கு இழுத்துப் போகும் ஒரு விஷயம்.

  7. தூக்கத்தை ஈடு செய்ய இன்னும் கருவிகள் வரவில்லை. குறைந்தது ஒரு 7 மணி நேரமாவது தூங்குவது நல்லது. நீங்கள் தூங்கும் நேரத்தில், உங்கள் மூளை செய்யும் பல அற்புதங்களில் முக்கியமான விஷயம், நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை தொகுத்து பத்திரமாக சேமித்து வைப்பது. நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறீர்களோ, அந்த அளவு, அதை நினைவு வைத்திருக்க நல்ல தூக்கம் அவசியம்.

  8. எல்லா வெள்ளிக்கிழமை இரவும் குடிக்க வேண்டும் என்று நிர்பந்தித்துக் கொள்ள வேண்டியதில்லை. இதற்கு அழைக்கும் நட்புகளிடம் தாரளமாக பொய் சொல்லலாம். வீட்டில் வேலை, suffering from fever and headache என்று நாம் பல வருடங்களாக கற்று வைத்திருக்கும் விடுப்பு விண்ணப்ப வரிகள் போன்ற ஏதாவது.

  9. நமக்கும், குரங்குகள் இனத்திற்கும் (ape, chimpanzees) 97% ஜீன்கள் பொதுவானவை. நாமெல்லாம் ஒரே குட்டையின் மட்டைகள் தான் (higher primates என்று அறியப்படும் குழு). நாம் செய்யும் எளிய மற்றும் திரும்பத் திரும்பச் செய்யும் சில வேலைகளை (சில programming உட்பட) குரங்குகளை வைத்து செய்ய முடியுமா என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. உஷார்! இன்னும் சில பல ஆண்டுகளில், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்கும் போது, கொஞ்சம் தள்ளி உட்காருமாறு பெரிய, கருத்த ஒருவர் (!!) உங்களுக்கு சைகை செய்தால், கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள். என்ன, பல் தெரியாமல் புன்னைகைக்கும் அலுவலக கலாச்சாரமெல்லாம் அதுகள் கற்றுக் கொள்ள கொஞ்ச நாள் ஆகும்.

  10. கடைசியாக ஒன்று: குண்டூசி விக்கறவர் எல்லாம் தான் தொழில் அதிபர்ன்னு சொல்லிக்கிற மாதிரி, யார் வேண்டுமானாலும் எழுதக் கூடிய காலம் இது. நான் இப்படி சொல்வேன் என்று யாராவது ஒரு அமைச்சூர் வந்து புதியதாக ஒரு 10 புது விதிகள் சொல்லலாம். ஜாக்கிரதையாக இருங்கள். ஏனெனில், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com