எதிர்பாராதது
Posted on June 4, 2015 • 2 minutes • 407 words
எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத மனிதர்களிடம் இருந்து சில அனுபவங்கள் நமக்குக் கிடைப்பதுண்டு. அப்படித்தான் இதுவும்.
சமீபத்தில் நான் சந்திந்த ஒரு மனிதர்.
இவர் ஒரு மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். வயது ஒரு 50 – 55 இருக்கும். மாத சம்பளம் கொஞ்சம் குறைவு தான். இவரின் மனைவி இன்னொரு மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் தன் குடும்பத்தை பற்றி சொன்னதும் அதன் பின் எங்கள் உரையாடலும் (சுருக்கமாக) ..
—————————————————————————————–
“எ ஊரு திருநெல்வேலி பக்கம் சார். +2 தான் படிச்சிருக்கேன். அதுக்கப்புறம் இங்கே டிரைவர் வேலைக்கு வந்துட்டேன். வந்து ஒரு 4 – 5 வருஷம் கழிச்சு என் மிஸ்ஸஸ் எ பார்த்தேன். அப்ப அது +2 படிச்சிக்கிட்டு இருந்துச்சி. ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சு. அது காலேஜ் போய் படிக்கப் போறேன் ன்னு சொல்லிச்சு. அப்ப என் கூட இருந்தவனுங்க எல்லாம்: டேய், அது காலேஜ் எல்லாம் போய் உன்ன விட அதிகம் படிச்சுட்டா, அப்புறம் உன்ன மதிக்காதுடா ன்னு சொன்னத கேட்டு வற்புறுத்தி போய் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.
இப்போ எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்லா படிக்க வெச்சிருக்கோம். என் மச்சினன் (மனைவியின் அண்ணன்) நல்லா படிச்சார். Dubai ல ஒரு பெரிய கம்பெனி ல HR manager ஆ இருக்கார். அவரு வீட்டுகாரம்மா வோட அண்ணன் US ல Ph.D முடிச்சிட்டு ஒரு காலேஜ் ல Professor ஆ இருக்கார்.”
—
என்னிக்காவது, உங்க மிஸ்ஸஸ் எ மேல படிக்கறதுல இருந்து தடுத்துத்டோமே ன்னு வருத்தப் பட்டதுண்டா?
—
“அய்யோ .. நெறைய்ய தடவை சார். அப்போ தண்ணிய போட்டுட்டு கூட இருந்தவனுங்க பேச்ச கேட்டு இப்படி பண்ணிட்டமே ன்னு இப்போ வருத்தப்படறேன் சார். இப்போ கூட என் பொண்ணுங்க computer எல்லாம் கொண்டு வந்து கொடுத்து எதாவது படிக்க ஆர்வம் இருந்தா பண்ண சொல்றாங்க. அது தான் இனிமேல் எதுக்குன்னு சொல்லிருச்சு.”
—
உங்க மச்சான் மற்றும் அவங்க குழந்தைங்க உங்க வீட்டுக்கு வந்தா உங்களை எப்படி நடத்துறாங்க? உங்க குழந்தைங்க கூட அவங்க குழந்தைகள் எப்படி பழகுறாங்க?
—
“ரொம்ப பிரியமா இருப்பாங்க. கொஞ்ச வருஷம் நான் ஆனமலை இல் டிரைவரா இருந்தேன். அப்போ ரொம்ப சின்ன வீடு தான். ஆனாலும், லீவ் விட்டா, மாமா வீட்டுக்கு போகணும்னு சொல்லி எல்லோரும் ஒரு மாசம் வந்து இருப்பாங்க. அவங்க வீட்டுக்கு நாங்க போனா எல்லாருக்கும்
மாதிரியே எங்க குடும்பத்துக்கும் நல்ல மரியாதை தருவாங்க. இப்போ லீவ்ல வந்தாலும் எங்க வீட்ல வந்து கொஞ்ச நாள் தங்காம போக மாட்டாங்க..”
—————————————————————————————–
இவரிடம் நான் observe பண்ணிய விஷயங்கள்:
- நாம் இதுவரை செய்த விஷயங்களில். “இது சரி, இது தவறு” என்று தங்களுக்குள்ளாக செய்து கொள்ளும் “self introspection” என்பது, பெரும்பான்மையானவர்கள் செய்ய பயப்படும் விஷயம். நாம் செய்தது எல்லாமே சரி என்று சொல்லிக் கொள்வதையே பெரும்பாலும் விரும்புகிறோம். அது தான் நமக்கு comfortable கூட. அப்படி இருக்க, தன் தவறுகளை சொல்லி ..”இதெல்லாம் நான் கொஞ்சம் மாற்றி செய்திருக்கலாம்” என்று சொன்ன போது, அவரின் மேல் ஒரு மரியாதை வந்தது.
- வசதி, வேலை, இருக்கும் இடம், நட்பு வட்டம் போன்ற பல ஏற்றத் தாழ்வுகளின் ஊடே வாழும் இரு உறவினர் குடும்பங்கள், மற்றும் முற்றிலும் வேறான சூழ்நிலையில் வளரும் அவர்களின் குழந்தைகள், இந்த விஷயங்களைத் தாண்டி பரஸ்பரம் அன்பும், நட்பும், மரியாதையும் கொண்டிருப்பது, இவர்களின் principles மற்றும் mental maturity யும் தவிர வேறு காரணம் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” ,
“பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
“நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்”
என்னும் கணியன் பூங்குன்றனார் கருத்துக்களை இந்த மனிதரின் குடும்பம் பற்றி சொல்வதன் மூலம் எளிமையாக என் குழந்தைக்கு விளக்க முடிகிறது.